இந்தியாவின் பழமையான வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை தனி இடம் பெற்று வரும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.
சின்னஞ்சிறு வயதிலேயே பீகார் எனக்கு அறிமுகமாகி விட்டது. நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் பார்க்கத் திரையரங்குக்குச் சென்றால், படத்திற்கு முன், மத்திய அரசின் செய்தித் தொகுப்பு திரையிடப்படும். "பீகாரில் வெள்ளம்" எனக் கனத்த குரலில் ஒருவர் அம்மாநில மக்களின் துயரம் குறித்து விளக்கிக் கொண்டிருப்பார். வீட்டுக்குத் திரும்பியதும் தொடர்ந்து நாலைந்து நாட்கள், “பீகாரில் வெள்ளம்” என மிமிக்ரி செய்து கொண்டிருப்பது வழக்கம். பள்ளிக்கூடம் சென்றால் மவுரியர்கள் ஆண்ட மகத ராஜியம் பற்றியும் அசோகர் பற்றியும் பாடலிபுத்திரம், நாளந்தா பல்கலைக் கழகம் பற்றியும் படிக்கும்போது பாடத்திலும் பீகார் வரும். புத்த ஆலயமான 'விகார்' என்பதன் மரூவுதான் பீகார் எனவும் சொல்வர்.
இந்தியாவின் தேசியச் சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட ஸ்தூபியையும் தேசியக் கொடியின் சக்கரத்தையும் நாம் எடுத்துக் கொண்டது பேரரசர் அசோகரிடமிருந்துதான். அந்த அசோகரும் அவரின் முன்னோர்களான மவுரிய அரசர்களும் ஆண்ட காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த நாளந்தா பல்கலைக் கழகம் இருந்ததும் இன்றைய பீகாரில்தான். அசோகரின் ஆட்சியில் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரம்தான் இன்றைய பீகாரின் தலைநகரம் பாட்னா! போரின் கொடுமைகளையும் ரத்தச் சகதியையும் கண்டு போர் செய்வதையே விட்டு விட்ட அசோகரின் பழமையான வரலாறு கொண்ட பீகார் இன்று, ஏழ்மையிலும் சாதி ஆதிக்கத்திலும் ஆயுததாரிகளான குண்டர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. கட்சி வேறுபாடின்றிச் சாதி, மத வேறுபாடின்றிச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களுக்காகச் சிறையில் இருக்கின்றனர். அவர்களுள் ஆனந்த் மோகன், பப்பு யாதவ், முன்னா ஷுக்லா, பிரபுநாத் ஸிங், சகாபுதீன் போன்றோர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே வெளியே தேர்தலையும் வாக்கெடுப்பையும் கட்டுப்படுத்த முடிகின்றது.
பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார் கூடக் கிரிமினல் குற்றவாளிகளான தம் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். 2005ஆம் ஆண்டில் ஒரு வாக்குச்சாவடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாகிச் சூடு சம்பவத்திற்காகக் கடந்த மூன்றாண்டுகளாக தாவூத்நகர் சிறையில் இருக்கும் ரண் விஜய் ஸிங், மற்றும் கொலை, ஆள் கடத்தல், பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஸர்ஃப்ராஸ் ஆலம், நீரஜ் குமார் ஸிங், புச்சன் யாதவ் போன்றோருக்கும் கிரிமினல்களக இருந்து அரசியல்வாதிகளான மனோரஞ்சன் ஸிங், சுனில் பாண்டே, ஆனந்த் ஸிங் போன்றோருக்கும் ஓட்டு வேட்டையாடிதில் நிதீஷ் குமார் வெட்கப்படவில்லை என்பதே பீகாரின் இன்றைய சட்டம் ஒழுங்கு நிலைக்குச் சான்று.
இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் 141 பேர் கொலை, ஆள் கடத்தல் மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் ஆவர். இவர்களுள் 58 பேர் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்; 58 பேர் பாரதீய ஜனதாக் கட்சியினர்; 13 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் ஆவர். இவர்களுடன் காங்கிரஸ் 3, பாஸ்வானின் லோக் ஜனசக்தி 3, கம்யூனிஸ்ட் 1, சுயேட்சை 5 என மற்றவர்களும் இடம் பிடித்துள்ளனர். கொலைவழக்கில் சிறையிலிருக்கும் ரண் விஜய்ஸிங்கும் வெற்றி பெற்றுள்ளார். ஸர்ஃப்ராஸ் ஆலம், நீரஜ் குமார் ஸிங், புச்சன் யாதவ் போன்றோரும் கிரிமினல்களக இருந்து அரசியல்வாதிகளான துமல்ஸிங், சுனில் பாண்டே, ஆனந்த் ஸிங் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், ஒரு மாத காலம் ஆறு கட்டங்களாக நடந்து முடிந்து நிதீஷ் குமார் மூன்றாம் முறையாக முதல்வராகி விட்டார்.
இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் 1990 வரை - இடையே 11 மாதங்கள் ஜனதா கிரந்தி தள் ஆண்டதையும் ஆறு மாதங்கள் கர்பூரி தாகூரின் சோஷலிஸ்ட் கட்சி ஆண்டதையும் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஜனதாக் கட்சி ஆண்டதையும் கழித்துவிட்டால் - பீகாரை நீண்ட 40 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் 1990 ஆம் ஆண்டிற்குப் பின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதோடு தேய்ந்தும் போயிற்று. அதற்குக் காரணம் இன்றைய பீகாரின் தவிர்க்க முடியாத் தலைவர்களுள் ஒருவரான லாலுபிரசாத் யாதவே!
அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், பாட்னா பல்கலைக்கழக மாணவர் யூனியனின் செயலாளராகப் பொது வாழ்வைத் துவக்கி, ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜ் நாராயணன், கர்பூரிதாகூர் போன்ற சோஷலிஸ்ட் தலைவர்களால் கவரப்பட்டு அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு 29 வயதில் 1977 ஆம் ஆண்டில் ஆறாவது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் 89 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லாலு 1990 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தாமும் முதல்வராக இருந்து, 1950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் வழக்கால் முதல்வர் பதவியிலிருந்து விலகித் தம் மனைவி ராப்ரிதேவியையும் முதல்வராக்கி, பீகாரைத் தம் பிடிக்குள் வைத்திருந்தார்.
லாலு அரசியல் பயின்ற அதே சோஷலிஸ்ட் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணனிடமும் கர்பூரி தாகூரிடமும் அரசியல் பயின்றவர், பொறியியல் பட்டதாரியான நிதீஷ்குமார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய நிதீஷ்குமார் 2000ஆம் ஆண்டில் ஒரு வாரகாலம் பீகாரின் முதல்வராக இருந்தார். கடந்த 2005ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டணியால், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பிடித்துப் பீகாரின் முதல்வரானார்.
பீகாரின் மற்றொரு தலைவர் - தலித்களின் நாயகனான - ராம்விலாஸ் பாஸ்வானும் முன்னவர்களைப் போலவே ஜெ.பி. இடம் அரசியல் பயின்றவரே!
இத்தேர்தலில் போட்டி நடந்தது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் + ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்திக் கட்சிக் கூட்டணிக்கும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் + பாஜக கூட்டணிக்கும்தாம். ஐக்கிய ஜனதா தளம் 141 தொகுதிகளிலும் பா.ஜ., 102 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராஷ்டிரிய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் + பாஜக கூட்டணி 206 இடங்களை வென்றது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் + ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்திக் கட்சிக் கட்சி கூட்டணி 25 இடங்களைப் பெற்றது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. 34 பெண்கள் வென்றுள்ள போதிலும் இரு இடங்களில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ராபரி தேவி தோற்றுவிட்டார்.
லாலுவைப் போலன்றி, ஊழல்களில் சிக்காமல் பீகாரின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, மாநிலத்தில் சாலைகள் அமைத்ததையும் பாலங்கள் கட்டியதையும் கிராமப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமித்ததையும் ஓரிலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்ததையும் தம் ஆட்சியின் சாதனையாக நிதீஷ் குமார் சொல்லிக் கொள்ள முடிந்தது. அவரின் தன்னம்பிக்கையால் நரேந்திர மோடியையும் வருண்காந்தியையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் எனத் தடுக்க முடிந்தது. இப்பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் மோதல் ஏற்பட்ட போதிலும் நிதீஷ் உறுதியுடன் நின்றார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் ஸிங் என இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமும் முகாமிட்டு நிதீஷுக்கு எதிராகப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டும் அவர்கள் நிதீஷுக்கு எதிராகச் சுமத்திய குற்றச்சாட்டுகளை பீகார் மக்கள் பொருட்படுத்தாததும் சுமார் அறுபது தொகுதிகளில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் முஸ்லிம்கள் பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷுக்கு வாக்களித்திருப்பதும் அவரது மக்கள் செல்வாக்கிற்குச் சான்று.
பீகாரின் தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இரு தினங்களுக்கு முன் வரை அடக்கி வாசித்த கருணநிதி, “சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா” எனக் கர்ஜிக்கும் நிலை வந்துவிட்டது. காமராஜர் ஆட்சி, தனித்துப் போட்டி என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் இனி எந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு முயன்றாலும் அவர்கள் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டியதுதான். முலாயம்ஸிங், மமதா பானர்ஜி ஆகியோரும் இனி காங்கிரஸைப் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் சரியான கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதோடு மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையைக் களைந்து விட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தேவையற்ற மோதல் போக்கைக் கைவிட்டு, மக்களோடு கலந்து மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக் களம் இறங்க வேண்டும். மாநிலங்களில் குட்டித் தலைவர்களையும் குட்டி வைக்க வேண்டும்.










ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்தபின் 1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திராகாந்தி பல மாநில அரசுகளைக் கலைத்த போது மகாராஷ்டிர மாநில அரசையும் கலைத்தார். அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் சிவசேனா, காங்கிரஸுக்காக உழைத்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வரானவர் ஒரு முஸ்லிம்!. ஆம்! அப்துல் ரகுமான் அந்துலே!
மகாரஷ்டிரமாநில அரசு, பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்களை வெளியிடும் திட்டத்தில், “Riddles in Hinduism” எனும் அம்பேத்கரின் ஆக்கத்தை வெளியிட்டது. உடனே சிவசேனா களத்தில் இறங்கியது. அம்பேத்கரின் நூல் இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் அவமதிப்பதாகக் கூறி உடனே அந்நூலைத் தடை செய்யுமாறு பெரும் கண்டனப் பேரணியை நடத்திய சிவசேனா, அம்பேத்கரையும் தலித்களையும் இழிவு படுத்திப் பேசிக் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை(!) செலுத்தியது..