ஒவ்வொரு நாடும் தத்தமது அரசியல் சட்டத்திற்கேற்பப் பல தடைச்சட்டங்களை இயற்றி நடை முறைப்படுத்துகின்றன. அவை அவ்வந்நாடுகளின் உரிமையும் கூட. அதில் நாம் கருத்துச் சொல்லவோ மறுப்புச் சொல்லவோ உரிமையில்லை. அவ்வகையில் பாகிஸ்தான் நாடும் ஒரு 'மத நிந்தனைச் சட்டத்தை' வகுத்துள்ளது. 96 விழுக்காடு முஸ்லிம்களைக் குடிமக்களாகக் கொண்ட அந்நாடு, அரசியல் சட்டத்தில், "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு" என அழைக்கப்படுவதால் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் கடுமையான, 'மத நிந்தனைத் தடுப்புச் சட்டமும்' உள்ளது. மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.
இந்தியாவில் நீதிபதிகளுள் பெரும்பாலோரும் இந்துக்களாக இருப்பது போலவே பாகிஸ்தானிலும் பெரும்பாலும் முஸ்லிம்களே நீதிபதிகளாக உள்ளனர். ஆல்வின் ராபர்ட்ஸ் எனும் கிறிஸ்தவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். ராணா பகவன் தாஸ் எனும் இந்துவும் அப்பதவியில் இருந்துள்ளார். ஜம்ஷாயித் ரகுமதுல்லா எனும் கிறிஸ்தவர் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்துள்ளார். என்றாலும் மதநிந்தனைக் குற்றவழக்கை முஸ்லிம் நீதிபதி மட்டும்தான் விசாரிக்க முடியும்.
பாகிஸ்தானில் அகமதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோரும் இந்துக்களும் சீக்கியர்களும் கிறிஸ்துவர்களும் மதச்சிறுபான்மையினராவர். ஜெனெரல் ஜியாவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மத நிந்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1988ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் எழுநூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனலாம். இதில் ஐம்பது விழுக்காடு வழக்குகள் முஸ்லிம்கள் மீதும் பதியப்பட்டுள்ளன. அகமதிகளும் கிறிஸ்தவர்களுள் பலரும் இச்சட்டத்தின் கீழ் வழக்கில் சிக்கியுள்ளனர். அவ்வகையில் அண்மை வழக்கு ஆஸியாபீ எனும் நாற்பத்தைந்து வயதான கிறிஸ்தவப் பெண் மீது தொடுக்கப்பட்டதாகும்.
முஸ்லிம்களின் புனிதரான முகமது நபியைக் குறித்து அவமரியாதையாகப் பேசியதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஏறத்தாழப் பதினைந்து மாதங்கள் சிறையில் இருக்கும் ஆஸியாபீபிக்குக் கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி பஞ்சாப் பகுதியில் உள்ள ஒரு செஷன்ன்ஸ் நீதிமன்றம் மதநிந்தனைச் சட்டம் பிரிவு 295 C படி தூக்குத் தண்டனை விதித்த செயல் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களைத் திடுக்கிட வைத்தது. போப் பெனெடிக்ட் XVI உடனடியாக அப்பெண்ணை விடுதலை செய்யும்படிக் கோரியுள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இச்சட்டத்தின் கீழ்த் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தால் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு இதுவரை இச்சட்டத்தின்கீழ் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீ சார்பாக அப்பீல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இதில் தலையிட்டு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அந்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தும்படி நீதிமன்றத்தை வேண்டியுள்ளார். ஆஸியாபீ நிரபராதி என்றும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீயின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பு அதிபர் சர்தாரி ஆஸியாபீக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது எனத் தலைமை நீதிபதி காஜாஷரீஃப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 03/12/2010 அன்று நடந்த வெள்ளிக்கிழமைக் கூட்டுத் தொழுகையின்போது யூசுப் குரைஷி எனும் முல்லா ஆஸியாபீயைக் கொலை செய்பவருக்கு ஐந்துலட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இவ்வழக்கு எப்படிப் புனையப்பட்டது? ஆஸியாபீ சொல்வது என்ன?
விவசாயக் கூலியான ஆஸியாபீபியை அவருடன் வேலை செய்யும் மற்றவர்கள் மதம் மாறும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளனராம். தம் மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளத் தக்க காரணம் எதுவும் இல்லை எனக்கூறி, மதம் மாற மறுத்து வந்திருக்கிறார் அவர். இடையே அவரது வீட்டிலிருந்து வெளியேறித் தெருவில் சேரும் கழிவு நீரினால் மற்றவர்களுடன் பிரச்சனை வேறு இருந்துள்ளது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுக்காக ஆஸியாபீ இறைத்துத் தந்த குடிநீரைக் குடிக்க மறுத்த பெண்களிடம் "ஏன்" என வினவியுள்ளார் ஆஸியாபீ. "முஸ்லிமல்லாத ஆஸியாபீயிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது" எனச் சொன்ன பெண்களுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு இப்படி ஒரு புகாராகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் ஆஸியாபீபி.
பாகிஸ்தானில் தனிப்பட்ட தகராறுகள் கூட மதநிந்தனைப் புகாராகச் சொல்லப்படுகின்றன என்பதால் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அரசால் யோசிக்கப்படுகிறது. இதனிடையே மத அமைப்பைச் சேர்ந்த பலரும் ஆஸியாபீக்கு மரணதண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் எனவும் அதிபர் ஆஸிஃப் சர்தாரி ஆஸியாபீபிக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது எனவும் மதநிந்தனைச் சட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டுவரக் கூடாது எனவும் போராடுகின்றனர். முன்னர் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களும் இவர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.
மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருப்போர் விடுதலை செய்யப்பட்டோ பிணையிலோ சிறையிலிருந்து வெளிவந்தாலும் கூட மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படும் அவலமும் நடக்கிறது.
முஸ்லிம்களின் வேதமான குரானின் சில பக்கங்களை எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி பிணையில் வெளிவந்த இம்ரான் லதீஃப் எனும் 22 வயது கிறிஸ்தவ இளைஞன் நவம்பர் 11ஆம் தேதி ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவ்வாண்டு ஜூலையில் கிறிஸ்தவர்களான பாஸ்டர் ராஷித் இம்மானுவேல் மற்றும் அவரது சகோதரர் ஸாஜித் ஆகியோர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மதபோதகர் இமானுவேல் மதப்பிரச்சரத்துக்காக வெளியிட்ட கையேட்டில் முகமது நபியை இழிவுபடுத்தும் வாசகங்கள் அடங்கியிருந்ததால் மதநிந்தனை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு வெளியே கொண்டுவரப்படும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொலையைக் கண்டித்துக் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாபாஸ் பட்டியும் மதநிந்தனை செய்துவிட்டதாக முல்லா ஒருவர் குற்றம் சாட்டினார்.
இப்படி மத நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டோருள் சுமார் 20 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல விடுதலையான பலரும் - குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் - கொலைக்கு அஞ்சித் தலைமறைவாக வாழுகின்றனர். அது மட்டுமின்றிப் பல கிறிஸ்தவக் குடும்பங்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. அதை விளக்கப்புகின் விரியும்.
ஆஸியாபீபி பதினைந்து மாதங்கள் சிறையில் இருந்ததைப்போல ஜைனப்நிஸா எனும் அறுபது வயதான முதிய பெண் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் மதநிந்தனைக்காகக் காவலில் இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு குரானை அவமதித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட மனநிலை பிறழ்ந்த ஜைனப் நிஸாவைப் பாகிஸ்தான் காவல்துறை மனநோய் மருத்துவமனையில் காவலில் வைத்திருந்தது. விசாரணையோ தண்டனையோ இன்றிக் காவலில் இருந்த அம்முதிய பெண் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இவ்வாண்டு ஜூலை மாதம் லாகூர் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என அழைக்கப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் பல நேரங்களிலும் தனிப்பட்ட பகையையும் கோபதாபங்களையும் தீர்ர்ப்பதற்கும் பழிவாங்குவதறகும் பயன்படுவதைப் போல பாகிஸ்தானில் மதநிந்தனைச் சட்டம் பயன்படுகிறது. இச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் புனையப்பட்டவையே! நிறைய மத நிந்தனை வழக்குகள் லாகூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முஸ்லிம்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீது சட்டத்தின் துணையோடும் சட்டத்தைக் கையில் எடுத்தும் நிகழ்த்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மதவெறிக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அந்நாட்டரசு தடுமாறுவது ஒருபுறம்; பொதுமக்களான முஸ்லிம்கள் மதநிந்தனைச் சட்டத்தைத் தம் விருப்பு வெறுப்புக்கேற்பப் பயன்படுத்த நினைப்பது மறுபுறம் என பாகிஸ்தானின் சிறுபான்மைச் சமுதாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மத உரிமையும் மனித உரிமையும் பாதுகாக்கப் படாதவரை பாகிஸ்தான் அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகவே மனித உரிமை ஆர்வலர்கள் கருதுவர். நீதிமன்றங்கள் மட்டுமே அந்த அவப்பெயரிலிருந்து பாகிஸ்தானைக் கரையேற்ற முடியும்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக