அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) விவகாரம் கருணாநிதி நினைத்ததை விடப் பூதாகரமாகி விட்டது. ராசாவின் ராஜினாமாவுடன் பிரச்சனை ஓயும் எனத் தப்புக்கணக்குப் போட்டிருந்தார் கருணாநிதி.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சனையைத் துவக்கிய உடனேயே ராசா பதவியைத் துறந்திருந்தால் அப்போதே அடங்கியிருக்க வேண்டிய விவகாரம் கருணாநிதியின் தப்புக்கணக்கால் இன்று மன்மோகன்சிங்கின் பிரதமர் பதவியையே காவு கேட்கும் அளவுக்கு வந்து விட்டது. இரு நாட்களுக்கு முன் பீ.ஜே.பி.யினர் நடத்திய தேசீய ஜனநாயகக் கூட்டணிப் பேரணியில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்காவிட்டால் பிரதமர் தம் பதவியை ராஜினாமாச் செய்யட்டும் என அறைகூவல் விடுத்துள்ளனர்.
துவக்கத்தில் இருந்தே "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்தவை அனைத்தும் பிரதமருக்குத் தெரியும்"என்றே ராசா கூறிவந்தார். பிரதமரும் ராசாவுக்கு ஆதரவாகவே கருத்துக் கூற்யிருந்தார். இதனால் அச்சம் தவிர்த்த கருணாநிதியும் ராசாவும் பதவி துறக்கும் பேச்சுக்கே இடமில்லை என உறுதியாகச் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் நாடாளுமன்றத்தை முடக்கிய பின், மத்திய அரசின் கடினமான தாக்கீதுக்குப் பின், அமைச்சராக இருந்த ராசாவை முன்னாள் அமைச்சர் ஆக்குவதற்குக் கருணாநிதி ஒப்புதல் அளித்தார்."நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி விடக்கூடாது என்ற நல்லெண்னத்தில்தான் ராசாவின் ராஜினாமா" எனச் சப்பைக்கட்டு, கருணாநிதியால் சொல்லப்பட்டது.
விடாது கருப்பு என்பது போல,ராசா பதவி விலகினாலும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடுவதாக இல்லை. பொதுக் கணக்குக் குழுவின் முன் நான் ஆஜராவேன் என மன்மோகன்சிங் சொன்னதைப் புறந்தள்ளிவிட்டு, ஜே.பீ.சீ. தான் வேண்டும் என அடம்பிடித்து நிற்கின்றன.
இதனிடையே உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ. ரெய்டுகள் தொடங்கியுள்ளன. இதில்தான் கருணாநிதி ஆடிப்போயுள்ளார்.
தம் இரண்டாம் வீட்டுடன் நீரா ராடியா நடத்திய உரையாடல் ஒலிநாடா எழுப்பிய சூட்டைக் குறைக்கலாம் என மலையேறிய கருணாநிதியை அங்கும் நிம்மதியாக இருக்க விடாமல் மலையிறங்க வைத்துவிட்டது சி.பி.ஐ. ரெய்டுச் செய்தி.
ராசாவின் வீடுகளில் மட்டுமின்றி, அவரின் உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், அவரிடம் பணிபுரிந்த அதிகாரிகள் எனப் பலரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் தமிழ் மையமும் சி.பி.ஐ சோதனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.அடுத்த சோதனை இலக்குக் கனிமொழியின் வீடும் அலுவலகமும்தாம் என்பதை ஊகிக்கப் பெரும் சிந்தனைத் திறன் தேவையில்லை.
சிபிஐ ரெய்டைத் தொடர்ந்து ராசாவை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நேரத்தில் அவர் அப்பலோவுக்குச் சென்றது "கைதுக்கு அஞ்சி நாடகமாடுகிறார்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது தவிர்க்க முடியாததாகி விட்டது. ராசாவின் கைது இன்றில்லாவிட்டாலும் நாளை நடப்பது உறுதி. ராசாவின் கைது திமுக - காங்கிரஸ் கூட்டணி மரத்தை முறித்துப்போட விழும் கோடரி எனலாம்.
ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் டெல்லியில் நடத்திய 'ப்ளீனரி' மாநாட்டில் கூட்டணி பற்றிய பேச்சுகள் எழவில்லை என்றாலும் ஊழலுக்கு எதிராக சோனியாகாந்தி விடுத்த அறைகூவல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என அவர் ஆணித்தரமாகக் கூறியதைக் காங்கிரஸில் இருக்கும் இளங்கோவன் போன்ற தி மு க எதிர்ப்பாளர்கள் தமக்கு ஆதரவான சமிக்ஞையாகவே கொள்கின்றனர்.
அதே சமயம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர் காங்கிரஸாரைச் சந்தித்த ராகுல்காந்தி காங்கிரஸ் கூட்டணி பற்றி எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு தி மு க உடனான கூட்டனியை முறித்துக்கொள்வது அறிவுடைமையாகாது என்ற கருத்தும் காங்கிரஸ் மேலிடத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கும் விசாரணையும் ரெய்டுகளும் இப்போது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடப்பதால் வழக்கில் யார்மீதும் இதுவரை காவல்துறை கைது நடவடிக்கையோ நீதிமன்றத் தண்டனையோ இல்லாத நிலையில், அவசரப்பட்டு ஒரு உறுதியான கூட்டாளியைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
அதேபோல, தி.மு.க.வின் உறவை முறித்துக் கொண்டால் தனியாகவோ அல்லது சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணியாகவோ தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அல்லது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும். தனியாக நின்றால் கவுரவமான தோல்வி கிடைக்கும்; அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து நின்றால் கவுரவமே கிடைக்காது எனவும் காங்கிரஸில் சிலர் கருதுகின்றனர். மேலும் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று முடிவான பின் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் விரும்பிய தொகுதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ராசாவைப் பதவி விலக்கினால் தாம் ஆதரவு தருவதாக ஜெயலலிதா சொன்னதைப் புறக்கணித்த காங்கிரஸ் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. உறவை நாடிப்போனால் ஜெயலலிதாவின் கை மேலோங்கியிருக்கும் நிலையில், வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் குறிப்பறிந்து காங்கிரஸ் கட்சியின் தலையில் கட்ட அ.இ.அ.தி.மு.க. முயலும்.ஒரு பக்கம் குடும்பத்தில் நடைபெறும் பனிப்போர், மறுபக்கம் சி.பி.ஐ ரெய்டு என ரொம்பவே மனம் நொந்து இருக்கும் அரசியல் சாணக்கியர் கருணாநிதி, "ராசா குற்றம் செய்ததால் நீக்கப் பட்டார்" என்று ராசாவை கழட்டி விட்டு விட்டுக் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் கூட்டணியை முறிப்பதால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. திமுகவுக்கே இழப்பு அதிகம். திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என்பதே கேள்விக் குறியாகி விடும்.
ஆனால் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள சோனியாவின் மவுனம் இவ்விஷயத்தில் கருணாநிதியை முள் முனையில் நிறுத்தியிருப்பது மட்டும் உண்மை.
(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)



2 கருத்துகள்:
அலசல் நல்லாருக்கு.
நிறைய அலசுங்கள்
விவரமான பதிவு,தொடருங்கள்
கருத்துரையிடுக