சனி, 25 டிசம்பர், 2010

முள்முனையில் கருணாநிதி

அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) விவகாரம் கருணாநிதி நினைத்ததை விடப் பூதாகரமாகி விட்டது. ராசாவின் ராஜினாமாவுடன் பிரச்சனை ஓயும் எனத் தப்புக்கணக்குப் போட்டிருந்தார் கருணாநிதி.

2 ஜி ஸ்பெக்ட்ரம்  முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சனையைத் துவக்கிய உடனேயே ராசா பதவியைத் துறந்திருந்தால் அப்போதே அடங்கியிருக்க வேண்டிய விவகாரம் கருணாநிதியின் தப்புக்கணக்கால் இன்று மன்மோகன்சிங்கின் பிரதமர் பதவியையே காவு கேட்கும் அளவுக்கு வந்து விட்டது. இரு நாட்களுக்கு முன் பீ.ஜே.பி.யினர் நடத்திய தேசீய ஜனநாயகக் கூட்டணிப் பேரணியில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்காவிட்டால் பிரதமர் தம் பதவியை ராஜினாமாச் செய்யட்டும் என  அறைகூவல் விடுத்துள்ளனர்.

துவக்கத்தில் இருந்தே "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்தவை அனைத்தும் பிரதமருக்குத் தெரியும்"என்றே ராசா கூறிவந்தார். பிரதமரும் ராசாவுக்கு ஆதரவாகவே கருத்துக் கூற்யிருந்தார். இதனால் அச்சம் தவிர்த்த கருணாநிதியும் ராசாவும் பதவி துறக்கும் பேச்சுக்கே இடமில்லை என உறுதியாகச் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் நாடாளுமன்றத்தை முடக்கிய பின், மத்திய அரசின் கடினமான தாக்கீதுக்குப் பின், அமைச்சராக இருந்த  ராசாவை முன்னாள் அமைச்சர் ஆக்குவதற்குக் கருணாநிதி ஒப்புதல் அளித்தார்."நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி விடக்கூடாது என்ற நல்லெண்னத்தில்தான் ராசாவின் ராஜினாமா" எனச் சப்பைக்கட்டு, கருணாநிதியால் சொல்லப்பட்டது.

விடாது கருப்பு என்பது போல,ராசா பதவி விலகினாலும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடுவதாக இல்லை. பொதுக் கணக்குக் குழுவின் முன் நான் ஆஜராவேன் என மன்மோகன்சிங் சொன்னதைப் புறந்தள்ளிவிட்டு, ஜே.பீ.சீ. தான் வேண்டும் என அடம்பிடித்து நிற்கின்றன.

இதனிடையே உச்ச நீதிமன்றம்  இவ்விஷயத்தில் தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ. ரெய்டுகள் தொடங்கியுள்ளன. இதில்தான் கருணாநிதி ஆடிப்போயுள்ளார்.

தம் இரண்டாம் வீட்டுடன் நீரா ராடியா நடத்திய உரையாடல் ஒலிநாடா எழுப்பிய சூட்டைக் குறைக்கலாம் என  மலையேறிய கருணாநிதியை அங்கும் நிம்மதியாக இருக்க விடாமல் மலையிறங்க வைத்துவிட்டது சி.பி.ஐ. ரெய்டுச் செய்தி.

ராசாவின் வீடுகளில் மட்டுமின்றி, அவரின் உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், அவரிடம் பணிபுரிந்த அதிகாரிகள் எனப் பலரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் தமிழ் மையமும்  சி.பி.ஐ சோதனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.அடுத்த சோதனை இலக்குக் கனிமொழியின் வீடும் அலுவலகமும்தாம் என்பதை ஊகிக்கப் பெரும் சிந்தனைத் திறன் தேவையில்லை.

சிபிஐ ரெய்டைத் தொடர்ந்து ராசாவை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நேரத்தில் அவர் அப்பலோவுக்குச் சென்றது "கைதுக்கு அஞ்சி நாடகமாடுகிறார்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது தவிர்க்க முடியாததாகி விட்டது. ராசாவின் கைது இன்றில்லாவிட்டாலும் நாளை நடப்பது உறுதி. ராசாவின் கைது திமுக - காங்கிரஸ் கூட்டணி மரத்தை முறித்துப்போட விழும் கோடரி எனலாம்.

ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் டெல்லியில் நடத்திய 'ப்ளீனரி' மாநாட்டில் கூட்டணி பற்றிய பேச்சுகள் எழவில்லை என்றாலும்  ஊழலுக்கு எதிராக சோனியாகாந்தி விடுத்த அறைகூவல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என அவர் ஆணித்தரமாகக் கூறியதைக்  காங்கிரஸில் இருக்கும் இளங்கோவன் போன்ற தி மு க எதிர்ப்பாளர்கள் தமக்கு ஆதரவான சமிக்ஞையாகவே கொள்கின்றனர்.

அதே சமயம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர் காங்கிரஸாரைச் சந்தித்த ராகுல்காந்தி காங்கிரஸ் கூட்டணி  பற்றி எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு தி மு க உடனான கூட்டனியை முறித்துக்கொள்வது அறிவுடைமையாகாது என்ற கருத்தும் காங்கிரஸ் மேலிடத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கும் விசாரணையும் ரெய்டுகளும் இப்போது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடப்பதால் வழக்கில் யார்மீதும் இதுவரை காவல்துறை கைது நடவடிக்கையோ நீதிமன்றத் தண்டனையோ இல்லாத நிலையில், அவசரப்பட்டு ஒரு உறுதியான கூட்டாளியைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

அதேபோல, தி.மு.க.வின் உறவை முறித்துக் கொண்டால் தனியாகவோ அல்லது சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணியாகவோ தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அல்லது ஜெயலலிதாவுடன் கூட்டணி  வைக்க வேண்டும். தனியாக நின்றால் கவுரவமான தோல்வி கிடைக்கும்; அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து நின்றால்  கவுரவமே கிடைக்காது எனவும் காங்கிரஸில் சிலர் கருதுகின்றனர். மேலும்  அ.இ.அ.தி.மு.க.வுடன்    கூட்டணி என்று முடிவான பின் காங்கிரஸ்  கேட்கும் தொகுதிகளின்  எண்ணிக்கை மற்றும் விரும்பிய தொகுதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ராசாவைப் பதவி விலக்கினால் தாம் ஆதரவு தருவதாக ஜெயலலிதா சொன்னதைப் புறக்கணித்த காங்கிரஸ் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. உறவை நாடிப்போனால் ஜெயலலிதாவின் கை மேலோங்கியிருக்கும் நிலையில், வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் குறிப்பறிந்து காங்கிரஸ் கட்சியின் தலையில் கட்ட   அ.இ.அ.தி.மு.க. முயலும்.

ஒரு பக்கம் குடும்பத்தில் நடைபெறும் பனிப்போர், மறுபக்கம் சி.பி.ஐ ரெய்டு என ரொம்பவே மனம் நொந்து இருக்கும் அரசியல் சாணக்கியர் கருணாநிதி, "ராசா குற்றம் செய்ததால் நீக்கப் பட்டார்" என்று ராசாவை கழட்டி விட்டு விட்டுக்  காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் கூட்டணியை முறிப்பதால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. திமுகவுக்கே இழப்பு அதிகம். திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என்பதே கேள்விக் குறியாகி விடும்.

ஆனால் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள சோனியாவின் மவுனம் இவ்விஷயத்தில் கருணாநிதியை முள் முனையில் நிறுத்தியிருப்பது மட்டும் உண்மை.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)

சனி, 18 டிசம்பர், 2010

கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட்?

ஜீவாவைப் பற்றி எழுதுவதாகக் கடந்த வார அலசலில் சொல்லியிருந்தேன். கடந்த அலசலுக்கு வந்த பின்னூட்டங்கள் கருணாநிதியைத் தன்னலமற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டதைக் கண்டித்திருந்தன. நாட்டு நலனுக்குத் தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர்களுடன் ஒப்பிடும்போதுதான் கருணாநிதியின் தன்மையும் தகைமையும் பொதுமக்களுக்குத் தெளிவாகும் என்பதாலேயே அவ்விதம் ஒப்பிடப்பட்டது. எனவே இவ்வாரம் ஜீவாவின் வாழ்வில் இருந்து சில குறிப்புகளுடன் கருணாநிதியை ஒப்பிடும் தேவை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் நம்பமாட்டார்கள் எனத் தெரிந்தும்கூடக் கருணாநிதி வாய்ப்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தம்மைக் "கம்யூனிஸ்ட்" என அழைத்துக் கொள்வார். ஆனால் கம்யூனிஸ்ட்களின் வாழ்வின் நிழல்கூட அவரிடம் இல்லை என்பதை நிகழ்காலம் காட்டிக் கொண்டிருக்கிறது.

உலகில் தேர்தல் மூலம் பொதுமக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும்  இந்தியாவின் மாநிலங்களில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் மக்கள் அரசு எனவும் வரலாற்றில், "முதல்" இடம் பிடித்த பெருமை பெற்றது, "காம்ரேட் ஈ.எம்.எஸ்" எனப் பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் எளங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாடு' (ഏലങ്കുളം മനക്കല്ശങ്കരന്നമ്പൂതിരിപ്പാട്) தலைமையில் 1957 ஆம் ஆண்டு அமைந்த அரசு.

ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஈ.எம்.எஸ்., அப்போது கொச்சி - ஆலப்பாட்டில் ஒரு சிறு வீட்டில் தம் மனைவி ஆர்யா அந்தர்ஜனத்துடன்  வாழ்ந்து கொண்டிருந்தார். முதலமைச்சராகப் பதவியேற்பதற்காகத் தலைநகர் திருவனந்தபுரத்துக்குப் புறப்படும் நேரம், ஈ.எம்.எஸ். அணிவதற்காகச் சட்டையை எடுத்துக் கொண்டு வந்தார் ஆர்யா! இஸ்திரிப் பெட்டியைக் கண்டிராத அச்சட்டையை அணியும் நேரத்தில், "இச்சட்டையில் பொத்தான் இல்லையே?" என வினவினார் ஈ.எம்.எஸ். "இதைக் குத்திக் கொள்ளுங்கள்" என ஆர்யா தாம் அணிந்திருந்த பிளவுஸில் குத்தியிருந்த ஒரு 'ஊக்கை'க் கழற்றிக் கொடுத்தார். இந்தக் காட்சிக்குச் சாட்சியாய், அவ்வீட்டினுள் நுழைந்த ஆலப்பாட்டு பிரமுகர் வேலாயுத மேனோன், "முதலமைச்சராகப் போகும் ஆள் அணிவதற்குரிய சட்டை இதுதானா?" எனக்கடிந்து கொண்டு, அச்சட்டையை எடுத்துக் கொண்டுபோய்ப் பொத்தான் தைத்து இஸ்திரி  போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

திருவனந்தபுரத்தில், பதவிப்பிரமாணம் எடுக்க ஈ.எம்.எஸ். ஆயத்தமான கடைசி நேரத்தில் அவர் அணிந்திருந்த பழைய கைக்கடிகாரம் மணி காட்டுவதை எப்போதோ நிறுத்தியிருந்ததைக் கண்டனர் தோழர்கள். பதவியேற்பு நிகழ்ச்சியைக் கட்சிப் பத்திரிகையில் வெளியிடுவதற்காகச் செய்தியாளராக வந்திருந்த பவனன் என்பவரின் பழைய ஹிந்துஸ்தான் கைக்கடிகாரத்தை இரவல் வாங்கி அணிந்து கொண்டு முதலமைச்சராகப் பதவியேற்றார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

புல்லரித்துப்போகிறது நமக்கு!

நம்பித்தான் ஆக வேண்டும். இது கற்பனைக் கதையில்லை; நம்முன் வாழ்ந்த நிஜம்.

இப்படி வாழ்ந்த ஈ.எம்.எஸ். என்ன ஒன்றும் இல்லாதவரா? மக்களால் உயர் வகுப்பு எனக்கூறப்பட்ட "நம்பூதிரி" இனத்தில் பிறந்த ஈ.எம்.எஸ்., கேரளத்தில் அன்று நிலவியிருந்த சாதிப்பாகுபாட்டுக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் பெரும் போர் நிகழ்த்தியவர். காங்கிரஸ் கட்சியில் தம் அரசியல் வாழ்வைத் துவக்கிய ஈ.எம்.எஸ்., மார்க்ஸியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவர். நாற்பதுகளில், தம் முன்னோர் சொத்தில் தமக்குக் கிடைத்த பங்கு முழுவதையும் கட்சிக்கு வழங்கி விட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்.

ஈ.எம்.எஸ். மட்டுமல்லர்; அவரைப்போல C I T U  பொதுச்செயலாளராக இருந்த கே.என்.ரவீந்திரநாத், எர்ணாகுளம் நகரின் இதயப் பகுதியில் அமைந்த, இன்றைய நில மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வரும் நிலத்தை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கட்சிக்கு வழங்கினார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காம்ரேட் ஹர்கிஷன் ஸிங் ஸுர்ஜித்தும்  தம் முன்னோரின் சொத்தில் தம் பங்காகத் தமக்குக் கிடைத்த அந்தக் காலத்துப் பத்துலட்சம் ரூபாயைக் கட்சிக்கு வழங்கினார்.

ஆனால் அவ்வப்போது 'தாம் ஒரு கம்யூனிஸ்ட்' எனச்சொல்லிக் கொள்ளும் கருணாநிதியோ கட்சிச் சொத்தை அடகு வைத்து, 'சன் தொலைக்காட்சி'யில் முதலீடு செய்தவர். கட்சித் தொண்டர்களின் அன்பளிப்பாலும் நன்கொடையாலும் உருவாக்கப்பட்ட கட்சிச் சொத்தைத் தம் சொந்த வருவாய்க்காகத் தொழிலில் முதலீடு செய்த தலைவர் கருணாநிதி ஒருவராகத்தானிருப்பார். அந்த அளவிற்குச் சுயநலம் கொண்டவர் கருணாநிதி. 'சன் தொலைக்காட்சி'யிலிருந்து கிடைத்த லாபத்தில் தம் பங்கான நூறு கோடி ரூபாயை அவர் தாம் பெற்றெடுத்த மக்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தாரே தவிர அந்தத் தொகையில் கட்சிக்கு ஏதும் கொடுக்கவில்லை.. "…… அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்" என அவரே அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

தம் சொத்தை, செல்வத்தைக் கட்சிக்கு வழங்கிவிட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். ஆனால் ஏழ்மை நிலையிலிருந்த கருணாநிதி, கோடீஸ்வரக் குடும்பத்தின் பிதாமகனாக உருவெடுத்துள்ளார்.

"நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள்"எனக் கருணாநிதி தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்த மக்கள், அப்பொறுப்பால் அவர் கோடீஸ்வரனாவார் என எதிர்பார்க்கவில்லை. 1949 முதல் எழுபத்தைந்து திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியதைத் தவிர வேறு பெரிய தொழிற்சாலைகளோ வணிக நிறுவனங்களோ எண்ணெய்க் கப்பல்களோ அவரது உடைமையாக இல்லா நிலையில் அவரது வாரிசுகளுக்கு எண்ணத் தொலையாத இத்துணைச் செல்வத்தை அவர் எப்படிச் சேர்க்க முடிந்தது என்று நாம் வினா எழுப்பத் தேவையில்லை. ஜெயலலிதாவே போதும்.

"...............1946ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாகச் சேர விண்ணப்ப படிவத்தில் தமக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை; வீட்டுமனை ஏதுமில்லை; தம்மிடம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார் ..." என ஜெயலலிதா தம் அறிக்கையில் கூறியிருந்தார்.

கருணாநிதி, தாம் எழுதிய 'நெஞ்சுக்குநீதி' எனும் ஆடோபயாகிரஃபியிலும் ".............. பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பத்மாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணிஆர்டர் செய்வேன் ..............."

"........... பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்….." எனப் பதிவு செய்துள்ளார்.

இப்படி வாழ்வைத் துவக்கிய கருணாநிதியின் குடும்பத்துக்கு இன்றுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பலரும் பதிவு செய்துள்ளனர். எனவே அவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடும் தேவையில்லை.

அரசியல்வாதியான கருணாநிதி, தாம் நாத்திகன் என்பார்; பகுத்தறிவாளன் என்பார்; பத்திரிகையாளன் என்பார்; சமூகச் சீர்திருத்தவாதி என்பார்; இலக்கியவாதி என்பார்; கவிதை எழுதுவேன் என்பார்; கம்யூனிஸ்ட் என்பார்; சிறை சென்றேன் என்பார்; தலித்களின் சம்பந்தி என்பார். இவை அனைத்திலும் இவரை விடச் சிறந்து விளங்கியவர் ஜீவா.  

தம்மைச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளன் என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் கருணாநிதிக்குச் சாதிக் குறுகுறுப்பு அதிகம். எனவேதான் அடிக்கடி, தாம் "தலித்களின் சம்பந்தி" என்றும் "மகனுக்குத் தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் எடுத்தேன்" என்றும் "பேத்திக்கும் அவ்வாறே மணமகனைத் தேர்ந்தெடுத்தேன்" என்றும் சொல்லிக் கொண்டிருப்பார். இந்தியாவில் இதுவரை பல்லாயிரக் கணக்கில் கலப்பு மணங்கள் நடைபெற்றுள்ளன; நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பலவும் இன்றைய சமூகத்தின் சாதிப்பாகுபாட்டில் தாழ்த்தப்பட்டுள்ளவர்களுடன் தாழ்த்தப்படாதவர்கள் செய்து கொண்டவை / கொள்பவை ஆகும். யாருமே தாம் செய்த தியாகமாக இதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. ஆனால் கருணாநிதி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தம் மருமகள் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் என்பதைச் சொல்லிக் காட்டி மருமகளை மேலும் தாழ்த்தும் வழக்கம் கொண்டவர். தமக்கு ஏதும் சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் தம்மைச் "சூத்திரன்" என்றும் "சாமான்யன்" என்றும் சொல்லிக் கொள்வார். ஆனால் சாதிப்பாகுபாட்டிற்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடிய ஜீவாவோ தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேந்த கண்ணமாவை மணந்து கொண்டிருந்தும் அதைப் பெரிய தியாகம்போல் சொல்லிக் காட்டியதில்லை.

ஜீவா, பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே காந்தியால் கவரப்பட்டார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கதர் பற்றிக் கவிதை எழுதினார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை எழுதி. அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். ஜீவா தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தது ஊர் மக்களின் எதிர்ப்பத் தேடித் தந்தது. அவரது செயலுக்காக ஊர் அவரின் தந்தைய எதிர்க்க, மகனுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, தம் கொள்கையைத் துறக்க விரும்பா ஜீவா குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17. சேரன்மாதேவியில் வவேசு ஐயர் நடத்திய ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டு வெகுண்டு அங்கிருந்து விலகினார். பிறகு தாமே 1927 இல் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் சிராவயலில் "காந்தி ஆசிரமம்" என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அவ்வாசிரமத்துக்கு வருகை தந்த காந்தி ஜீவாவிடம், "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது" என்று வினவினாராம்; ஜீவா, "இந்த தேசம்தான் எனது சொத்து" என விடையிறுத்தாராம். இதைக் கேட்டு வியந்த காந்தி, "நீங்கள்தாம் இந்நாட்டின் சொத்து" என்றாராம். நாட்டின் சொத்தாக ஜீவாவைக் காந்தி ஒப்புக் கொண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பொறுக்க முடியாமல், நாட்டு விடுதலைக்காக நெருப்புப் பொறி பறக்கும் உரைகள் ஆற்றி இளைஞர்களையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஜீவா, பகத் சிங் எழுதிய நூலை, "நான் ஏன் நாத்திகனானேன்?" எனத் தமிழில்  மொழிபெயர்த்தார். அந்நூலை ஈ.வெ.ரா. பெரியார் வெளியிட்டார். பகத் சிங்கின் நூலை மொழிபெயர்த்த குற்றத்துக்காக ஜீவாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டு விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காந்தி அறிவித்த 'ஒத்துழையாமை இயக்க'த்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நெருங்கிப் பழகினார். இதனால் ஜீவாவின் சிந்தனைப் போக்கு மாறியது. சிறையிலிருந்து வெளிவந்தபோது, கம்யூனிஸ்டாக வந்தார்.

விடுதலைப் போராட்ட வீரரான ஜீவா, பல தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்துள்ளார். விடுதலைப் போராட்டக் களத்திலும் தொழிற்சங்கக் களத்திலும் தம் வீரார்ந்த சேவைக்காக வெஞ்சிறையில் வாடியவர் ஜீவா. அதைச் சொல்லி மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை அவர்.

கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராவதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1952 ஆம் ஆண்டு, வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஜீவா. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்; கம்யூனிஸ்ட் கட்சியின்  "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்துள்ளார். திரைத்துறையைத் தவிரக் கருணாநிதி நுழைந்த அத்தனைத் துறைகளிலும் கருணாநிதிக்கு முன்பே வெற்றிபெற்றவர் ஜீவா.

ஜீவாவைப் பற்றிப் படித்த மற்றொரு செய்தியும் உண்டு. கம்யூனிஸக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு நாளிதழ் தேவை என எண்ணிய  ஜீவா, கட்சி நிதியாகவும் நாளிதழ் நிதியாகவும் பொதுமக்களிடம் பணம் பெற்றாராம். அதன் பின், சென்னை வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்துள்ளார். காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் எதுவும் சாப்பிடவில்லை; அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! தோழர் ஜீவாவிடம்,"பசிக்கிறது; ஏதாவது சாப்பிடலாமா?" என வினவ, "சாப்பிடலாம்; ஆனால் கையில் காசு இல்லையே" என்றாராம் ஜீவா. "உங்கள் கையில் பெரும் தொகை இருக்கிறதே" என்ற தோழரிடம், "அது மக்கள் பணம்; அதிலிருந்துஎடுக்கக் கூடாது" என்றாராம். அவர் கம்யூனிஸ்ட்.

ஜீவா போல, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போல மக்கள் தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் கருணாநிதி அடிக்கடித் தம்மையும் "கம்யூனிஸ்ட்" என்றும் "தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி" என்றும் கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும்; அப்படிக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சனி, 11 டிசம்பர், 2010

ஜீவா --கக்கன் --காமராஜர்--கருணாநிதி

“கணக்குக் காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண” எனத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, தம் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் சன் டிவியிலிருந்து தம் பங்குத் தொகையாக நூறு கோடி ரூபாய் கிடைத்தது என்று சொல்லியிருந்த வரிகளைப் படித்ததும் என்னைத் தூக்கிப் புரட்டிப் போட்டதுபோல் இருந்தது;  நூ.........று.........கோ............டி..........   ரூ........ பா.......ய்........ எனப் படிப்பதற்குள் வாய் உலர்ந்துவிட்டது.

குடிக்கக் கஞ்சியும் கிடக்கக் குடிசையும் உடுக்க நல்ல உடையும் இல்லா அன்றாடங்காய்ச்சிகள் இலட்சக்கணக்கில் வாழும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மிகச்சுலபமாகத் தம் பங்குத் தொகையாக 1000000000 ரூபாய் கிடைத்தது என்று சொன்ன அறிக்கையைப் படித்தபோது மக்களுக்காகவே வாழ்ந்த - வாழ்ந்துகொண்டிருக்கும் பல முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் நினைவு வந்தது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

தமிழனின் சராசரி மாத வருவாய் இரண்டாயிரம் ரூபாய் என்றும் அவர்களுள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் மாத வருவாய் ஐநூறு முதல் அறுநூறு என்றும் சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் இப்படி இருப்பதால்தான் கருணாநிதி மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறார்; மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

"நான் சிசுப் பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது" என்று தொடங்கிய கருணாநிதி 1949ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஐநூறு ரூபாய் மாதச்சம்பளத்திற்குத் திரைப்பட எழுத்தாளராகப் பணி புரியத் தொடங்கியதிலிருந்து இன்று வரை எழுபத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதிச் சம்பாதித்ததையும் 1957ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினராக இருப்பதையும் முரசொலி, முத்தாரம், குங்குமம், ரைஸிங்ஸன், வண்ணத்திரை போன்ற இதழகள் நடத்தி வருவாய் ஈட்டியதையும் சொல்லியிருக்கிறார்.

1949 முதல் அவர் ஈட்டிய வருவாயில் அவரது மூன்று மனைவிகளுக்கும் இரண்டு வீடுகளுக்கும் அவர் பெற்ற ஆறு பிள்ளைகளுக்கும் உணவு, உடை, மருத்துவம், கல்வி என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து, அவர்களுக்கு மணம் செய்வித்துத் தனித்தனி வீடுகளில் வாழ வைத்ததற்கு இவர் கூறியுள்ள வருவாய் இனம் போதுமா என்றோ, சன் டி.வி.யில் நூறுகோடி பங்குத் தொகை பெறும் அளவிற்கு முதலீடு செய்திருக்க முடியுமா என்றோ பேரப்பிள்ளைகளுடன் பிணங்கி உடனடியாகக் கலைஞர் டி.வி. துவங்க முதலீடு எப்படி வந்தது என்றோ வினாக்களை எழுப்புவதும் ஆராய்ச்சி செய்வதும் இந்த அலசலுக்குத் தேவைப்படாதவை.

"கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில். பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது" என ஜெயலலிதா கூறுவதயும் நாம் அலசப்போவதில்லை.

கருணாநிதி கூட்டங்களில் பேசி, இரண்டு வடையும் ஒரு டீயுமே சம்பளம் பெற்றவர்; கருணாநிதி திருட்டு ரயில் ஏறிச் சென்னைக்கு வந்தவர் என்று அ.இ.அ.தி.மு.க.வின் மூன்றாம்தர மகளிரணிப் பேச்சாளார்களின் தரத்தில் ஜெயலலிதா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்நாள் முதல்வரைப் பற்றி முன்னாள் முதல்வர் கூறக்கூடாத ஒன்று இது. ஆனால் "எம்.ஜி.ஆ.ரின் மனவியான ஜானகி, மோரில் விஷம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்"  எனக்குற்றம் சுமத்திய ஜெயலலிதாவிடம் இதை விட நாகரீகமாக எதிர்பார்க்க முடியாது.

கிராமத்திலிருந்து திரைப்படத்துறையை நம்பி வந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பணக்காரர்களாகும்போது கருணாநிதியும் திரைப்படத்துறையில் வருவாய் ஈட்டிச் சேமித்திருக்கலாம் என நம்புகிறோம். ஆனால் அலசலின் துவக்கத்தில் சொன்னபடி நம்மைப் புரட்டிப்போட்டது அந்த 100 கோடி தான்

கருணாநிதியை விடச் சிறந்த மக்கள் தலைவர்கள் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா. அவரைப் பற்றி விரிவாக ஓர் அலசல் எழுதப்படும். இங்கே சொல்லப்பட வேண்டிய ஒரு செய்தி, மக்களுக்காகவே வாழ்ந்த அந்தத் தலைவரின் எளிமைதான்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் காமராஜர் ஜீவாவையும் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பி, ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தலைவரைப் பார்க்கச் சென்றார். நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்ட ஜீவா முதலமைச்சர் காமராஜர் காத்திருக்க, தம்மிடமிருந்த ஒற்றை வேட்டியைத் துவைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தார் என்ற ஒரு செய்தியைப் பலரும் பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து அவரது சட்டைப்பையில் இருந்த நூற்றைம்பது ரூபாய் மட்டுமே! நூறு கோடி ரூபாய் பங்குத் தொகையாகப் பெற்ற கருணாநிதி, தி.நகரில் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வசித்திருந்த எட்டாம் எண் வாடகை வீட்டின் படத்தை போட்டு "ஏழைப்பங்காளர் வாழும் பங்களா" என விளம்பரப்படுத்தி மகிழ்ந்தவர்.  

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரையும், 1957 முதல் 1967 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய கக்கன் மிக எளிமையாகவே வாழ்ந்தார்.

ஒன்பது ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றிய கக்கன் அரசுப் பேருந்தில்தான் எங்கும் செல்வார். கக்கன் மதுரையில் அரசுப் பொது மருத்துவ மனையில்  சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்குப் படுக்கை கூட வழங்கப்படாமல் தரையில் படுக்க வைக்கப் பட்டிருந்தார். அவருக்கு வீடு கூட இல்லை. இறுதிக்காலத்தில் 1979 ஆம் ஆண்டில் அரசு வழங்கிய வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

ஜீவா, கக்கன், காமராஜர் போன்றோரெல்லாம் கடந்த நூற்றாண்டிலோ கற்காலத்திலோ வாழ்ந்த மனிதர்களல்லர். கருணாநிதி பார்த்து, விமர்சித்து, இழித்து, பழித்து, புகழ்ந்து, பாராட்டியவர்களே!

இவர்கள் மட்டுமல்லர்.! திரிபுராவில் முதலமைச்சராக இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிருபேந் சக்கரவர்த்தி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும்போது இரண்டு டிரங்குப் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். அந்தப் பெட்டிகளில் இருந்தது சில மாற்றுத் துணிகளும் புத்தகங்களும் மட்டுமே.

அதே திரிபுராவில் முதலமைச்சராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மானிக் சர்க்காருக்கும் சொந்த வீடு இல்லை; நிலம் இல்லை; வாகனம் இல்லை. அவர் பதவியேற்கும் போது வங்கி இருப்பு 13,920 ரூபாய் மட்டுமே. முதலமைசருக்கான சம்பளமாக அரசு தரும் 9,200 ரூபாயையும் படியாகத் தரும் 1,200 ரூபாயையும் மற்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர்களைபோலவே  கட்சிக்கு வழங்கி விட்டுக் கட்சி தரும் உதவித் தொகையில் வாழ்கிறார்.தம் மனைவியுடன் வெளியே சென்றால் அரசு வாகனத்தைப் பயன்படுத் துவதில்லை; ரிக்ஷாவிலேயே அழைத்துச் செல்வார். அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மத்திய அரசு ஊழியரான  அவரது மனைவியும் அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்தால் மட்டும் அரசு வாகனத்தில்  அழைத்துச் செல்வார்.

அப்படி ஓர் எளிமை.

மும்முறை கேரள முதலமைச்சராக இருந்து இப்போது மத்தியில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் எளிமைக்குப் பெயர் பெற்ற ஏ.கே அந்தோனியின் பெயரில் வீடோ வாகனமோ இல்லை. வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றும் அவரது மனைவி எலிஸபத்தின் வருவாயில் வாங்கப்பட்ட வீடு அவரின் பெயரில் உள்ளது.

மற்ற மாநில முதல்வர்களை விடவும் வசதி குறைந்த வீட்டிலேயே தாம் வாழ்வதாக தம் அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார். அரசு வீடுகளில் அமைச்சர்கள் வசித்தால் அவ்வீடுகள் பெரிதாகத்தான் இருக்கும். அதில் பிறரைக் குறை காண இடம் இல்லை. தாம் சொந்த வீட்டில் வசிப்பதாகக் கருணாநிதி கூறி இருப்பதிலும் அவருக்குப் பெருமை இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்தபோதும் அவர்களின் சொந்த வீடுகளில்தாம் வசித்தனர்.
தாம் செய்யும் தியாகமாக இதைக் கூறும் கருணாநிதி, தம் சமகாலத்தில் அரசியலில் சந்தித்த ஜீவா, கக்கன், காமராஜர், நிருபேந் சக்கரவர்த்தி, மானிக் சர்க்கார், ஏ.கே அந்தோனி ஆகியோரின் வாழ்க்கையைத் தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

சனி, 4 டிசம்பர், 2010

பாகிஸ்தான் - மத நிந்தனைச் சட்டமும் சிறுபான்மையினர் நிலையும்!

ஒவ்வொரு நாடும் தத்தமது அரசியல் சட்டத்திற்கேற்பப் பல தடைச்சட்டங்களை இயற்றி நடை முறைப்படுத்துகின்றன. அவை அவ்வந்நாடுகளின் உரிமையும் கூட. அதில் நாம் கருத்துச் சொல்லவோ மறுப்புச் சொல்லவோ உரிமையில்லை. அவ்வகையில் பாகிஸ்தான் நாடும் ஒரு 'மத நிந்தனைச் சட்டத்தை' வகுத்துள்ளது. 96 விழுக்காடு முஸ்லிம்களைக் குடிமக்களாகக் கொண்ட அந்நாடு, அரசியல் சட்டத்தில், "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு" என அழைக்கப்படுவதால் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் கடுமையான, 'மத நிந்தனைத் தடுப்புச் சட்டமும்' உள்ளது. மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.

இந்தியாவில் நீதிபதிகளுள் பெரும்பாலோரும் இந்துக்களாக இருப்பது போலவே பாகிஸ்தானிலும் பெரும்பாலும் முஸ்லிம்களே நீதிபதிகளாக உள்ளனர். ஆல்வின் ராபர்ட்ஸ் எனும் கிறிஸ்தவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். ராணா பகவன் தாஸ் எனும் இந்துவும் அப்பதவியில் இருந்துள்ளார். ஜம்ஷாயித் ரகுமதுல்லா எனும் கிறிஸ்தவர் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்துள்ளார். என்றாலும் மதநிந்தனைக் குற்றவழக்கை  முஸ்லிம் நீதிபதி மட்டும்தான் விசாரிக்க முடியும்.

பாகிஸ்தானில் அகமதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோரும் இந்துக்களும் சீக்கியர்களும் கிறிஸ்துவர்களும் மதச்சிறுபான்மையினராவர். ஜெனெரல் ஜியாவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மத நிந்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1988ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் எழுநூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனலாம். இதில் ஐம்பது விழுக்காடு வழக்குகள் முஸ்லிம்கள் மீதும் பதியப்பட்டுள்ளன. அகமதிகளும் கிறிஸ்தவர்களுள் பலரும்  இச்சட்டத்தின் கீழ் வழக்கில் சிக்கியுள்ளனர். அவ்வகையில் அண்மை வழக்கு ஆஸியாபீ எனும் நாற்பத்தைந்து வயதான கிறிஸ்தவப் பெண் மீது தொடுக்கப்பட்டதாகும்.

முஸ்லிம்களின் புனிதரான முகமது நபியைக் குறித்து அவமரியாதையாகப் பேசியதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஏறத்தாழப் பதினைந்து மாதங்கள் சிறையில் இருக்கும் ஆஸியாபீபிக்குக் கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி பஞ்சாப் பகுதியில் உள்ள ஒரு செஷன்ன்ஸ் நீதிமன்றம் மதநிந்தனைச் சட்டம் பிரிவு 295 C படி தூக்குத் தண்டனை விதித்த செயல் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களைத் திடுக்கிட வைத்தது. போப் பெனெடிக்ட் XVI  உடனடியாக அப்பெண்ணை விடுதலை செய்யும்படிக் கோரியுள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இச்சட்டத்தின் கீழ்த் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தால் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு இதுவரை இச்சட்டத்தின்கீழ் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீ சார்பாக அப்பீல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இதில் தலையிட்டு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அந்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தும்படி நீதிமன்றத்தை வேண்டியுள்ளார். ஆஸியாபீ நிரபராதி என்றும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீயின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பு அதிபர் சர்தாரி ஆஸியாபீக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது எனத் தலைமை நீதிபதி காஜாஷரீஃப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 03/12/2010 அன்று நடந்த வெள்ளிக்கிழமைக் கூட்டுத் தொழுகையின்போது யூசுப் குரைஷி எனும் முல்லா ஆஸியாபீயைக் கொலை செய்பவருக்கு ஐந்துலட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இவ்வழக்கு எப்படிப் புனையப்பட்டது? ஆஸியாபீ சொல்வது என்ன?

விவசாயக் கூலியான ஆஸியாபீபியை அவருடன் வேலை செய்யும் மற்றவர்கள் மதம் மாறும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளனராம். தம் மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளத் தக்க காரணம் எதுவும் இல்லை எனக்கூறி, மதம் மாற மறுத்து வந்திருக்கிறார் அவர். இடையே அவரது வீட்டிலிருந்து வெளியேறித் தெருவில் சேரும் கழிவு நீரினால் மற்றவர்களுடன் பிரச்சனை வேறு இருந்துள்ளது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுக்காக ஆஸியாபீ இறைத்துத் தந்த குடிநீரைக் குடிக்க மறுத்த பெண்களிடம் "ஏன்" என வினவியுள்ளார் ஆஸியாபீ. "முஸ்லிமல்லாத ஆஸியாபீயிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது" எனச் சொன்ன பெண்களுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு இப்படி ஒரு புகாராகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் ஆஸியாபீபி.

பாகிஸ்தானில் தனிப்பட்ட தகராறுகள் கூட மதநிந்தனைப் புகாராகச் சொல்லப்படுகின்றன என்பதால் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அரசால் யோசிக்கப்படுகிறது. இதனிடையே மத அமைப்பைச் சேர்ந்த பலரும் ஆஸியாபீக்கு மரணதண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் எனவும் அதிபர் ஆஸிஃப் சர்தாரி ஆஸியாபீபிக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது  எனவும் மதநிந்தனைச் சட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டுவரக் கூடாது எனவும் போராடுகின்றனர். முன்னர் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களும் இவர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருப்போர் விடுதலை செய்யப்பட்டோ பிணையிலோ சிறையிலிருந்து வெளிவந்தாலும் கூட மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படும் அவலமும் நடக்கிறது.

முஸ்லிம்களின் வேதமான குரானின் சில பக்கங்களை எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருந்து கடந்த நவம்பர்  மாதம் 3ஆம் தேதி பிணையில் வெளிவந்த இம்ரான் லதீஃப் எனும் 22 வயது கிறிஸ்தவ இளைஞன் நவம்பர் 11ஆம் தேதி ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாண்டு ஜூலையில் கிறிஸ்தவர்களான பாஸ்டர் ராஷித் இம்மானுவேல் மற்றும் அவரது சகோதரர் ஸாஜித் ஆகியோர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மதபோதகர் இமானுவேல் மதப்பிரச்சரத்துக்காக வெளியிட்ட கையேட்டில் முகமது நபியை இழிவுபடுத்தும் வாசகங்கள் அடங்கியிருந்ததால் மதநிந்தனை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு வெளியே கொண்டுவரப்படும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலையைக் கண்டித்துக் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாபாஸ் பட்டியும் மதநிந்தனை செய்துவிட்டதாக  முல்லா ஒருவர் குற்றம் சாட்டினார்.

இப்படி மத நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டோருள் சுமார் 20 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல விடுதலையான பலரும் - குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் - கொலைக்கு அஞ்சித் தலைமறைவாக வாழுகின்றனர். அது மட்டுமின்றிப் பல கிறிஸ்தவக் குடும்பங்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. அதை விளக்கப்புகின் விரியும்.

ஆஸியாபீபி பதினைந்து மாதங்கள் சிறையில் இருந்ததைப்போல ஜைனப்நிஸா எனும் அறுபது வயதான முதிய பெண் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் மதநிந்தனைக்காகக் காவலில் இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு குரானை அவமதித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட மனநிலை பிறழ்ந்த ஜைனப் நிஸாவைப்  பாகிஸ்தான் காவல்துறை மனநோய் மருத்துவமனையில் காவலில் வைத்திருந்தது. விசாரணையோ தண்டனையோ இன்றிக் காவலில் இருந்த அம்முதிய பெண் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்  இவ்வாண்டு ஜூலை மாதம் லாகூர் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என அழைக்கப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் பல நேரங்களிலும் தனிப்பட்ட பகையையும் கோபதாபங்களையும் தீர்ர்ப்பதற்கும் பழிவாங்குவதறகும் பயன்படுவதைப் போல பாகிஸ்தானில் மதநிந்தனைச் சட்டம் பயன்படுகிறது. இச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் புனையப்பட்டவையே! நிறைய மத நிந்தனை வழக்குகள் லாகூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீது சட்டத்தின் துணையோடும் சட்டத்தைக் கையில் எடுத்தும் நிகழ்த்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மதவெறிக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அந்நாட்டரசு தடுமாறுவது ஒருபுறம்; பொதுமக்களான முஸ்லிம்கள் மதநிந்தனைச் சட்டத்தைத் தம் விருப்பு வெறுப்புக்கேற்பப் பயன்படுத்த நினைப்பது மறுபுறம் என பாகிஸ்தானின் சிறுபான்மைச் சமுதாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மத உரிமையும் மனித உரிமையும் பாதுகாக்கப் படாதவரை பாகிஸ்தான் அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகவே மனித உரிமை ஆர்வலர்கள் கருதுவர். நீதிமன்றங்கள் மட்டுமே அந்த அவப்பெயரிலிருந்து பாகிஸ்தானைக் கரையேற்ற முடியும்.

சனி, 27 நவம்பர், 2010

பீகார் தேர்தல் முடிவுகள் - காங்கிரஸுக்கு ஒரு பாடம்!

இந்தியாவின் பழமையான வரலாறு முதல் இன்றைய வரலாறு வரை தனி இடம் பெற்று வரும் பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்து விட்டன.

சின்னஞ்சிறு வயதிலேயே பீகார் எனக்கு அறிமுகமாகி விட்டது. நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திரைப்படம் பார்க்கத் திரையரங்குக்குச் சென்றால், படத்திற்கு முன், மத்திய அரசின் செய்தித் தொகுப்பு திரையிடப்படும். "பீகாரில் வெள்ளம்" எனக் கனத்த குரலில் ஒருவர் அம்மாநில மக்களின் துயரம் குறித்து விளக்கிக் கொண்டிருப்பார். வீட்டுக்குத் திரும்பியதும் தொடர்ந்து நாலைந்து நாட்கள், “பீகாரில் வெள்ளம்” என மிமிக்ரி செய்து கொண்டிருப்பது வழக்கம். பள்ளிக்கூடம் சென்றால் மவுரியர்கள் ஆண்ட மகத ராஜியம் பற்றியும் அசோகர் பற்றியும் பாடலிபுத்திரம், நாளந்தா பல்கலைக் கழகம் பற்றியும் படிக்கும்போது பாடத்திலும் பீகார் வரும். புத்த ஆலயமான 'விகார்' என்பதன் மரூவுதான் பீகார் எனவும் சொல்வர்.

இந்தியாவின் தேசியச் சின்னமான நான்கு சிங்கங்கள் கொண்ட ஸ்தூபியையும் தேசியக் கொடியின் சக்கரத்தையும் நாம் எடுத்துக் கொண்டது பேரரசர் அசோகரிடமிருந்துதான். அந்த அசோகரும் அவரின் முன்னோர்களான மவுரிய அரசர்களும் ஆண்ட காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த நாளந்தா பல்கலைக் கழகம் இருந்ததும் இன்றைய பீகாரில்தான். அசோகரின் ஆட்சியில் தலைநகரமாக இருந்த பாடலிபுத்திரம்தான் இன்றைய பீகாரின் தலைநகரம் பாட்னா! போரின் கொடுமைகளையும் ரத்தச் சகதியையும் கண்டு போர் செய்வதையே விட்டு விட்ட அசோகரின்  பழமையான வரலாறு கொண்ட பீகார் இன்று, ஏழ்மையிலும் சாதி ஆதிக்கத்திலும் ஆயுததாரிகளான குண்டர்கள் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. கட்சி வேறுபாடின்றிச் சாதி, மத வேறுபாடின்றிச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களுக்காகச் சிறையில் இருக்கின்றனர். அவர்களுள் ஆனந்த் மோகன், பப்பு யாதவ், முன்னா ஷுக்லா, பிரபுநாத் ஸிங், சகாபுதீன் போன்றோர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே வெளியே தேர்தலையும் வாக்கெடுப்பையும் கட்டுப்படுத்த முடிகின்றது.

பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார் கூடக் கிரிமினல் குற்றவாளிகளான தம் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு வேட்டையாடினார். 2005ஆம் ஆண்டில் ஒரு வாக்குச்சாவடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாகிச் சூடு சம்பவத்திற்காகக் கடந்த மூன்றாண்டுகளாக தாவூத்நகர் சிறையில் இருக்கும் ரண் விஜய் ஸிங், மற்றும் கொலை, ஆள் கடத்தல், பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஸர்ஃப்ராஸ் ஆலம், நீரஜ் குமார் ஸிங், புச்சன் யாதவ் போன்றோருக்கும் கிரிமினல்களக இருந்து அரசியல்வாதிகளான மனோரஞ்சன் ஸிங், சுனில் பாண்டே, ஆனந்த் ஸிங் போன்றோருக்கும் ஓட்டு வேட்டையாடிதில் நிதீஷ் குமார் வெட்கப்படவில்லை என்பதே பீகாரின் இன்றைய சட்டம் ஒழுங்கு நிலைக்குச் சான்று.

இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களில் 141 பேர் கொலை, ஆள் கடத்தல் மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் ஆவர். இவர்களுள் 58 பேர் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்; 58 பேர் பாரதீய ஜனதாக் கட்சியினர்; 13 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் ஆவர். இவர்களுடன் காங்கிரஸ் 3, பாஸ்வானின் லோக் ஜனசக்தி 3, கம்யூனிஸ்ட் 1, சுயேட்சை 5 என மற்றவர்களும் இடம் பிடித்துள்ளனர். கொலைவழக்கில் சிறையிலிருக்கும் ரண் விஜய்ஸிங்கும் வெற்றி பெற்றுள்ளார். ஸர்ஃப்ராஸ் ஆலம், நீரஜ் குமார் ஸிங், புச்சன் யாதவ் போன்றோரும் கிரிமினல்களக இருந்து அரசியல்வாதிகளான துமல்ஸிங், சுனில் பாண்டே, ஆனந்த் ஸிங் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், ஒரு மாத காலம் ஆறு கட்டங்களாக நடந்து முடிந்து நிதீஷ் குமார் மூன்றாம் முறையாக முதல்வராகி விட்டார்.

இந்தியா  விடுதலை பெற்ற நாள் முதல் 1990 வரை - இடையே 11 மாதங்கள் ஜனதா கிரந்தி தள் ஆண்டதையும் ஆறு மாதங்கள் கர்பூரி தாகூரின் சோஷலிஸ்ட் கட்சி ஆண்டதையும் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஜனதாக் கட்சி ஆண்டதையும் கழித்துவிட்டால் - பீகாரை நீண்ட 40 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்  மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதோடு  தேய்ந்தும் போயிற்று. அதற்குக் காரணம் இன்றைய பீகாரின் தவிர்க்க முடியாத் தலைவர்களுள் ஒருவரான லாலுபிரசாத் யாதவே!

அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ், பாட்னா பல்கலைக்கழக மாணவர் யூனியனின் செயலாளராகப் பொது வாழ்வைத் துவக்கி, ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜ்  நாராயணன், கர்பூரிதாகூர் போன்ற சோஷலிஸ்ட் தலைவர்களால் கவரப்பட்டு அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு 29 வயதில் 1977 ஆம் ஆண்டில் ஆறாவது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் 89 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த லாலு 1990 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தாமும் முதல்வராக இருந்து, 1950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் வழக்கால் முதல்வர் பதவியிலிருந்து விலகித் தம் மனைவி ராப்ரிதேவியையும் முதல்வராக்கி, பீகாரைத் தம் பிடிக்குள் வைத்திருந்தார்.

லாலு அரசியல் பயின்ற அதே சோஷலிஸ்ட் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயணனிடமும் கர்பூரி தாகூரிடமும் அரசியல் பயின்றவர், பொறியியல் பட்டதாரியான நிதீஷ்குமார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய நிதீஷ்குமார் 2000ஆம் ஆண்டில் ஒரு வாரகாலம் பீகாரின் முதல்வராக இருந்தார். கடந்த 2005ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதாக் கட்சிக் கூட்டணியால், லாலுவின்  ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஆட்சியைப் பிடித்துப் பீகாரின் முதல்வரானார்.

பீகாரின் மற்றொரு  தலைவர் - தலித்களின் நாயகனான - ராம்விலாஸ் பாஸ்வானும் முன்னவர்களைப் போலவே ஜெ.பி. இடம் அரசியல் பயின்றவரே!

இத்தேர்தலில் போட்டி நடந்தது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் + ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்திக் கட்சிக் கூட்டணிக்கும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் + பாஜக கூட்டணிக்கும்தாம். ஐக்கிய ஜனதா தளம் 141 தொகுதிகளிலும் பா.ஜ., 102 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராஷ்டிரிய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் + பாஜக கூட்டணி 206 இடங்களை வென்றது லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் + ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்திக் கட்சிக் கட்சி கூட்டணி 25 இடங்களைப் பெற்றது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெல்ல  முடிந்தது. 34 பெண்கள் வென்றுள்ள போதிலும் இரு இடங்களில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ராபரி தேவி தோற்றுவிட்டார்.

லாலுவைப் போலன்றி, ஊழல்களில் சிக்காமல் பீகாரின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, மாநிலத்தில் சாலைகள் அமைத்ததையும் பாலங்கள் கட்டியதையும் கிராமப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமித்ததையும் ஓரிலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்ததையும் தம் ஆட்சியின் சாதனையாக நிதீஷ் குமார் சொல்லிக் கொள்ள முடிந்தது. அவரின் தன்னம்பிக்கையால் நரேந்திர மோடியையும் வருண்காந்தியையும் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் எனத் தடுக்க முடிந்தது. இப்பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் மோதல் ஏற்பட்ட போதிலும் நிதீஷ் உறுதியுடன் நின்றார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் ஸிங் என இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மையமும் முகாமிட்டு நிதீஷுக்கு எதிராகப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டும் அவர்கள் நிதீஷுக்கு எதிராகச் சுமத்திய குற்றச்சாட்டுகளை பீகார் மக்கள் பொருட்படுத்தாததும் சுமார் அறுபது தொகுதிகளில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் முஸ்லிம்கள் பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷுக்கு வாக்களித்திருப்பதும் அவரது மக்கள் செல்வாக்கிற்குச் சான்று.

பீகாரின் தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இரு தினங்களுக்கு முன் வரை அடக்கி வாசித்த கருணநிதி, “சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா” எனக் கர்ஜிக்கும் நிலை வந்துவிட்டது. காமராஜர் ஆட்சி, தனித்துப் போட்டி என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் இனி எந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு முயன்றாலும் அவர்கள் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டியதுதான். முலாயம்ஸிங், மமதா பானர்ஜி ஆகியோரும் இனி காங்கிரஸைப் பார்க்கும் பார்வை வேறாக இருக்கும். காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் சரியான கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதோடு மத்தியில் ஆளும் கட்சி என்ற மமதையைக் களைந்து விட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தேவையற்ற மோதல் போக்கைக் கைவிட்டு, மக்களோடு கலந்து மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக் களம் இறங்க வேண்டும். மாநிலங்களில் குட்டித் தலைவர்களையும் குட்டி வைக்க வேண்டும்.

சனி, 20 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் -- விடை தெரியா வினாக்கள்

அடிமை இந்தியாவில் 1881 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி, சுதந்திர இந்தியாவில் அரசின் கையிலும் கட்டுப்பாட்டிலும்  இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த 1947 காலகட்டத்தில் ஐயாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே தொலைபேசி இணைப்பு இருந்தது. பெரிய வணிகர்களும் தொழிலதிபர்களும்  முதலாளிகளும்  பணக்காரர்களும் மட்டுமே தொலைபேசி இணைப்புப் பெற முடியும். தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்காக  முன்பணம் கட்டி மாதக்கணக்கில் காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டிய நிலை. பக்கத்து ஊருக்கு ஓர் அவசரச் செய்தியைத் தெரிவிப்பதற்குக் கூட ட்ரங்க் கால் பதிவு செய்து மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

அறுபதுகளில் இந்தியாவில் எஸ்.டி.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ட்ரங்க் கால் புக் செய்து காத்திருக்கும் நிலையில் மாற்றம் வந்தது. வாடிக்கை யாளர்கள் நேரடியாக டயல் செய்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் சாதாரண பொதுமக்கள் தொலைபேசி இணைப்புக் கிடைப்பதற்குப் பல ஆண்டுக் காலம் காத்திருக்க வேண்டிய நிலையே நீடித்தது. இணைப்புக் கிடைத்தாலும் தொலைபேசிகள் சரியாக வேலை செய்யா. 1980 ஆம் ஆண்டில் அன்றைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான சி.எம். ஸ்டீஃபனை நோக்கி இது குறித்து வினா எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான சுதந்தராக்கட்சித் தலைவர் பிலூ மோடி "எஸ் டி டி என்பது Steephan's Telephonic Disaster" எனக் கிண்டல் செய்த நிகழ்ச்சியும் நடந்தது. "தொலைபேசி என்பது ஆடம்பரப்பொருள்;  இன்றியமையாத ஒன்று எனக்கோரும் உரிமை யாருக்கும் இல்லை. தொலைபேசிச் சேவையில் அதிருப்தி உள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக் கருவிகளை அரசிடம் ஒப்படைத்து விடலாம்.தொலைபேசிக்காகப் பதிவு செய்து விட்டு எட்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பவர்களுக்கு அவற்றைக் கொடுப்போம்" என்று அமைச்சர் ஸ்டீபன் அவையில் அறிவித்ததும் நிகழ்ந்தது.

இப்படி எட்டாக்கனியாக  இருந்த தொலைபேசியை மக்களுக்குப் பரவலாக்கியவர் இந்தியாவின் பிரதமராக இருந்த மறைந்த ராஜீவ்காந்திதான். 1987 ஆம் ஆண்டில் அவரது தொழிநுட்ப ஆலோசகர் ஸாம்பிட்ராடோ மூலம் தொலைத் தொடர்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார் ராஜீவ்காந்தி.  நாடெங்கும் பி.சி.ஒ எனப்படும் பொதுத்தொலைபேசி அழைப்பகங்கள் உருவாக்கப்பட்டன. வெளிநாட்டுத் தொடர்புகூட நேரடி அழைப்பின் மூலம் எளிதாக்கப் பட்டது. சுக்ராம் காலத்தில் தாராளமயமாக்கல் கொள்கையால் நாடெங்கும் இணைப்புகள் காத்திருப்பின்றி வழங்கப்பட்டன.  தயாநிதிமாறன் காலத்தில் இன்னும் எளிமையாக்கப்பட்டது. ஆகஸ்ட் 2010 ஆம் ஆண்டிற்குள் வீட்டு இணைப்பும் மொபைல் இணைப்புமாக  706.37  மில்லியன் வாடிக்கையாளர்களும்   670.60 மில்லியன் மொபைல் இணைப்புகளுமாக மிளிர்கிறது இந்தியாவின் தொலைதொடர்பு வளர்ச்சி. ஒரு தனியார் மொபைல் இணைப்பு நிறுவனம் மட்டும் 200 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்குவது, தொலைதொடர்புத் துறையில் தனியாரின் மிதமிஞ்சிய வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டு  ஆகும்..

வளம் கொழிக்கும் துறையாக இன்று மாறி இருக்கும் தொலைதொடர்புத் துறையில் ஆண்டிமுத்து ராசாவுக்கு முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்களும் ஊழல் குற்றசாட்டிலிருந்து  தப்பவில்லை.

1991-1996 காலகட்டத்தில்  சுக்ராம்  தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது மொபைல்ஃபோன் புரட்சிக்கு வித்திட்டார். எனினும் அவர் தம் துறையில் 1500 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தொலைத் தொடர்புக் கருவிகள் வாங்கும் ஒப்பந்தம் வழங்குவதற்குப் பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டுக்கும் ஆளானார். வருமானத்துக்கு அதிகமாக நாலேகால் கோடி ரூபாய் அளவுக்குச்  சொத்துச் சேர்த்திருந்த குற்றத்திற்காக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டார்.

1998-99 காலத்தில் பி.ஜே.பியைச் சேர்ந்த ஜக்மோகன் அமைச்சராக இருந்தபோது   தொலைதொடர்புத் துறைக்கு மாதம் ஒன்றுக்கு 41.57 கோடி ரூபாய் (92 மில்லியன் டாலர்) இழப்பு எற்பட்டது. இதனால் அவரை அத்துறையில் இருந்து மாற்றிவிட்டுத் தாமே அத்துறையின் பொறுப்பைக் கூடுதலாக ஏற்றார் அன்றைய பிரதமர் வாஜ்பாய்.

இத்துறையில் தமக்கு உதவியாக ராம்விலாஸ்பாஸ்வானை ராஜாங்க அமைச்சராக நியமித்தார் வாஜ்பாய். 1999 முதல் 2001 வரை பொறுப்பில் இருந்த பாஸ்வான்  மீதும் Global System for Mobile Communications (GSM) மற்றும் Code Division Multiple Access (CDMA) உரிமங்கள் வழங்கியது தொடர்பாக ரூபாய் 1300 கோடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து  ராம்விலாஸ் பாஸ்வான் நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு ப்ரமோத்மகாஜன்  நியமிக்கப்பட்டார்.

2001 முதல் 2003 வரை ப்ரமோத்மகாஜன் அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் மொபைல் நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு வரவேண்டிய  கட்டணங்களை விட்டுக் கொடுத்ததால் கோடிக் கணக்கில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சட்ட விதிகளுக்கு முரணாகச் சலுகைகள் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மகாஜன் அதற்கென ஆயிரம் கோடிகளில் பலன்பெற்றார் என்றும் கூறப்பட்டது.

ப்ரமோத் மகாஜனை நீக்கிவிட்டு அவ்விடத்தில் அமர்த்தப்பட்ட அருண்ஷோரி மீதும்  குற்றச்சாட்டு உண்டு. 2003 முதல் 2005 வரை தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, ராசா மீதான பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது எனக்  கூறி வருவது குறிப்பிடத் தக்கது.  

பி.ஜே.பி ஆட்சி முடிவுக்கு வந்த பின் பதவி ஏற்ற காங்கிரஸ் கூட்டணி அரசில் பணம் கொழிக்கும் தகவல் தொடர்புத் துறையைப் போராடிப் பெற்று, முதன் முறையாக அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் அடியெடுத்து வைத்த -- எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தம் பேரன் தயாநிதி  மாறனை அத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்த்தார் கருணாநிதி. மதுரை தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பின் எதிர்விளைவாக அந்நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்டு, விலைமதிக்க வொண்ணா மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டபோது எழுந்த குடும்ப கலகத்தில், பேரன் தயாநிதியை நீக்கி விட்டு அந்த இடத்தில் தம்  நம்பிக்கைக்கு உரியவரான ராசாவை நியமித்தார் கருணாநிதி. அன்று முதல் கடந்த வாரம் வரை ராசாவே தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தார்.

ஒரு கோடி... இல்லை பத்துக் கோடி...  இல்லையில்லை... நூறுகோடி..? எத்தனை பூஜ்யங்கள் இட்டால் ஒரு கோடி என்பதை எண்ணால் எழுத முடியும் என்று கூடத் தெரியாத பாமர மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டில்  1.76 இலட்சம் கோடி ரூபாய்  என்பதைக் கற்பனை கூடச் செய்ய  முடியவில்லை. இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறை  அமைச்சராக இருந்த ஆண்டிமுத்து ராசாவால் இந்திய அரசுக்கு / இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள  துரோகம் இது.

தொலைதொடர்பில் மிகவும் மதிப்பு மிக்கது  2nd Generation electro-magnetic spectrum -- இரண்டாம் தலைமுறை  மின்காந்த அலைக்கற்றை--! பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல், தொலை தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளையும் மீறி, எதிர்ப்புத் தெரிவித்த தம் துறை அதிகாரிகளை மாற்றி, யாருடைய லாபத்துக்காகவோ தம்மிச்சையாகச் செயல்பட்டு, குறிப்பிட்ட  ஒரு நாளில், ஒரு மணி நேரத்துக்குள், "முந்துவோருக்கு முதல் சேவை" (First come first service) என்ற அடிப்படையில் ராசா வழங்கிய ஸ்பெக்ட்ரம் உரிமத்தால் -- உரிமங்கள் சினிமா டிக்கட்டுகள்போல் விற்கப்பட்டன என டில்லி உயர்நீதிமன்றம் விமர்சித்திருந்தது -- நாட்டுக்கும் மக்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிட்டார் ஆண்டிமுத்து ராசா. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி  ஆராசா தம் முறைகேட்டால் சுமார் 1,76,379 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டார்.

2008-2009 ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டின் பற்றாக்குறையில் நான்கில் மூன்று பங்கை இத்தொகையால் நிரப்பியிருக்க முடியும். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக இதை வைத்து அரசியல் செய்தாலும் நாட்டு நலனில் அக்கறையுள்ள பொதுமக்கள் அனைவரையும் ஆத்திரமுறச் செய்த செயல் இது

இதைப்பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு விட்ட நிலையில் இவ்விவகாரத்தில் சில வினாக்களுக்கு விடை தெரியாமலே உள்ளன.  

* இப்போது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் பீஜேபி, ராசாவுக்கு முன் அத்துறையில் நடந்த ஊழல்கள் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?அன்றைய ஊழலின் மதிப்பான   கோடிகளின் எண்ணிக்கை இலட்சத்தைத் தொடவில்லை என்பதாலா அல்லது சொந்தக்கட்சி அமைச்சர்கள் என்பதாலா?
* நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வைத்து நடத்திய போராட்டத்தால் அமைக்கப்படும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பீஜேபியின் அமைச்சர்களின் ஊழல்களையும் விசாரிக்கும் என்று இன்று சொல்லும் காங்கிரஸ் , எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதைப்போன்ற போராட்டங்களை ஏன் நடத்தவில்லை?
* ராசா பொறுப்புக்கு வந்தபின் 2008 ஆம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி இடதுசாரிகள் வினா எழுப்பினர்.  எனினும் முக்கிய எதிர்க்கட்சியான பீஜேபி இன்று காட்டும் வேகத்தை அன்று காட்டியிருக்கவில்லை. 2009 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ராசா போட்டியிட்டபோதும் தி.மு.கவுக்கு    எதிராக இவ்வூழல்  தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும்  மிகப்பெரிதாக முன்னிலைப்படுத்தப்படாதது ஏன்?
* இன்று பீஜேபியுடன் கைகோர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அஇஅதிமுக தேர்தல் நேரத்தில் இதை ஏன் மக்களிடம் கொண்டு செல்லவில்லை?
* தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வென்று மத்தியில் ஆட்சி அமைக்க முயலும்போது ஆ.ராசாவைத் தொலைதொடர்புத்துறை அமைச்சராக்க வேண்டும் என டில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்த கருணாநிதி வெளியில் இருந்து அரசை ஆதரிக்கப்போவதாகப் பயமுறுத்தியது  ஏன்?
* ராசாவுக்கு தொலைதொடர்புத்துறையில் அப்படி என்ன தனித்திறமை? ராசாவை விட்டால் வேறு திறமையான ஆளே இந்தியாவில் இல்லையா ?
* ராசாவின் இலட்சம் கோடி ஊழலில்  கருணாநிதிக்கு என்ன ஆர்வம்? கருணாநிதி குடும்பத்தாரின் பங்கு என்ன?
* கருணாநிதியின் மிரட்டலால் மீண்டும் அமைச்சரான ராசா,  தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது  ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகக்  குற்றம் சுமத்தினார். பதிலுக்கு  மாறன் சகோதரர்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் தமது  சன்  டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் ரூ. 60,000 கோடி ஊழல் எனச் செய்தி வெளியிட்டு  நாறடித்தனர். கண்கள் பனித்து இதயம் இனித்து , கருணாநிதி குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேர்ந்தபின் இவ்வூழல் மாறன் குடும்பத்தால் மறக்கப்பட்டது ஏன்?
* ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ராசாவுக்கு ஆதரவாக வந்த கருணாநிதி "ராசா ஒரு தலித்" எனக் கீழ்த்தர அரசியல் செய்வது ஏன்?
* ராஜீவ்காந்தி காலத்து போஃப்பர்ஸ் ஊழலைப் பிரமாண்டமாக்கிப் போராடிய கருணாநிதி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ஊழலே இல்லை என்று சொல்வது ஏன்?
* இத்தனைக்கும் பிறகும் மத்திய அரசும் பிரதமரும் ராசாவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்?

யாரேனும் விடை கூறுவரா?

இவ்வினாக்களுக்கெல்லாம் ஒரே விடை வேறொருவருக்காக வேறொரு சமயத்தில் ஜெயலலிதா  சொன்னதுதான்.

ஆம்!  Selective amnesia.

சனி, 13 நவம்பர், 2010

ஆள்கடத்தல்--அரசு--ஊடகம்--மக்கள்

கோவையில் மோகன்ராஜ் என்கிற மோகன கிருஷ்ணனைக் கோவைக் காவல்துறை "என்கவுண்டர்" கொலை செய்ததுதான் தமிழ்நாட்டில் இவ்வாரப் பரபரப்பு.

அவனைக் கொன்ற செய்தி வெளியானதும் கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் உட்பட அந்தப்பகுதி மக்கள் காவல்துறையைப் பாராட்டியும் மகிழ்ச்சி தெரிவித்தும் இனிப்பு வழங்கியும் "தீபாவளி" எனக்கூறியும் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

காவல்துறை செய்தது சரி என ஒரு பக்கமும் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இப்படிச் செய்தது தவறு என மறு பக்கமுமாக இப்போது கருத்துகள் வைக்கப்படுகின்றன. இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் வாதப்பிரதி வாதங்கள் நடக்கின்றன. காவல்துறை செய்யும் பரவலான "என்கவுண்டர்"கள் 1983-84 களில்  தமிழ்நாட்டில் அறிமுகமாயின. அன்று முதல் இன்று வரை  என்கவுண்டருக்குக் காவல்துறை கூறும் காரணம் மட்டும் மாறவில்லை.நம் பேசு பொருள் அது இல்லை என்பதால் நாம் அதற்குள் புக விரும்பவீல்லை.
******

சில போராளிக் குழுக்கள் சிறையில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிப்பதற்காக வி.ஐ.பி.களையோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையோ கடத்திக் கொண்டுபோய்ப் பணயக் கைதிகளாக்குவதுண்டு. வி பி சிங் ஆட்சியில், 1989 ஆம் ஆண்டு காஷ்மீர்ப் போராளிக் குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  (J K L F) மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது ஸயீதின் மகள் டாக்டர் ரூபையாவைக் கடத்திக்கொண்டுபோய்ப் பணயக்கைதியாக வைத்து அவ்வியக்கத்தின் உறுப்பினர்களான ஐவரைச் சிறை மீட்டது.. 1999 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் ‘ஹர்கதுல் முஜாஹிதீன்’ என்ற பாகிஸ்தானிய பயங்கரவாதக்குழுவினர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி மொத்தப் பயணிகளையும் பணயக்கைதிகளாக்கி இந்தியச் சிறையில் இருந்த மசூத் அசார், அகமது உமர் சயீத் சேக். முஸ்டாக் அகமது ஜர்கார் ஆகிய  மூன்று பயங்கரவாதிகளை மீட்டனர்.

1994 ஆம் ஆண்டில், தன் தம்பி அர்ஜுனனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோயம்புத்தூரைச்  சேர்ந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் சிதம்பரநாதன் என்பவரை அவரது தோட்டத்திலிருந்து பணயக்கைதியாக வீரப்பன் கடத்திச் சென்றான். பத்தாண்டுகளுக்கு முன் கருணாநிதியின் ஆட்சியில் 2000 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடிகர் ராஜ்குமார்  வீரப்பனால் கடத்தப்பட்டர். தன் சகாக்களின் சிறை மீட்பே வீரப்பனின் கோரிக்கை என்று சொல்லப் பட்டாலும்  வீரப்பனுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகக் கர்நாடக மாநில டி ஜி பி யாக இருந்த தினகர் தாம் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் கடத்தலுக்குச் சரியாக இரண்டாண்டுகளுக்குப் பின் கர்நாடக அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் பீகாரில், 4 போலீஸரை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்று 48 மணி நேரத்துக்குள்  சிறையில் உள்ள தம் இயக்கத்தவர் சிலரை விடுவிக்க வேண்டும் என்றும் போலீஸ் நடத்தும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்று கெடு விதித்தனர்.அரசு அவர்களின் கோரிகைக்குச் செவிகொடுக்காததால்  லூகாஸ் டெட்ரே என்ற காவலரைக் கொன்று வீசினர் மாவோயிஸ்ட்கள் .

இக்கடத்தல்களுக்குப் பின்னணிகளாகச் சில கோரிக்கைகளும்  இருந்தன.

******

இந்தியாவில் பரவலாகப் "பிள்ளைபிடிப்பவர்கள்" இருந்தே வந்துள்ளனர். சிறு குழந்தைகளைக் கடத்திக்கொண்டுபோய் வெளியூர்களிலோ வெளி மாநிலங்களிலோ பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் "பிச்சைத் தொழில் மாஃபியா"க் கும்பல்கள் இதற்கென நியமித்துள்ள ஆண் பெண் ஏஜண்டுகள் ஊருக்குள் வந்து குழந்தைகளைக் கடத்திச் செல்வர். பள்ளிக்கூடம் போவதற்கோ வீட்டுப்பாடம் செய்வதற்கோ முரண்டுபிடிக்கும் குழந்தைகளைப் “பிள்ளைபிடிக்காரன்" பெயரைச் சொல்லிப் பெற்றோர் மிரட்டியதும் உண்டு.

பிறந்த சில நாட்களான பச்சிளங்குழந்தைகளைப் பிரசவ ஆஸ்பத்திரிகளில் இருந்து கடத்திப் பணத்துக்காக விற்கும் கும்பல் அடிக்கடி பிடிக்கப்படுவதும் நடக்கின்றது.விபச்சார மாஃபியாக் கும்பல் இளம்பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் விறபதும் நடக்கின்றது

மும்பை போன்ற மாநகரங்களில் இருட்டுலக தாதாக்கள் பெரும் வணிகர்களையும் தொழிலதிபர்களையும் பணத்துக்காகவும் சிலரைத் தொழிற்போட்டியாளர்களுக்காகவும் கடத்தும் செய்திகளையும் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.   சென்னையில் வெள்ளைரவி, ஆசைத் தம்பி, கபிலன் போன்ற தாதாக்கள் பணத்துக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது பலரும் மறந்துவிட்ட செய்தி.

1978 ஆம் ஆண்டில் டில்லியில் கீதாசோப்ரா, சஞ்சய் சோப்ரா எனும் இரு குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்பட்டனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் மூன்று நாட்களுக்குப் பின் அக்குழந்தைகளின் உயிரற்ற  உடல்கள் மட்டுமே  கிடைத்தன. பில்லா, ரங்கா எனும் இருவர் அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் 14 வயதுச் சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக, தனஞ்சய் சட்டர்ஜி என்பவன்  தூக்கிலேற்றப்பட்டான்.

2005 -2006 ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகே உள்ள நோய்டாவில் ஒரு வீட்டிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள எட்டுக் குழந்தைகளைக் கொன்றதாக அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டட ஸுபாஷ்  வாக்குமூலம் கொடுத்திருந்தான்

தமிழ்நாட்டில் சமீப காலத்தில் குழந்தைகள் கடத்தல் அன்றாடச் செய்தி ஆகின்ற அளவுக்கு அதிகமாக நடக்கின்றது. அக்டோபர் 29 ஆம் தேதி கோவையில் பள்ளிக் குழந்தைகள் முஸ்கனும் ரித்தீஸும் கடத்தப்பட்டனர்.

நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டான். ஆறு மாதங்களுக்கு முன் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி மகனையே பணத்திற்காகக் கடத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. சட்டமன்றத்தின்  காங்கிரஸ் உறுப்பினர் பாளை அமரமூர்த்தியின் தம்பி மகனான ஒன்பதாம் வகுப்பு மாணவன் தர்மதுரையைக் கடத்திச் சென்று ஐம்பதுலட்சம் ரூபாய் பணயத் தொகை கேட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் மாணவன்  மீட்கப்பட்டான் "ஐம்பது லட்சம் ரூபாயைப் பெற்ற பின் சிறுவனைக் கொன்றுவீசி விட்டுத் தப்பிக்கத்  திட்டமிட்டிருந்தோம் "என இக்கடத்தலில் கைது செய்யப்பட்ட டிரைவர் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்தான்.

ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப் பட்டுப் பணத்துக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பில்லா, ரங்காவிலிருந்து கீர்த்திவாசனைக் கடத்திய பட்டதாரிகளான விஜய்யும் பிரபுவும் கொடுத்த வாக்குமூலமும் தர்மதுரையைக் கடத்திய டிரைவர் மனிகண்டனின் வாக்குமூலமும் இதை நிரூபிக்கின்றன.

பள்ளிக் குழந்தைகள் வாகன விபத்தில் இறக்கின்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிட்டால் அரசு உடனே பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிச் சட்டம் இயற்றியோ ஆணை பிறப்பித்தோ நடவடிக்கை எடுத்ததாகக் காட்டிக்கொள்ளும். கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் எரிந்து சாம்பலான பின்புதான் அரசு விழித்துக் கொண்டு பள்ளிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக ஆணை பிறப்பிக்கிறது. இதோ இப்போது அடுத்தடுத்துக் குழந்தைக் கடத்தல் நடந்தபின் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீடியா வெளிச்சமும் செய்திப்பரபரப்பும் உருவாக்கும் ஆவேசம் சில நாட்களில் முடிந்து விடும்; மக்களும் அடுத்த பரபரப்பான செய்தி வரும்போது பழையதை மறந்து விடுவர்.

பணத்திற்காகக் குழந்தைகளைக் கடத்துவதற்கும் பாலியல் வன்கொடுமை புரிவதற்கும் குற்றவாளிகளைத் தூண்டுவதில் திரைப்படங்களுக்கும் பங்கு இருக்கிறது. இயக்குநர் மிஸ்கீன் வெளியிட்ட 'அஞ்சாதே' திரைப்படம் இதைத்தான் கூறியது. “நல்ல படம்" என மக்கள் பார்த்து ரசித்தனர். ஆனால் மிஸ்கீனோ தாம் எடுத்தவற்றுள் “கீழ்த்தரமான படம்” என அப்படத்தைப் பற்றிக் கருத்துக் கூறியிருந்தார். குற்றவாளிகளைக் கூட ஹீரோவாகப் பார்க்கும் ரசிக மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. குழந்தைகளைக் கடத்திக் கொன்ற கேவலமான கொடிய குற்றவாளிகளான ரங்கா, பில்லாவின் பெயர்களில் சுடச்சுட  தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் திரைப்படங்கள் வெளிவந்து பணத்தைக் குவித்தன. திரைப்படங்களில் ரவுடி / தாதாக் கதாநாயகன் செய்யும் குற்றச் செயல்களை ரசிக்கிறோம்; பரபரப்பாக வழங்கப்படும் செய்திகளில் வரும் குற்றச் செயல்களைக் கண்டு கொதிக்கிறோம்; குதிக்கிறோம். இது இரட்டை மனோபாவம்.

டாக்டர் ரூபையா, நடிகர் ராஜ்குமார், இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள், அமைச்சர் நாகப்பா போன்றோரின் கடத்தலுக்குக் கொடுத்த முக்கியத்துவத் தையும் அவர்களை மீட்கக் காட்டிய தீவிரத்தையும் அரசு தன் ஊழியர்களான காவலர்களை மீட்பதற்குக் காட்டவில்லை.

இம்மாதம் 6 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விசுனம்பேட்டை காலனி தெருவைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகளான ஐந்தாம் வகுப்பு மாணவி கீர்த்திகா கொலை செய்யப்பட்டாள். கோவை, சென்னை போன்ற மாநகரங்களில் வாழும் பெரு வணிகர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டது  ஊடகங்களின்  கவனத்தை ஈர்த்தது; பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது! ஏழைச் சிறுமியின் கொலை மக்களிடம் ஆவேசத்தையோ கொதிப்பையோ  ஏற்படுத்தவில்லை

மனிதர்களின் உயிர் விலைமதிக்கவொண்ணாதது. வி.ஐ.பி.யின் உயிருக்கும் ஏழையின் உயிருக்கும் இடையே வேறுபாடு காட்டும்  அரசும் ஊடகங்களும  பொது மக்களும் வி.ஐ.பி.களின்  கடத்தலுக்கும் கோவை குழந்தைகளின் கொலைக்கும் சென்னை மாணவன் கடத்தலுக்கும் அளித்த முக்கியத்துவத்தை மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட நான்கு  போலீஸ்காரர்களின் கடத்தலுக்கும் சிறுமி  கீர்த்திகா  கொலைக்கும் தரவில்லை என்பது அனைவரின் இரட்டை முகத்தை  வெளிப்படுத்தும் சான்றாகும். சமூகப்  பொருளாதாரக் கல்வி ஏற்றத்தாழ்வு நோக்காமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளிப்பது நம் கடமை என அனைவரும் உணரும் நாள் எந்நாளோ?

சனி, 6 நவம்பர், 2010

சிவசேனா -- மூன்றாம் எடிசன் - 2

மாநிலவெறி, மண்ணின் மைந்தர், காவிச்சிந்தனை எனப் பல முகங்கள் காட்டினாலும் பால்தாக்கரேய்க்கும் சிவசேனாவுக்கும் அவை சுயநலத்திற்கான பல முகமூடிகள்தாம்.

மராட்டியர் அல்லாதவர்களை, பம்பாயிலிருந்து விரட்டும் கொள்கையுடைய சிவசேனா, தென்னிந்தியர்களையும் வட இந்தியர்களையும் குறிவைத்ததுபோல், குஜராத்தி, மார்வாடி வணிகர்களையும் தொழில் அதிபர்களையும் பகைத்துக் கொள்வதில்லை; "மராட்டியர்களுக்கு அவர்கள் வேலை தருகிறார்கள்" என்ற காரணத்தையும் சொல்லிக் கொள்வர் சிவசைனிகர்.

அகில இந்தியாவிலும் இருந்த ஜனநாயக சக்திகள் ஒருமித்த குரலில் எதிர்த்த நெருக்கடி நிலையை ஆதரித்ததன் மூலம், தன் மீதான தடையிலிருந்தும் கைதுகளிலிருந்தும் தன்னைக் காத்துக் கொண்டது சிவசேனா! ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது போல அதன் காவிக் கூட்டாளியான சிவசேனாவும் தடை செய்யப்பட்டு விடும் என்ற அச்சம் நிலவியபோது, தம் காவித் தலைமையை ஒதுக்கி வைத்துவிட்டு, தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நெருக்கடி நிலையை வரவேற்றார் பால்தாக்கரே! உலகமே சபிக்கும் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரையும் இந்தியாவே சபிக்கும் நாதுராம் கோட்சேவையும் புகழ்ந்து துதிக்கும் பால்தாக்கரே, நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமின்றி, இந்திரா காந்தியையும் நெருக்கடிநிலைக்காலக் கதாநாயகனான சஞ்செய் காந்தியையும் வெகுவாகப் புகழ்ந்தார். நெருக்கடி நிலை நடப்பில் இருந்த காலம் முழுவதும் தனது வழக்கமான போராட்டங்களையும் கோரிக்கை முழக்கங்களையும்கூட நிறுத்தி வைத்துக் கொண்டது சிவசேனா!

நெருக்கடிநிலை ரத்துச் செய்யப்பட்டு, 1977ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழைய காங்கிரஸ் என்றும் சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் ஊடகங்கள் பெயரிட்டிருந்த காங்கிரஸ் கட்சி, ஸம்யுக்த ஸோஷலிஸ்ட் கட்சி, ப்ரஜா ஸோஷலிஸ்ட் கட்சி, சுதந்திராக் கட்சி, பாரதீய லோக் தள், உட்படப் பல கட்சிகளுடன் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் பிரிவான ஜனசங்கம் கட்சியும் இணைந்து இந்திராகாந்திக்கெதிராக, ‘ஜனதாக் கட்சி’யை உருவாக்கித் தேர்தலைச் சந்தித்தனர். அத்தேர்தலில் சிவசேனா போட்டியிடவில்லை என்பதோடு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காகத் தீவிரமாகத் தேர்தல் பணியும் ஆற்றியது. ஆனால் அத்தேர்தலில் ஜனதாக் கட்சி வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. எனினும் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினர் தகுதியை இழக்க மாட்டோம் என்ற (ஜனசங்க)அமைச்சர்களாயிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானியின் பிடிவாதத்தால் --”இரட்டை உறுப்பினர்” எனும் சர்ச்சையால் -- ஜனதா ஆட்சி கவிழ்ந்தது; கட்சியும் உடைந்தது. ஜனசங்கத்தினர் தனியாகப் பிரிந்து பாரதீய ஜனதாக் கட்சியைத் தொடங்கினர்.

ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்தபின் 1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திராகாந்தி பல மாநில அரசுகளைக் கலைத்த போது மகாராஷ்டிர மாநில அரசையும் கலைத்தார். அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் சிவசேனா, காங்கிரஸுக்காக உழைத்தது. காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வரானவர் ஒரு முஸ்லிம்!. ஆம்! அப்துல் ரகுமான் அந்துலே!

மீண்டும் காவிக் கூட்டணியில் இணையக் காத்திருந்த சிவசேனாவுக்கு வாய்ப்பாக அமைந்தது தமிழ்நாட்டில் மீனாட்சிபுரத்தில் நடந்த மதமாற்றம். அகில இந்தியாவையும் உற்று நோக்கச் செய்த இம்மத மாற்றத்தால் ஆர் எஸ் எஸ் மற்றும் வி எச் பி இரண்டும் அதிர்ந்தன. “…….வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்றம்…. காஷ்மீரிலும் பஞ்சாபிலும் பிரிவினை கோரும் வன்முறை வெறியாட்டம்….. இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் ஆபத்து….” என இவ்விரண்டு இயக்கங்களும் குரல் கொடுக்க, பால்தாக்கரே மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறிப்பேச்சைத் தொடங்கினார். முஸ்லிம்களை மிக எளிதில் கொந்தளிக்கச் செய்வதற்காக அவர்களின் புனிதரான முகமது நபியைப் பற்றிப் பால்தாக்கரே இழிவாகப் பேச, கொதித்துப்போன முஸ்லிம்கள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் கான் தலைமையில் பால்தாக்கரேயின் படத்துக்குச் செருப்பு மாலையிட்டுக் கண்டன ஊர்வலம் நடத்தினர். கோபமடைந்த சிவசேனாக் கட்சியினர் நடத்திய கலவரத்தில் 258 உயிர்களும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் அழிக்கப்பட்டன. காவல் துறையும் சிவசேனாவின் சார்பாக நடந்து கொண்டது. இக்கலவரத்திலும் பால்தாக்கரே மீதோ அவரது சகக் குற்றவாளிகள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1986 ஆம் ஆண்டு சிவசேனா அனுசரித்த காவிவாரமும் கலவரங்களை நடத்தியது. 1992ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர்மசூதியை இடித்ததிலும் அதைத் தொடர்ந்து நடந்த பம்பாய்க் கலவரத்திலும் சிவசேனைக்கு முக்கியப் பங்குண்டு.

எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லிம்களைத் தாக்குவதற்குப் பாலதாக்கரே முன்னணியில் நிற்பார். நெருக்கடிநிலைக் காலத்தில் இந்தியாவின் தலைநகரான டில்லியிலிருந்து முஸ்லிம்களைத் துரத்தும் நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டு டில்லி ஜுமா மசூதியில் துப்பாக்கிச்சூடுவரை நடத்திய சஞ்செயைப் பாராட்டியதுபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சஞ்செய் காந்தியின் மகன் வருண் காந்தி "முஸ்லிம்களின் கையை வெட்டுவேன்" என முழங்கியபோது வருணின் பேச்சை வரவேற்றுப் பாராட்டினார். இதோ, இப்போது உலகெங்கும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகவும் பால்தாக்கரே குரல் கொடுத்தாயிற்று!

தனது காவிச்சாயம் கலையாமல் காத்துக் கொள்ளும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் கருத்துச் சுதந்திரம் என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தம்; யாரைப்பற்றியும் எதையும் பேசலாம்; எழுதலாம் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருவதை அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் நிரூபித்து வந்துள்ளன! ஆனால் பால்தாக்கரேய்க்கோ சிவசேனாவுக்கோ எதிராக யாராவது பேசினாலோ எழுதினாலோ, கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமை என்பவையெல்லாம் மறந்துவிடும் சிவசைனிகருக்கு; பேசியவர், எழுதியவர் மீது கடும் தாக்குதலைத் தொடுப்பர்.!

மகாரஷ்டிரமாநில அரசு, பாபாசாகிப் அம்பேத்கரின் நூல்களை வெளியிடும் திட்டத்தில், “Riddles in Hinduism” எனும் அம்பேத்கரின் ஆக்கத்தை வெளியிட்டது. உடனே சிவசேனா களத்தில் இறங்கியது. அம்பேத்கரின் நூல் இந்து மதத்தையும் இந்துக் கடவுளரையும் அவமதிப்பதாகக் கூறி உடனே அந்நூலைத் தடை செய்யுமாறு பெரும் கண்டனப் பேரணியை நடத்திய சிவசேனா, அம்பேத்கரையும் தலித்களையும் இழிவு படுத்திப் பேசிக் கருத்துச் சுதந்திரத்துக்கு மரியாதை(!) செலுத்தியது..

தனக்கு எதிரான விமர்சனங்களையோ கருத்துகளையோ பொறுத்துக் கொள்ளாத சிவசேனா, மம்ரிக் மற்றும் சாம்னா இதழ்கள் மூலம் பத்திரிகையாளார்கள்மீது எழுத்துத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தாலும் நேரடியாக அவர்களைத் தாக்குவதற்கும் தயங்கியதில்லை.

பம்பாயின் வாங்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட இருந்த கிரிக்கெட் திடலை சிவசேனாக் குரங்குப்படை குழிகளைத் தோண்டிச் சேதப்படுத்தியது. இதைக் கண்டித்துக் கடுமையான தலையங்கம் எழுதிய 'மகாநகர்' எனும் மராத்தி மொழி இதழின் அலுவலகத்தைத் தாக்கியது சிவசேனா! பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அராஜகத் தாக்குதலைக் கண்டித்துப் பத்திரிகையாளர்கள் நடத்திய ஊர்வலத்தில் சிவசைனிகர் கல்வீச்சு நடத்தியும் இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியும் பத்திரிகையாளர்களைக் காயப்படுத்தினர். அவர்களுள் மணிமாலா என்ற ஒரு பெண் பத்திரிகையாளாரின் தலையில் இரும்புத் தடியால் அடித்து அவரது மண்டை ஓட்டைச் சிதைத்தனர். சிவசேனாவின் ரவுடித்தனத்தைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்டித்த பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பற்றித் தன் பத்திரிகையில் மிக இழிவாகவும் கீழ்த்தரமாகவும் எழுதியதோடு மட்டுமின்றிப் பெண் பத்திரிகையாளர்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தலையங்கமும் தீட்டி மகிழ்ந்தது சிவசேனா.

இரண்டாண்டுகளுக்குப் பின் மீண்டும் மகாநகர் இதழ் ஆசிரியரைத் தாக்கினர் சிவசைனிகர். அடுத்த ஆறு மாதத்திற்குள் பால்தாக்கரேயின் நேரடிக் கண்காணிப்பில் பத்திரிகையாளர்கள் பன்னிருவர் தாக்கப்பட்டனர். தொடர்ந்து, மராத்தி மொழியில் அதிகமாக விற்பனையாகும் பத்திரிகையான 'லோக்மத்' இதழின் அலுவலகத்தையும் சிவசேனாவினர் சூறையாடிக் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தனர். “நான் ஓர் இந்தியன்” என்று சொல்லும் சுதந்திரத்தைக்கூட மறுக்கும் கேவலமான பிறவி பால்தாக்கரே! கிரிக்கெட் வீரர் சச்சின், "நான் ஓர் இந்தியன்; மும்பை அனைவருக்கும் சொந்தமானது" என்று கருத்துக் கூறியதற்காக, "மராத்தியர்களின் மனம் என்னும் பிட்சில் சச்சின் ரன் அவுட் ஆகிவிட்டார்" என்றும் "அவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடுவது சரியில்லை" என்றும் பால்தாக்கரே சாம்னா இதழில் தலையங்கத்தில் சச்சினைச் சாடிக் கடுமையாக எழுதியிருந்தார்.

தனிநபர் தம் வாழ்க்கைத் துணையைத் தேடும் விஷயத்தில்கூடப் பிறரின் உரிமையை விமர்சிப்பது இன்னும் கேவலமானது! இந்தியாவின் டென்னிஸ் தாரகை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை மணம் செய்துகொண்டதற்குக்கூட எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர் சிவசைனிகர்.

பாட்டன் பால்தாக்கரேயைப் போலவே கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காதவர் ஆதித்யதாக்கரே! அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜேம்ஸ் லாயின் (James W. Laine) என்பவர் எழுதிய Shivaji: Hindu King in Islamic India என்ற நூலைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்ன தாத்தா பால்தாக்கரேவின் வழியில், ரோஹிந்தன் மிஸ்த்ரி (Rohinton Mistry) எழுதிய Such a Long Journy எனும் நாவலை சிவசேனாவின் மாணவர் பிரிவான ‘பாரதீய வித்யார்த்தி சேனா’ மூலம் எரித்தார் ஆதித்யதாக்கரே! ("ரோஹிந்தனின் அதிர்ஸ்டம், அவர் கானடாவில் இருக்கிறார்; இங்கே இருந்திருப்பார் எனில் அவரையும் கொளுத்தியிருப்போம்" என்று பாரதீய வித்யார்த்தி சேனாவின் அங்கமான ஒருவன் டி.வி. கேமிராவின்முன் தைரியமாகச் சொன்னான்.) மும்பைப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து ரோஹிந்தன் மிஸ்த்ரியின் நாவலை அகற்றும்படி, இருபத்துநான்கு மணி நேரக் காலக்கெடு கொடுத்து ஆதித்ய தாக்கரே நடத்திய அதிரடிப் போராட்டமும் அதற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிந்ததும் ஆதித்யாவைச் சிவசேனாவின் இளைஞர் அணியின் தலைவர் பொறுப்புக்குப் பால்தாக்கரே நியமித்ததன் பின்னணியாக இருக்கலாம்.

பால்தாக்கரேயுடன் பிணங்கிக் கொண்டு, சிவசேனாவுக்குப் போட்டியாக, பால்தாக்கரேயின் கொள்கைகளைத் தாங்கித் தனியாக, ‘மகாராஷ்ட்ர நவநிர்மான் சேனா’வைத் தொடங்கி நடத்தும் ராஜ்தாக்கரேயின் தலைமையில்தான் முன்னர் இயங்கியது பாரதீய வித்யார்த்தி சேனா. அப்போது ராஜ்தாக்கரேயால் கவரப்பட்டு அவரின் தலைமையில் அணிவகுத்திருந்த மாணவர்களும் இளைஞர்களும் இப்போது அவரின் ‘மகாராஷ்ட்ர நவநிர்மான் சேனா’வில் பெருமளவில் இணைந்துள்ளனர். கடந்த 2009 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 6 % வாக்குகளைப் பிரித்து, இனி பாஜக - சிவசேனா ஆட்சி என்பது பகல் கனவோ என எண்ணும் அளவுக்கு ராஜ்தாக்கரேயால் ஏற்பட்ட பாதிப்பு, இனி வரும் தேர்தல்களில் சிவசேனாவுக்கு ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் இளைஞர்களைக் கவருவதற்காக ஆதித்ய தாக்கரேயை யுவசேனாவின் தலைவராக நியமித்துள்ளார் பால்தாக்கரே!

சிவசேனாவின் முதல் எடிஷனான பால்தாக்கரேயின் திருத்தப்படாத பதிப்பாகவே மூன்றாம் எடிஷனான ஆதித்யதாக்கரே இந்த ஆண்டின் தசராவில் வெளிவந்து இருப்பது, சிவசேனாவில் எவ்வித மாற்றத்தையும் திருத்தத்தையும் யாரும் எதிர்பார்க்கக் கூடாது என்ற செய்தியைத்தான் கூறுகிறது என்பது இதுவரையிலான அதன் நடவடிக்கைகள் நாட்டுக்கு உணர்த்தும் பாடம்.

சனி, 30 அக்டோபர், 2010

சிவசேனா -- மூன்றாம் எடிசன் - 1

இரு வாரங்களுக்கு  முன், ஒரே மாதிரியான இரு செய்திகளை ஒரே நேரத்தில் நாளிதழ்களில் படிக்க நேர்ந்தது. வடகொரியாவின் தலைவர் (கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆட்சிக்கும் அவரே தலைவர்) 'கிம் ஜோங் இல்' தமது வாரிசாகத் தம் மகன் 'கிம் ஜோங் உன்'னை நியமித்ததை அவரது மற்றொரு மனைவிக்குப் பிறந்து தந்தையை விட்டுப் பிரிந்திருக்கும்  மூத்த மகன்  'கிம் ஜோங் நாம்' விமர்சித்திருந்தார். எனினும் தம் தந்தை எடுத்த முடிவிற்குக் கட்டுப்படுவதாகவும்  நாட்டுக்குத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பில் தம்பிக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.

இந்தச் செய்தியைப் படித்தபோது, சின்னஞ்சிறு அளவில் இந்தியச்  சாயலிருப்பதாகத்  தோன்றியது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் பேரனும் கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் இளைஞர் அணியான 'யுவசேனா'வுக்குத் தலைவராகிறார்  என்ற அடுத்த செய்தி என் எண்ணத்தை உறுதிப்படுத்தியதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

வடகொரியத் தலைவர் தம் தந்தையான 'கிம் இல் ஸங்'ஙிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்று இப்போது தம் மகனுக்குத் தலைவர் பொறுப்பை அளிப்பதுபோல் பால்தாக்கரே -- உத்தவ் தாக்கரே -- ஆதித்ய தாக்கரே என முறையாக வருவதாகத் தோன்றியது.

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான பம்பாய் (மும்பை)நகரத்தில் தொழில் வாய்ப்புகள் மிகுந்திருந்தன. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் வாழ்ந்தவர்களும் தென்னிந்தியர்களும்  குஜராத்திகளும் வட மாநிலத்தவரும் பம்பாய் நகரத்தில் குடியேறிப் பலதரப்பட்ட வேலைகளிலும் வியாபாரங்களிலும்  ஈடுபட்டனர். குறிப்பாகத் தமிழர்களும் மலையாளிகளும் வெள்ளைக் காலர் வேலைகளைக் கைப்பற்ற, வட மாநிலத்தவர் அடிமட்ட  வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர்...

இந்தியாவின் மான்செஸ்டர் ஆன பம்பாயில்  கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு மிகுந்திருந்த அக்காலகட்டத்தில் தொழிற்சங்கங்களால் வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் கதவடைப்புகளும் நடந்தன. அதனால் பல தொழில்களும் அந்நகரத்தை விட்டு விலக்கிக் கொள்ளப் பட்டன. இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் ஆனது. வெள்ளைக் காலர் வேலைகளும் இல்லை; சிறு/ பெரு  வியாபாரங்களும் இல்லை; தொழிற்சாலைகளிலும் வேலை இல்லை; வருமானமும் இல்லை. விரக்தியில் இருந்த பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். தொழிலதிபர்களிடம்  'ஹப்தா' எனப்படும் பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர்.

மகாராஷ்டிர மாநிலம் உருவான 1960 ஆம் ஆண்டு, தம்மால் நிறுவப்பட்ட "மம்ரிக்" எனும் இதழில், பிற மாநிலத்தவரால் - குறிப்பாகத் தமிழர்களால்-- பறிக்கப்படும் மராத்தியனின் வேலை வாய்ப்பையும் மராத்திய இளைஞனுக்கு இழைக்கப்படும் அநீதியையும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் நிரப்பி இளைஞர்களைத் திரட்டி அவர்களின் பேராதரவால்  சிவசேனாவைத் தொடங்கினார் பால்தாக்கரே!

பம்பாயின் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய நீதியும் வாய்ப்பும் பெற்றுத் தருவோம் எனச் சொல்லி 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பால்தாக்கரேயால் 'சிவசேனா' துவங்கப்பட்டது. மாநில உரிமை எனத் துவங்கப்பட்டு பிற மாநிலத்தவர் மீது வெறுப்பு என வளர்க்கப்பட்டது சிவசேனா! தென்னிந்தியர்கள் குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்; கல்வியறிவுடன் வந்து,  சிறிய சம்பளத்தில் கூடத் தயக்கமின்றி  வேலையில் சேர்ந்திருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

சிவசேனா துவக்கப்பட்ட காலத்தில் இருந்து எண்பதுகள் வரை அவ்வமைப்பைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தது மகாராஷ்டிராவின் காங்கிரஸ் கட்சியே! பம்பாயில் செல்வாக்குப் பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் சிவசேனாவையும் அதன் ரவுடித்தனத்தையும் பாதுகாத்தது காங்கிரஸ் அரசுதான். காங்கிரஸ் மட்டுமின்றிக் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் பால்தாக்கரேயின் தயவை நாடி நின்றன.

"மகாராஷ்ட்ரா மராத்தியருக்கே" என்ற இனவெறியுடன் துவங்கப்பட்ட சிவசேனாவின் ரவுடியிஸப் 'பரிணாமம்'  இந்துத்துவ சக்திகளுடன் வெளிப்படையாகக்  கைகோர்த்த பின் முஸ்லிம் எதிர்ப்பு என்ற கோர முகத்துடன் காவிப் 'பரிமாணம்' பெற்றது. 1970 ஆம் ஆண்டு மே மாதத்தில் சிவசேனா தலைமையில்  பீவண்டியிலும் ஜல்கோனிலும்  முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய கலவரத்தில் எண்பத்திரண்டுபேர் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களுக்குச் சொந்தமான  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன்.

1974 ஆம் ஆண்டு, தலித்பேந்தர் இயக்கத்துக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்டு அதன் தலைவரான பகவத் ஜாதவைக்கொன்றது சிவசேனா!.

சமுதாய முன்னேற்ற அமைப்பு என்று கூறிக்கொண்டாலும் 1967 தேர்தலில் மறைமுகமாகக் கலந்து கொண்டது சிவசேனா. நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட வி.கே. கிருஷ்ணமேனன் மலையாளி என்பதாலும் எஸ்.ஏ. டாங்கே கம்யூனிஸ்ட் என்பதாலும் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் சோஷலிஸ்ட் என்பதாலும் அவர்களைத் தோற்கடிக்கக் களமிறங்கியது. எனினும் கம்யூனிஸ்டும் சோஷலிஸ்டும் அத்தேர்தலில் வெற்றிபெற்றனர்..

அவ்வாண்டிலேயே தாணா நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 17 இடங்களில் வென்று தலைவர் பதவியையும் பெற்றது சிவசேனா.  பின்னர் பம்பாய் மாநகராட்சி, சட்டசபை எனத் தேர்தல்களில் போட்டியிட்டு முழுநேர அரசியலில் குதித்தது.

மராத்திய இளைஞர்களிடையே கல்வியறிவும் விழிப்புணர்வும் அதிகரித்து அவர்களும் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளை அடையத் தொடங்கினர். மராத்திய மக்களின் முதன்மைப் பொழுதுபோக்கான நாடகங்களின் ஆதிக்கம் அதிகமாகி உலகியல் பார்வை விரிவு பெற்றதால் மண்ணின் மைந்தர்கள் கோஷம் தாக்குப் பிடிக்காமல் கலகலத்துப் போவதை உணர்ந்து கொண்ட பால்தாக்கரே, மிக விரைவாக முழுமையான காவிப் படையாக சிவசேனாவை மாற்றிக் கொண்டார்.

1992 ஆம் ஆண்டில் பாபர்மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் உள்ளாடையைக் கூட விலக்கிப் பார்த்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; முஸ்லிம்களின் தொழில் நிறுவனங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. இக்கலவரத்திற்கு சூத்திரதாரியான பால்தாக்கரேயையும் சிவசேனாவையும் கிருஷ்ணா கமிஷன் அடையாளம் காட்டியும் சட்டமோ நீதியோ அவர்களின் நிழலைக் கூடத் தொட முடியவில்லை என்பது அவர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.

மராத்தியரல்லாதவர், முஸ்லிம்கள், தலித்கள் எனும் மூன்று பிரிவினரையும் தாக்குவதும் விரட்டுவதுமே கொள்கை என்றாகி, மெல்ல மெல்லத் தொழிற்சங்கங்களையும் கைப்பற்றி, அரசியலில் ஈடுபட்டு, அரசு, காவல்துறை, தொழில்கள், திரைப்பட உலகம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மகாராஷ்ட்ராவின் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டது சிவசேனா.

பால்தாக்கரேயின் ரவுடித்தனத்தால் கவரப்பட்ட பாமக ராம்தாஸ்கூட, "இலங்கையில் கொல்லப்படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்ற போர்வையில் இவர்களை வைத்துக் கூட்டம் நடத்தினார். எந்தத் தமிழர்களையும் மலையாளிகளையும் பால்தாக்கரேயும் சிவசேனாவும் பம்பாய் நகரத்திலிருந்து அடித்து விரட்டினார்களோ, அந்தத் தமிழர்களும் மலையாளிகளும்  சிவசேனாவின் காவிப்பரிமாணத்தால் தத்தம் மாநிலத்தில் சிவசேனாவின் கிளைகளை அமைத்துள்ளனர் என்பது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம் என்பதை மறுப்பதற்கில்லை.

(மீதி அடுத்த வாரம்............)

சனி, 23 அக்டோபர், 2010

வரும் தேர்தலில் தி மு க ஆட்சியைப் பிடிக்கத் தடையாய் இருப்பவை


முன்னர் அலசப்பட்டவற்றில் இரண்டு செய்திகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

1. எதிர்வரும் தேர்தலில் தி மு க வென்று, எதிர்பார்த்துள்ளபடி கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் மு.க. ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு.


2. அனுதாப அலை ஏதும் வீசாவிட்டால் இப்போதுள்ள கூட்டணியால் ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது.


சென்ற வாரம் மதுரையில் திரட்டப்பட்ட மாபெரும் மக்கள் வெள்ளம், கடந்த அலசலில் சொல்லியிருந்ததைப்போல ஜெயலலிதாவுக்கு மயக்கத்தைத் தந்து விட்டது என்பது, “ஐம்பது லட்சம்” என்ற அவரது பேச்சில் தெளிவாகிறது.  அதுவும் எதிர்க்கட்சிகளின் சதியால் 75% மக்கள் வராமலேயே ஐம்பது லட்சம் மக்கள் அவருக்காகக் கூடினராம்..


"மதுரைக்கு வந்துபார்; கொலை செய்வோம்" என்று மிரட்டல் கடிதங்கள் வந்ததால் தென் மாவட்டத் தொண்டர்கள் திரண்டும் மக்கள் திரட்டப்பட்டும் மதுரையில் கூடினர்.  "ஜெயலலிதா தம் உரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே மக்கள் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர்"  என்றும் "டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து மது பாட்டில்களைக் கொள்ளையடித்துக் குடித்தனர்" என்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், மதுரையில் கூடியதில் பாதி, கட்சிக்காரர்கள் அல்லர்; திரட்டப்பட்ட கூட்டம் என்பதில் ஐயமில்லை.  தொண்டர்களை உசுப்பேற்றிக் கூட்டத்தைத் திரட்டுவதற்காகக்கூட மிரட்டல் கடிதங்கள் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் கூறும் கருத்து தள்ளிவிடத் தக்கதன்று. தாக்கும் எண்ணம் உள்ளவர்கள் பல முறை மிரட்டல் கடிதங்களை அனுப்பிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது சாதாரண அறிவுடையோருக்கும் புரியும்.

மாபெரும் கூட்டத்தைக் கூட்டித் தம் செல்வாக்கைக் காட்டி, அதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்குவதுதான் திட்டம் என்றால் ஜெயலலிதா அத்திட்டத்தின் முதல் கட்டத்தில் ஜெயித்து விட்டார் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


ஏனெனில் நாள்தோறும் மாறும் வானிலைபோல் அரசியல் சூழ்நிலையும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. நேறறுப்போல் இன்றில்லை. தமிழகத்தை ஆளும் தி மு க தன் வலிமையில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருக்க வேண்டுமானால் ஆட்சியிலும் கட்சியிலும் கருணாநிதி கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களும் இலவசங்களும் மட்டுமே வாக்குகளைச் சேகரித்துத் தந்து விடும் என நம்பும் அளவுக்குக் கருணாநிதி அரசியல் அறியாதவரல்லர். அவர் அறிவித்த திட்டங்களையும் இலவசங்களையும் மக்களிடத்தில் சேர்க்கும் பணியைச் செய்யும் வருவாய்த்துறை போன்ற பல துறை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்த்த அளவு ஊதிய உயர்வு கிடைக்காமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள வேறுபாடும் தமிழக அரசின் பிற துறைகளின் ஊழியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஊதியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வும் இவர்களை விரக்தியில் வைத்துள்ளன.

அடுத்து, தமிழகத்தில் திடீரென உயர்ந்துள்ள கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல், மணல் போன்றவற்றின் கற்பனைக் கெட்டா  விலை உயர்வு, சொந்தவீடு எனும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களுக்குக் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் கொடுத்துள்ளது.

கருணாநிதி, எவ்வளவுதான் இலவசங்களை அள்ளி வழங்கினாலும் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதில் அக்கறைகாட்டும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய முடியா வண்ணம் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் காய்கறிகளின் விலையும் தாறுமாறாக ஏறி வரும் நிலையை அவசர நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டிவரும். ஏழை முதல் கோடீஸ்வரன்வரை அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வும்கூட இந்தியாவை ஆண்ட ஜனதாக் கட்சி ஆட்சியை இழக்க நேர்ந்த காரணங்களுள் ஒன்றாக அப்போது கூறப்பட்டதைக் கருணாநிதிக்கு நாம் நினைவூட்டத் தேவையில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அடிக்கடி உயரும் எரிபொருள் விலைகளால் தனியார்ப் பேருந்துகள் தம் விருப்பத்திற்கேற்பக் கட்டணங்களை உயர்த்துவதையும் தனியார்ப் பள்ளிகளின் கல்விக் கட்டண உயர்வுக் குழப்பங்களும் மின்கட்டண உயர்வும் மக்களின் அதிருப்தியைக் கூட்டுகின்றன.

இந்த அதிருப்திகள் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ய்பைத் தள்ளிவிட முடியாது. ‘அடுத்த ஆட்சியும் தமதே’ எனும் தி.மு.க.வினரின் கனவு பலிப்பதற்குத் தடையாக உள்ள இவற்றை ஜெயலலிதா முறையாகப் பயன்படுத்திக் கொண்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மற்றும் உள்ள பொதுவான வாக்காளர்களை வளைக்கலாம். கூடவே காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி முயற்சியை விடாமல் தொடரலாம். அது தி.மு.க.வுக்குக் கடும் சவாலாகவே இருக்கும்.

அதுபோல,

. . . .  அழகிரி கொடுத்து வரும் தலைவலிகள் வரும் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

. . . .   உட்கட்சிப் பூசலால் தி.மு.க. நொண்டியடித்தால், காங்கிரஸ்,  தி.மு.க. கூட்டணியில் தொடர விரும்பாது. வேகமாக ஓடும் குதிரையில்தான் சவாரி செய்ய எவருமே விரும்புவர்.

. . . .   அடுத்து வர இருக்கும் மத்திய அமைச்சரவை மாற்றத்தில் டெலிகாம் அமைச்சர் ராசாவின் இலாகா மாறலாம்; அல்லது பதவியே பறிக்கப்படலாம். அப்படி ஒரு நிலை வரும்போது காங்கிரஸ் தி.மு.க. உறவு ஊசலாடலாம்.         

. . . . வாய்ப்புக்காககவே காத்திருக்கும் ஜெயலலிதா மாபெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுகிறார். முன்னர் ஜெயலலிதா சோனியாவைக் கீழ்த்தரமாகத் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை சோனியா மறந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுக்குக் கதவு திறக்கலாம். காங்கிரஸ் கட்சியில் உள்ள இளங்கோவன் போன்ற தி.மு.க. எதிர்ப்பாளார்கள் ராகுல்காந்தியின் மூலம் இதற்கு முயலலாம்.


கருணாநிதி உடனடியாகக் களமிறங்கிக் கட்சியிலும் ஆட்சியிலும் தம் பிடியை இறுக்கி, விலைவாசிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து,  உட்கட்சிப் பூசலையும் வெற்றிக்குத் தடையாய் உள்ளவற்றையும் களைந்து விட்டுக் காங்கிரஸ் கட்சியுடன் சிலவற்றில் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் இப்போதிருக்கும் கூட்டணி நிலைக்கும். ராமதாஸின் பா.ம.க.வும் இக்கூட்டனியில் இணைந்து விட்டால், மீண்டும் தி.மு.க. ஆட்சி எனும் தி.மு.க.வின் கனவு  பலிக்கும்.