சனி, 29 ஜனவரி, 2011

சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

தேசபக்தியை மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் சங்பரிவார், அதை உலகுக்கு உணர்த்துவதற்காகக் காஷ்மீரில் குடியரசு நாளில் மூவண்ணக் கொடியேற்றுவதற்காகப் பல இடங்களிலும் இருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு சென்றது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆர் எஸ் எஸ் அபிமானிகள் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு -  'அது' இல்லை என வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.

காஷ்மீரிலுள்ள மசூதி ஒன்றின்மீது பலவந்தமாக கொடிகட்டும் பாஜக, விஹெச்பி தொண்டர்கள்"ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல" எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.

பீஜேபியின் காஷ்மீர் யாத்திரை மீண்டும் அதை நிரூபித்து விட்டது.

சனி, 22 ஜனவரி, 2011

தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது எனப் பம்மாத்துப் பண்ணிக்கொண்டிருப்பவை இந்துத்துவா பேசும் சங்பரிவார் அங்கங்கள்.  தேசம் என்பது வெறும் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பரப்போ தொழிற்சாலைகளோ விளை நிலங்களோ அல்ல; மாறாக மக்களும் அவர்களது நாகரீகமும் பண்பாடும் நிறைந்த விழுமியங்களே என நம் தளத்தின் முதல் அலசலில்  சொல்லியிருந்தேன். அந்த விழுமியங்களை விலைபேசிவிட்டு இன்னும் நாங்களே தேசபக்திக்குச் சொந்தக்காரர்கள்; இந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள், நாத்திகர்கள் எல்லோரும் அந்நியநாட்டு விசுவாசிகள் எனச் சங்பரிவார் சொல்வது இனியும் செல்லுபடியாகாது.

ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல. இந்த மாபெரும் தேசத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக முகத்தின்மீது கரி பூசும் வேலையையே அவை செய்து வந்துள்ளன..
முழுமையாக வாசிக்க: தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

சனி, 15 ஜனவரி, 2011

வானத்திலிருந்து குதித்ததா சி.பி.ஐ. - 2

ஆருஷி மற்றும் ஹேம்ராஜின் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் -- ஆனால் சந்தேகத்தின் நிழலை டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மீது  சாய்த்துவிட்டு -- வழக்கை மூட முனையும் சி.பி.ஐ.யிடம், 'வழக்கை மூட ஏன் இந்த அவசரம்' என வினவிய காஜியாபாத் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற மாஜிஸ்திரேட் ப்ரீதி சிங், இம்மாதம் (ஜனுவரி) 21 ஆம் தேதிவரை இதன் மீதான விசாரணையை ஒத்திவைத்து, வழக்கை மூடும் அறிக்கை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆருஷியின் பெற்றோருக்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி ஆருஷியின் நண்பர்களும் உறவினர்களும் மத்திய டில்லியின் ஜந்தர்மந்தர் முன் ஆருஷியின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுவிசாரணை கோரியுள்ளனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் Polygraph, Narco Analysis, Brain maping என விதம் விதமான உண்மை கண்டறியும் சோதனைகள்  நடத்தப்பட்ட பின்னரும் உண்மையான குற்றவாளி அல்லது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.ஐ. வழக்கைக் கை கழுவுகின்றது எனில், சி.பி.ஐ. என்ற மாயை தகர்கிறது என்றுதான் பொருள். இப்படித்தான் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கிலும் சி.பி.ஐ. கை கழுவ முனைந்தது.

கோட்டயத்தில் இருக்கும் 'பயஸ் 10 கான்வெண்'டில் தங்கியிருந்த, கோட்டயம் பி.சி.எம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ப்ரிடிகிரி வகுப்பு மாணவியான கன்னியாஸ்திரி அபயா, 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் திடீரெனக் காணமல் போனார். கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் "காணவில்லை" என வழக்குப் பதிவு செய்தனர். தேடுதலின்போது அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.வி. அகஸ்டின் முன்னிலையில் அந்தக் கான்வெண்டின் காம்பவுண்டுக்குள் இருக்கும் கிணற்றில் இருந்து, 19 வயதேயான அபயாவின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. கோட்டயம்  மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் பிணப்பரிசோதனை நடத்தினார். அபயாவின் மரணம் தற்கொலை என முடிவு செய்து அறிவிக்கபட்டது.

ஆனால் மார்ச் மாதம் 31ஆம் தேதி அமைக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டக்குழு, கேரள மாநில முதல்வர், இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி, காவல்துறைத் தலைவர் என அனவருக்கும் இவ்வழக்கைச் சரியான முறையில் விசாரிக்கும் படி, கோரிக்கை வைத்தது 1992 ஏப்ரல் மாதம், 7 ஆம் நாள் வழக்கு கேரளக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் தனது விரிவான புலன் விசாரணையின் முடிவில் "அபயா தற்கொலை செய்து கொண்டதாக" 1993 ஆம் ஆண்டு  ஜனுவரி 30 ஆம் நாள் வழக்கை முடித்தது. பொதுமக்கள் போராட்டத்தாலும் மக்கள் குழு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாலும் கேரள அரசு சி.பி.ஐ. விசாரணையக் கோரியது.

முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011011513020/cbi-has-not-come-straight-from-the-heaven

சனி, 8 ஜனவரி, 2011

வானத்திலிருந்து குதித்ததா சி.பி.ஐ.?

கடந்த வாரத்தின் பரபரப்பு நிறைந்த செய்திகளில், தன் விசாரணையை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ. சொன்ன இரு வழக்குகள் பற்றிய செய்திகளும் அடங்கும்.

ஒன்று போஃபோர்ஸ் ஊழல் வழக்கை முடித்துக் கொள்வதாக சி பி ஐ சொன்னது.

அடுத்தது ஆருஷி கொலை வழக்கைத் தொடர முடியாமல் முடித்துக் கொள்வதாகச் சொன்னது.

மாநிலக் காவல் துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவு புலனாய்வு செய்ய இயலாத அல்லது அப்பிரிவு புலனாய்வு செய்து தந்த முடிவுக்கு மாறாக மீண்டும் விசாரணை தேவைப்படும் வழக்குகளில் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு அம்மாநில அரசுகள் உத்தரவிடும். அதிலும் நம்பிக்கையிழக்கும்போது மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணையை மாநில அரசுகள் கோரும். சிக்கலான சில வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களும்  பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கூட "சி.பி.ஐ. விசாரணை"யைக் கோருவதைக் கண்டு வருகிறோம்.

திரைப்படங்களிலும் சி.பி.ஐ. விசாரணையில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டனை அடைவர் எனக் காட்டப்படும். மலையாளத்தில், இயக்குநர் கே. மது, கதை வசன ஆசியர் எஸ்.என்.ஸ்வாமி, நடிகர்கள் மம்முட்டி, முகேஷ், ஜெகதி ஸ்றீகுமார், ஜனார்தனன் உட்பட ஒரே குழு, சி.பி.ஐ. புலனாய்வுத் தொடரில் நான்கு படங்களை வெளியிட்டது. அந்த அளவுக்கு சி.பி.ஐ. "மீமானிட ஆற்றல்கள்" கொண்ட புலனாய்வு அமைப்பாக மக்களால் கருதப்படுகிறது.

காவல்துறையின் இதரப் பிரிவினருக்கு இல்லாத சில சிறப்பு அதிகாரங்களும் விசாரணை வசதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்பதைத் தவிர  அவர்களும் காவல்துறையினரே! மாநிலக் காவல் துறையிலிருந்தே திறமையானவர்கள் எனக் கருதப்படுபவர்களைத் தெரிந்தெடுத்து சி.பி.ஐ.யில் இணைப்பர். சி.பி.ஐ.யாலும் சில குற்றங்களை நிரூபிக்க முடியாமல் வழக்கு மூடப்படும். அதற்குச் சான்றாகவே இவ்விரு செய்திகளும் வந்துள்ளன.

இதாலியத் தொழிலதிபர் குத்ரோச்சிக்கு எதிராக எவ்விதச் சான்றாதாரங்களும் இல்லாததாலும் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க முடியாததாலும் போஃப்பர்ஸ் வழக்கை மூட விரும்புவதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

அதுபோலவே ஆருஷி கொலை வழக்கும் சி.பி.ஐ.யால் மூடப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் பிரபலமான பல் மருத்துவர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார் தம்பதியினரின் பதினான்கு வயதான மகள் ஆருஷி தல்வார், 2008ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி காலையில் அவர்களது "ஜல்வாயு விஹார்" ஃப்ளாட் இல்லத்தில் கழுத்தறுபட்ட நிலையில் பிணமாகக் காணப்பட்டாள். உள்ளூர்க் காவல்துறை விரைந்து வந்து விசாரணையைத் துவக்கியது. வீட்டில் தங்கியிருந்தவர்களைப் பற்றிய விசாரணையில், நேப்பாளி வேலைக்காரனான 45 வயதுடைய ஹேம்ராஜ் காணமல் போயிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவனைக் கொலையாளியாக்கி, அவனைப் பிடிக்க நேப்பாளத்துக்கு விரைந்தது ஒரு குழு. அவனைக் கைது செய்ய உதவும் தகவல் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் எனக் காவல்துறை அறிவிப்பும் செய்தது.

முறைப்படி பிணப்பரிசோதனை முடிந்து மறுநாள் ஆருஷியின் உடல் எரிக்கப்பட்டு ஹரித்துவாரில் கங்கை நதியில் சாம்பலும் கரைக்கப்பட்டது. ஆருஷியின் மரணத்துக்கு துக்கம் விசாரிக்கத் தல்வாரின் வீட்டிற்குத் தல்வாரின்  உறவினருடன் வந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இரத்தக்கறை இருப்பதைக் கண்டார். காவல் துறை வந்து ரத்தக்கறையைப் பின் தொடர்ந்துசென்று மொட்டை மாடியை அடைந்தபோது, தூக்கிவாரிப் போட்டது போல அதிர்ந்து போனது! காவல்துறை கண்டது உயிரற்ற ஓர் உடலை! காவல் துறையைப் பெரும் அதிர்ச்சியடையச் செய்த பிணம் வேறு யாருடயதுமன்று; காவல்துறையால் கொலைக் குற்றத்துக்காகத் தேடப்பட்டு வரும் ஹேம்ராஜின் பிணம். திகில்ப்பட மன்னன் ஹிட்ச்காக்கின் படங்களில் வரும் அதிரடித் திருப்பம் போலக் கொலையாளியைப் பிடிக்கக் காவல் துறை வலை விரித்துக் காத்திருந்த நிலையில் கொலையாளி எனத் தேடப்படும் ஒருவனே கொலையாகிக் கிடப்பதைக் கண்டு, யார் தலையில் குற்றத்தைச் சுமத்தி வழக்கை முடிப்பது எனத் திகைத்துப் போனது நொய்டா காவல்துறை.

ஒரு குழப்பமான குற்ற விசாரணையின் முடிவில் இரட்டைக் கொலைக் குற்றத்துக்காக ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வார் கைது செய்யப்படுகிறார். அதிர்ந்து போன ராஜேஷின் மனைவி, நொய்டா காவல் துறை பொய் வழக்குப் போட்டதாகக் கூறி உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியிடம் சி.பி.ஐ. விசாரணை வேண்டி முறையிடுகிறார். அதன் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கின் விசாரணையை ஏற்றெடுத்தது.

வேலைக்காரன் ஹேம்ராஜின் அறையில் கண்டெடுக்கப்பட்ட விஸ்கி பாட்டிலில் இருந்த கைரேகையையோ இறந்தவர்களின் உடல்களில் பதிந்திருந்த கைரேகைகளையோ சேகரிக்காமல், அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொள்ளாமல், குற்றச் செயல் நடந்த இடத்தில் செய்தியாளர்களை அனுமதித்துக் குற்றப்புலனாய்வுக்கு உதவும் அடிப்படைச் சான்றுகளைப் பாதுகாக்காமல் அழித்துவிட்டதாகவும் போஸ்ட்மார்டமும் முறைப்படி ஒழுங்கான முறையில் நடத்தவில்லை எனவும் நொய்டா காவல்துறை மீது குற்றம் சுமத்திய சி.பி.ஐ, தன் முதல் கட்ட விசாரணையில், ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராஜேஷ் தல்வாரின் பல்மருத்துவமனைக் கம்பவுண்டரான நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணாவைக் கைது செய்தது.

தொடர்ந்து தல்வார் குடும்ப நண்பரின் வீட்டு நேப்பாளி வேலைக்காரன் ராஜ்குமாரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுகிறான். டாகடர் தம்பதியர் உட்பட அனைவரும் சி.பி.ஐ.யால் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிணையும் மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஜ்தக் இந்தித் தொலைக்காட்சி, விஜய்மண்டல் என்பவனும் இந்த இரட்டைக் கொலையில் ஈடுபட்டதாகப் பரபரப்புச் செய்தி வெளியிட்டது. தல்வாரின் அண்டை வீட்டு வேலைக்காரனான விஜய் மண்டலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுகிறான். விஜய்மண்டலிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான தகவலை அடுத்து அவன் மீது ஐ.பி.சி. 302, 201, 120(B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்படுகிறது. ராஜ்குமார், விஜய் மண்டல் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆரூஷியைக் கற்பழித்துக் கொன்றதாகவும் அக்கொலை வெளியாகாமல் இருக்க, வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் கொலை செய்ததாகவும் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. அதுவரை ராஜேஷ் தல்வார் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க எவ்விதச் சான்றும் சி.பி.ஐ.யின் கைவசம் இல்லா நிலையில் 2008 ஜூலை 12 ஆம் தேதி அவர் பிணையில் விடுதலையாகிறார்.

இதனிடையே, இவ்வழக்கு அரசியல் தளத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. டாக்டர் ராஜேஷ் தல்வாரைக் காப்பாற்றவே கிருஷ்ணா மற்றும் ராஜ்குமார் எனும்  இரு நேப்பாளிகளைக் கைது செய்ததாக நேப்பாள நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப் போவதாக நேப்பாள அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார். விஜய் மண்டலிடமிருந்து கொலைக்கான ஆயுதம் எதையும் கைப்பற்ற முடியாமல் திகைக்த சி.பி.ஐ. முட்டுச் சந்தில் நின்றது.

கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கை மூடுவதாக நீதிமன்றத்தில் சொன்னது. கைது செய்யப்பட்டுச் சித்திரவதைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு உலகின் முன் கொலையாளிகளாக இழிவு படுத்தப்பட்ட கிருஷ்ணா, ராஜ்குமார் மற்றும் விஜய் மண்டல் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் ஆருஷியின் தந்தை ராஜேஷ் மீது மட்டுமே குற்றத்தின் சந்தேக நிழல் படிந்திருப்பதாகவும் ஆனால் குற்றத்திற்கான நோக்கம் தெளிவாகவில்லை என்றும் சொல்லி வழக்கை மூடக்கோரியது சி.பி.ஐ.

இவ்வழக்கு விசாரணையின் போது ராஜேஷ் தல்வாருக்கும் மற்றொரு பெண் மருத்துவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் ஆருஷி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகளால் ஊடகங்களுக்குச் செய்திகள் கொடுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டதற்கு என்ன விலை?

ஆருஷி வழக்கைப் போலவே சி.பி.ஐ. பின்வாங்க முயன்றும் முடியாமல் தவிக்கும் மற்றொரு வழக்கு நாடாளுமன்றத்தையும் கேரள சட்டசபையையும் உற்றுநோக்க வைத்த "ஸிஸ்டர் அபயா கொலை வழக்கு".

அது அடுத்த வார அலசலில்....

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)

சனி, 1 ஜனவரி, 2011

பி.ஏ.சி.யும் ஜே.பீ.சி.யும்

அலைக்கற்றை (2 ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள் ஜே.பீ.சீ. (நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கைக் குழு)தான் வேண்டும் என்று அடம் பிடித்து நிற்கின்ற வேளையில் பிரதமர் மன்மோகன்சிங் தாம் பீ.ஏ.சீ. யின்(பொதுக்கணக்குக் குழு) முன் ஆஜராவதாகச் சொல்லியுள்ளார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவரும் பீ.ஜே.பி.யின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான முரளிமனோஹர் ஜோஷி இதற்கு ஆதரவாக உள்ள நிலையில், பீ.ஜே.பி.யின் மற்ற தலைவர்கள் இதற்கு எதிராக உள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி மு க கலங்கி நிற்க வேண்டிய தருணத்தில் பீ.ஜே.பி குழம்பி நிற்கும் சூழ்நிலை உருவாகி இருப்பது அரசியல் திருப்பத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் நோக்கர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தப்படி உருவாக்கப்பட்ட "பி.ஏ.சி" எனப்படும் பொதுக்கணக்குகள் குழு, இந்தியா குடியரசான பின் அவைத்தலைவருக்குக் கட்டுப்பட்ட நாடாளுமன்றக் குழுவாக உருமாற்றம் பெற்றது. நாடாளுமன்ற நடவடிக்கை விதி 308 இன் படி ஆண்டுக்கொரு முறை உருவாக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு, மக்களவையின் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையின் 7 உறுப்பினர்களும் அடங்கியது. அதன் தலைவராக 1967 ஆண்டிற்குப் பின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தெடுக்கப்படும் மரபால் இப்போது பீ.ஜெ.பீ.யைச் சேர்ந்த முரளிமனோஹர் ஜோஷி தலைவராக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செலவுகள் முறையாக அவ்வினங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுக் கணக்குகள் குழு சரிபார்க்கும். தணிக்கைக் குழுத் தலைவர் (சி & ஏ. ஜி) ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்கும் அறிக்கையைப் பரிசீலித்து, அதில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில், பொருளாதார முறைகேடுகள் நடைபெற்றனவா, அனுமதிக்கப்பட்ட நிதி முறையற்றுச் செலவிடப் பட்டுள்ளதா என விசாரிக்கவும் இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

பாரதீயஜனதா கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், 'பொதுக்கணக்குகள் குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது; அக்குழு கணக்கு முறைகேடுகளை மட்டுமே ஆராய முடியும். ஸ்பெக்ட்ரம் விவகாரம் கணக்கு முறைகேடு அன்று; அது அரசின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தவறு. அதை நாடாளுமன்றக் கூட்டுக்குழு மட்டுமே விசாரிக்க முடியும்; ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுதான் வேண்டும்' எனக் கோருகின்றன.

பி.ஏ.சி. தலைவராக உள்ள முரளி மனோகர் ஜோஷி, பிரதமர் தம் குழுவின் முன் ஆஜராகப் போவதாகக் கடிதம் எழுதிய உடன், ஆர்வக்கோளாறில் பி. ஏ.சி. விசாரணையே போதும் எனச் சொல்லிவிட்டார். இது பீ.ஜே.பி.க்குள் ஒரு குலுக்கத்தை ஏற்படுத்தியதைத் தாமதமாக உணர்ந்த முரளி மனோஹர் ஜோஷி, கட்சித் தலைவர் கட்காரியைச் சந்தித்து, பி.ஏ.சி. தலைவர் என்ற முறையில் தாம் அப்படிக் கூறியதாகவும் ஜே.பீ.சி.யே தீர்வு என்பதுதான் தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளது பீ.ஏ. சி.யிலும் பீ.ஜே.பி.யிலும் அவர்மீதுள்ள நம்பகத்தன்மையை ஐயப்படுவதற்கு வழிவகுத்து விட்டது. இப்படி ஒரு நிலைமையையே காங்கிரஸும் விரும்புகிறது.

காங்கிரஸ் ஏன் ஜேபீசி வேண்டாம் என்கிறது?

ஆண்டுக்கொரு முறை அமைக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு போன்று ஜே.பீ.சி. அமைத்துவிட முடியாது. ஜே.பீ.சி. என்பது ஒரு தேவைக்காக அமைக்கப்படும் தற்காலிகக் குழுவாகும்.ஆனால் அதன் அதிகாரங்கள் பொதுக்கணக்குகள் குழுவை விட அதிகமாகும்.அரசுத் துறைகளின் கோப்புகளையும் ஆவணங்களையும் பரிசோதிக்கவும் துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முறைகேட்டில் பலன் பெற்ற தொழிலதிபர்களையும் விசாரிக்கவும் அதிகாரம் உண்டு. பிரதமரைக்கூட இக்குழு அழைத்து விசாரிக்க முடியும். நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் பெற முடியும்.

கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களவையின் இரு மடங்கும் மாநிலங்களவையின் ஒரு மடங்கும் அடங்கிய ஜே.பீ.சீ.யில் தனியாக காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்காது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள ஜே.பீ.சீ.யின் விசார ணைகள் ரகசியமாவே நடைபெற்றாலும் சில உறுப்பினர்கள் அவ்வப்போது ஊடகங்களுக்குச் செய்தியைக் கசிய விடுவதன் மூலம் ஆளுங்கட்சியை நெருக்கடிக்குள்ளாக்கலாம். ஜே.பீ.சி.மட்டுமே தேவை என எதிர்க்கட்சிகள் கோருவதிலும் ஆளுங்கட்சி ஜே.பீ.சீ. அமைக்க மறுப்பதிலும் நாட்டு நலன் என்பதைவிட அரசியல் நலனே மேலோங்கி இருக்கிறது என்பது கவலைக்குரியது.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)