அணுசக்தியைப் பயன்படுத்தினால்தான் ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாக அல்லது வல்லரசாகத் திகழ முடியும் என்ற எண்ணத்தினாலேயே பல நாடுகளும் அணு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அண்மைக் காலத்தில் ஈரான் நாடு, தன் மின் தேவைக்காக அணு மின் நிலையம் ஒன்றை நிறுவி உலைகளை இயக்க முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஈரான் அணு ஆற்றலைப் பெற்றுவிடக் கூடாது என ஐ நா மூலம் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவு நாடான ஐக்கிய அரபு அமீரகங்கள் நாடு தனது மின் தேவைக்காக அணு மின் நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் மின்சார உற்பத்திக்காகப் புனல் மின் நிலையம், அனல் மின் நிலையம் போன்றவை செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட அணுமின் நிலையங்கள் அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதற்கெனத் துவங்கப் பட்டதுதான் இந்திய அணுமின் கழகம்(Nuclear Power Corporation of India Ltd -- N P C I L). அக்கழகத்தின் கீழ் தாராப்பூர் Tarapur, (மகாராஷ்டிரம்), ராவட்பட்டா Rawatbhata, (ராஜஸ்தான்), நரோரா Narora, (உத்தரப் பிரதேசம்), கக்ரபார் Kakrapar (குஜராத்), கல்பாக்கம் Kalpakkam (தமிழ் நாடு), கைகா Kaiga, (கர்நாடகா) போன்ற இடங்களில் அணு மின் நிலையங்கள் உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்படத் துவங்கும். அந்த வரிசையில்தான் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் திறன் கொண்ட அணு மின் நிலையம் அமைய உள்ளது. ஜெய்தாப்பூரில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தைப் சிவசேனா முன் நின்று நடத்துகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்ள அணுமின் உலையே தீர்வு என அரசு சொல்கிறது.
முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011043016068/hidden-demon



