சனி, 25 டிசம்பர், 2010

முள்முனையில் கருணாநிதி

அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) விவகாரம் கருணாநிதி நினைத்ததை விடப் பூதாகரமாகி விட்டது. ராசாவின் ராஜினாமாவுடன் பிரச்சனை ஓயும் எனத் தப்புக்கணக்குப் போட்டிருந்தார் கருணாநிதி.

2 ஜி ஸ்பெக்ட்ரம்  முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சனையைத் துவக்கிய உடனேயே ராசா பதவியைத் துறந்திருந்தால் அப்போதே அடங்கியிருக்க வேண்டிய விவகாரம் கருணாநிதியின் தப்புக்கணக்கால் இன்று மன்மோகன்சிங்கின் பிரதமர் பதவியையே காவு கேட்கும் அளவுக்கு வந்து விட்டது. இரு நாட்களுக்கு முன் பீ.ஜே.பி.யினர் நடத்திய தேசீய ஜனநாயகக் கூட்டணிப் பேரணியில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்காவிட்டால் பிரதமர் தம் பதவியை ராஜினாமாச் செய்யட்டும் என  அறைகூவல் விடுத்துள்ளனர்.

துவக்கத்தில் இருந்தே "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்தவை அனைத்தும் பிரதமருக்குத் தெரியும்"என்றே ராசா கூறிவந்தார். பிரதமரும் ராசாவுக்கு ஆதரவாகவே கருத்துக் கூற்யிருந்தார். இதனால் அச்சம் தவிர்த்த கருணாநிதியும் ராசாவும் பதவி துறக்கும் பேச்சுக்கே இடமில்லை என உறுதியாகச் சொன்னார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் நாடாளுமன்றத்தை முடக்கிய பின், மத்திய அரசின் கடினமான தாக்கீதுக்குப் பின், அமைச்சராக இருந்த  ராசாவை முன்னாள் அமைச்சர் ஆக்குவதற்குக் கருணாநிதி ஒப்புதல் அளித்தார்."நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி விடக்கூடாது என்ற நல்லெண்னத்தில்தான் ராசாவின் ராஜினாமா" எனச் சப்பைக்கட்டு, கருணாநிதியால் சொல்லப்பட்டது.

விடாது கருப்பு என்பது போல,ராசா பதவி விலகினாலும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடுவதாக இல்லை. பொதுக் கணக்குக் குழுவின் முன் நான் ஆஜராவேன் என மன்மோகன்சிங் சொன்னதைப் புறந்தள்ளிவிட்டு, ஜே.பீ.சீ. தான் வேண்டும் என அடம்பிடித்து நிற்கின்றன.

இதனிடையே உச்ச நீதிமன்றம்  இவ்விஷயத்தில் தீவிரமாகத் தலையிட்டுள்ளதால் சி.பி.ஐ. ரெய்டுகள் தொடங்கியுள்ளன. இதில்தான் கருணாநிதி ஆடிப்போயுள்ளார்.

தம் இரண்டாம் வீட்டுடன் நீரா ராடியா நடத்திய உரையாடல் ஒலிநாடா எழுப்பிய சூட்டைக் குறைக்கலாம் என  மலையேறிய கருணாநிதியை அங்கும் நிம்மதியாக இருக்க விடாமல் மலையிறங்க வைத்துவிட்டது சி.பி.ஐ. ரெய்டுச் செய்தி.

ராசாவின் வீடுகளில் மட்டுமின்றி, அவரின் உடன் பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், அவரிடம் பணிபுரிந்த அதிகாரிகள் எனப் பலரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது கருணாநிதிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் தமிழ் மையமும்  சி.பி.ஐ சோதனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது.அடுத்த சோதனை இலக்குக் கனிமொழியின் வீடும் அலுவலகமும்தாம் என்பதை ஊகிக்கப் பெரும் சிந்தனைத் திறன் தேவையில்லை.

சிபிஐ ரெய்டைத் தொடர்ந்து ராசாவை விசாரிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட நேரத்தில் அவர் அப்பலோவுக்குச் சென்றது "கைதுக்கு அஞ்சி நாடகமாடுகிறார்" என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது தவிர்க்க முடியாததாகி விட்டது. ராசாவின் கைது இன்றில்லாவிட்டாலும் நாளை நடப்பது உறுதி. ராசாவின் கைது திமுக - காங்கிரஸ் கூட்டணி மரத்தை முறித்துப்போட விழும் கோடரி எனலாம்.

ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ் டெல்லியில் நடத்திய 'ப்ளீனரி' மாநாட்டில் கூட்டணி பற்றிய பேச்சுகள் எழவில்லை என்றாலும்  ஊழலுக்கு எதிராக சோனியாகாந்தி விடுத்த அறைகூவல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைச் சகித்துக் கொள்ள முடியாது என அவர் ஆணித்தரமாகக் கூறியதைக்  காங்கிரஸில் இருக்கும் இளங்கோவன் போன்ற தி மு க எதிர்ப்பாளர்கள் தமக்கு ஆதரவான சமிக்ஞையாகவே கொள்கின்றனர்.

அதே சமயம் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர் காங்கிரஸாரைச் சந்தித்த ராகுல்காந்தி காங்கிரஸ் கூட்டணி  பற்றி எந்தக் குறிப்பும் கொடுக்கவில்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு தி மு க உடனான கூட்டனியை முறித்துக்கொள்வது அறிவுடைமையாகாது என்ற கருத்தும் காங்கிரஸ் மேலிடத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கும் விசாரணையும் ரெய்டுகளும் இப்போது உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடப்பதால் வழக்கில் யார்மீதும் இதுவரை காவல்துறை கைது நடவடிக்கையோ நீதிமன்றத் தண்டனையோ இல்லாத நிலையில், அவசரப்பட்டு ஒரு உறுதியான கூட்டாளியைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

அதேபோல, தி.மு.க.வின் உறவை முறித்துக் கொண்டால் தனியாகவோ அல்லது சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணியாகவோ தேர்தலைச் சந்திக்க வேண்டும்; அல்லது ஜெயலலிதாவுடன் கூட்டணி  வைக்க வேண்டும். தனியாக நின்றால் கவுரவமான தோல்வி கிடைக்கும்; அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து நின்றால்  கவுரவமே கிடைக்காது எனவும் காங்கிரஸில் சிலர் கருதுகின்றனர். மேலும்  அ.இ.அ.தி.மு.க.வுடன்    கூட்டணி என்று முடிவான பின் காங்கிரஸ்  கேட்கும் தொகுதிகளின்  எண்ணிக்கை மற்றும் விரும்பிய தொகுதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ராசாவைப் பதவி விலக்கினால் தாம் ஆதரவு தருவதாக ஜெயலலிதா சொன்னதைப் புறக்கணித்த காங்கிரஸ் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. உறவை நாடிப்போனால் ஜெயலலிதாவின் கை மேலோங்கியிருக்கும் நிலையில், வெற்றி பெற முடியாத தொகுதிகளைக் குறிப்பறிந்து காங்கிரஸ் கட்சியின் தலையில் கட்ட   அ.இ.அ.தி.மு.க. முயலும்.

ஒரு பக்கம் குடும்பத்தில் நடைபெறும் பனிப்போர், மறுபக்கம் சி.பி.ஐ ரெய்டு என ரொம்பவே மனம் நொந்து இருக்கும் அரசியல் சாணக்கியர் கருணாநிதி, "ராசா குற்றம் செய்ததால் நீக்கப் பட்டார்" என்று ராசாவை கழட்டி விட்டு விட்டுக்  காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் கூட்டணியை முறிப்பதால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. திமுகவுக்கே இழப்பு அதிகம். திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத நிலையில் திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்குமா என்பதே கேள்விக் குறியாகி விடும்.

ஆனால் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள சோனியாவின் மவுனம் இவ்விஷயத்தில் கருணாநிதியை முள் முனையில் நிறுத்தியிருப்பது மட்டும் உண்மை.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)

சனி, 18 டிசம்பர், 2010

கருணாநிதி ஒரு கம்யூனிஸ்ட்?

ஜீவாவைப் பற்றி எழுதுவதாகக் கடந்த வார அலசலில் சொல்லியிருந்தேன். கடந்த அலசலுக்கு வந்த பின்னூட்டங்கள் கருணாநிதியைத் தன்னலமற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டதைக் கண்டித்திருந்தன. நாட்டு நலனுக்குத் தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர்களுடன் ஒப்பிடும்போதுதான் கருணாநிதியின் தன்மையும் தகைமையும் பொதுமக்களுக்குத் தெளிவாகும் என்பதாலேயே அவ்விதம் ஒப்பிடப்பட்டது. எனவே இவ்வாரம் ஜீவாவின் வாழ்வில் இருந்து சில குறிப்புகளுடன் கருணாநிதியை ஒப்பிடும் தேவை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் நம்பமாட்டார்கள் எனத் தெரிந்தும்கூடக் கருணாநிதி வாய்ப்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், தம்மைக் "கம்யூனிஸ்ட்" என அழைத்துக் கொள்வார். ஆனால் கம்யூனிஸ்ட்களின் வாழ்வின் நிழல்கூட அவரிடம் இல்லை என்பதை நிகழ்காலம் காட்டிக் கொண்டிருக்கிறது.

உலகில் தேர்தல் மூலம் பொதுமக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும்  இந்தியாவின் மாநிலங்களில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு எனவும் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் மக்கள் அரசு எனவும் வரலாற்றில், "முதல்" இடம் பிடித்த பெருமை பெற்றது, "காம்ரேட் ஈ.எம்.எஸ்" எனப் பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் எளங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாடு' (ഏലങ്കുളം മനക്കല്ശങ്കരന്നമ്പൂതിരിപ്പാട്) தலைமையில் 1957 ஆம் ஆண்டு அமைந்த அரசு.

ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஈ.எம்.எஸ்., அப்போது கொச்சி - ஆலப்பாட்டில் ஒரு சிறு வீட்டில் தம் மனைவி ஆர்யா அந்தர்ஜனத்துடன்  வாழ்ந்து கொண்டிருந்தார். முதலமைச்சராகப் பதவியேற்பதற்காகத் தலைநகர் திருவனந்தபுரத்துக்குப் புறப்படும் நேரம், ஈ.எம்.எஸ். அணிவதற்காகச் சட்டையை எடுத்துக் கொண்டு வந்தார் ஆர்யா! இஸ்திரிப் பெட்டியைக் கண்டிராத அச்சட்டையை அணியும் நேரத்தில், "இச்சட்டையில் பொத்தான் இல்லையே?" என வினவினார் ஈ.எம்.எஸ். "இதைக் குத்திக் கொள்ளுங்கள்" என ஆர்யா தாம் அணிந்திருந்த பிளவுஸில் குத்தியிருந்த ஒரு 'ஊக்கை'க் கழற்றிக் கொடுத்தார். இந்தக் காட்சிக்குச் சாட்சியாய், அவ்வீட்டினுள் நுழைந்த ஆலப்பாட்டு பிரமுகர் வேலாயுத மேனோன், "முதலமைச்சராகப் போகும் ஆள் அணிவதற்குரிய சட்டை இதுதானா?" எனக்கடிந்து கொண்டு, அச்சட்டையை எடுத்துக் கொண்டுபோய்ப் பொத்தான் தைத்து இஸ்திரி  போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

திருவனந்தபுரத்தில், பதவிப்பிரமாணம் எடுக்க ஈ.எம்.எஸ். ஆயத்தமான கடைசி நேரத்தில் அவர் அணிந்திருந்த பழைய கைக்கடிகாரம் மணி காட்டுவதை எப்போதோ நிறுத்தியிருந்ததைக் கண்டனர் தோழர்கள். பதவியேற்பு நிகழ்ச்சியைக் கட்சிப் பத்திரிகையில் வெளியிடுவதற்காகச் செய்தியாளராக வந்திருந்த பவனன் என்பவரின் பழைய ஹிந்துஸ்தான் கைக்கடிகாரத்தை இரவல் வாங்கி அணிந்து கொண்டு முதலமைச்சராகப் பதவியேற்றார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.

புல்லரித்துப்போகிறது நமக்கு!

நம்பித்தான் ஆக வேண்டும். இது கற்பனைக் கதையில்லை; நம்முன் வாழ்ந்த நிஜம்.

இப்படி வாழ்ந்த ஈ.எம்.எஸ். என்ன ஒன்றும் இல்லாதவரா? மக்களால் உயர் வகுப்பு எனக்கூறப்பட்ட "நம்பூதிரி" இனத்தில் பிறந்த ஈ.எம்.எஸ்., கேரளத்தில் அன்று நிலவியிருந்த சாதிப்பாகுபாட்டுக்கும் தீண்டாமைக்கும் எதிராகப் பெரும் போர் நிகழ்த்தியவர். காங்கிரஸ் கட்சியில் தம் அரசியல் வாழ்வைத் துவக்கிய ஈ.எம்.எஸ்., மார்க்ஸியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த முன்னோடிகளுள் ஒருவர். நாற்பதுகளில், தம் முன்னோர் சொத்தில் தமக்குக் கிடைத்த பங்கு முழுவதையும் கட்சிக்கு வழங்கி விட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்.

ஈ.எம்.எஸ். மட்டுமல்லர்; அவரைப்போல C I T U  பொதுச்செயலாளராக இருந்த கே.என்.ரவீந்திரநாத், எர்ணாகுளம் நகரின் இதயப் பகுதியில் அமைந்த, இன்றைய நில மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வரும் நிலத்தை அறுபது ஆண்டுகளுக்கு முன்பே கட்சிக்கு வழங்கினார். மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காம்ரேட் ஹர்கிஷன் ஸிங் ஸுர்ஜித்தும்  தம் முன்னோரின் சொத்தில் தம் பங்காகத் தமக்குக் கிடைத்த அந்தக் காலத்துப் பத்துலட்சம் ரூபாயைக் கட்சிக்கு வழங்கினார்.

ஆனால் அவ்வப்போது 'தாம் ஒரு கம்யூனிஸ்ட்' எனச்சொல்லிக் கொள்ளும் கருணாநிதியோ கட்சிச் சொத்தை அடகு வைத்து, 'சன் தொலைக்காட்சி'யில் முதலீடு செய்தவர். கட்சித் தொண்டர்களின் அன்பளிப்பாலும் நன்கொடையாலும் உருவாக்கப்பட்ட கட்சிச் சொத்தைத் தம் சொந்த வருவாய்க்காகத் தொழிலில் முதலீடு செய்த தலைவர் கருணாநிதி ஒருவராகத்தானிருப்பார். அந்த அளவிற்குச் சுயநலம் கொண்டவர் கருணாநிதி. 'சன் தொலைக்காட்சி'யிலிருந்து கிடைத்த லாபத்தில் தம் பங்கான நூறு கோடி ரூபாயை அவர் தாம் பெற்றெடுத்த மக்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தாரே தவிர அந்தத் தொகையில் கட்சிக்கு ஏதும் கொடுக்கவில்லை.. "…… அந்தத் தொகைக்கான வருமான வரியாக 22 கோடியே 50 லட்சம் ரூபாய் உரிய காலத்தில் முறைப்படி என்னால் செலுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 77 கோடியே 50 லட்ச ரூபாயை என்னுடைய மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தேன்" என அவரே அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

தம் சொத்தை, செல்வத்தைக் கட்சிக்கு வழங்கிவிட்டு எளிமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்கள். ஆனால் ஏழ்மை நிலையிலிருந்த கருணாநிதி, கோடீஸ்வரக் குடும்பத்தின் பிதாமகனாக உருவெடுத்துள்ளார்.

"நான் பல முறை சொல்லியிருப்பது போல மிக மிகச் சாதாரணமான, சாமான்யமான குடும்பத்திலே பிறந்த என்னை, இந்த அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பேன் என்ற நம்பிக்கையோடு ஐந்து முறை முதல்வராக்கி, 1957 முதல் 11 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி, 1969 முதல் நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக ஒரு கட்சியின் தலைவராக்கி இருக்கிறார்கள்"எனக் கருணாநிதி தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கு அவரிடம் பொறுப்பை ஒப்படைத்த மக்கள், அப்பொறுப்பால் அவர் கோடீஸ்வரனாவார் என எதிர்பார்க்கவில்லை. 1949 முதல் எழுபத்தைந்து திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதியதைத் தவிர வேறு பெரிய தொழிற்சாலைகளோ வணிக நிறுவனங்களோ எண்ணெய்க் கப்பல்களோ அவரது உடைமையாக இல்லா நிலையில் அவரது வாரிசுகளுக்கு எண்ணத் தொலையாத இத்துணைச் செல்வத்தை அவர் எப்படிச் சேர்க்க முடிந்தது என்று நாம் வினா எழுப்பத் தேவையில்லை. ஜெயலலிதாவே போதும்.

"...............1946ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாகச் சேர விண்ணப்ப படிவத்தில் தமக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை; வீட்டுமனை ஏதுமில்லை; தம்மிடம் நகை, பாத்திரம் வகையறா 1,000 ரூபாய் இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார் ..." என ஜெயலலிதா தம் அறிக்கையில் கூறியிருந்தார்.

கருணாநிதி, தாம் எழுதிய 'நெஞ்சுக்குநீதி' எனும் ஆடோபயாகிரஃபியிலும் ".............. பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும் இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பத்மாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணிஆர்டர் செய்வேன் ..............."

"........... பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்….." எனப் பதிவு செய்துள்ளார்.

இப்படி வாழ்வைத் துவக்கிய கருணாநிதியின் குடும்பத்துக்கு இன்றுள்ள சொத்துக்கள் எவ்வளவு என்பதை இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் பலரும் பதிவு செய்துள்ளனர். எனவே அவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடும் தேவையில்லை.

அரசியல்வாதியான கருணாநிதி, தாம் நாத்திகன் என்பார்; பகுத்தறிவாளன் என்பார்; பத்திரிகையாளன் என்பார்; சமூகச் சீர்திருத்தவாதி என்பார்; இலக்கியவாதி என்பார்; கவிதை எழுதுவேன் என்பார்; கம்யூனிஸ்ட் என்பார்; சிறை சென்றேன் என்பார்; தலித்களின் சம்பந்தி என்பார். இவை அனைத்திலும் இவரை விடச் சிறந்து விளங்கியவர் ஜீவா.  

தம்மைச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவாளன் என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் கருணாநிதிக்குச் சாதிக் குறுகுறுப்பு அதிகம். எனவேதான் அடிக்கடி, தாம் "தலித்களின் சம்பந்தி" என்றும் "மகனுக்குத் தாழ்த்தப்பட்ட இனத்தில் பெண் எடுத்தேன்" என்றும் "பேத்திக்கும் அவ்வாறே மணமகனைத் தேர்ந்தெடுத்தேன்" என்றும் சொல்லிக் கொண்டிருப்பார். இந்தியாவில் இதுவரை பல்லாயிரக் கணக்கில் கலப்பு மணங்கள் நடைபெற்றுள்ளன; நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பலவும் இன்றைய சமூகத்தின் சாதிப்பாகுபாட்டில் தாழ்த்தப்பட்டுள்ளவர்களுடன் தாழ்த்தப்படாதவர்கள் செய்து கொண்டவை / கொள்பவை ஆகும். யாருமே தாம் செய்த தியாகமாக இதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. ஆனால் கருணாநிதி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தம் மருமகள் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண் என்பதைச் சொல்லிக் காட்டி மருமகளை மேலும் தாழ்த்தும் வழக்கம் கொண்டவர். தமக்கு ஏதும் சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் தம்மைச் "சூத்திரன்" என்றும் "சாமான்யன்" என்றும் சொல்லிக் கொள்வார். ஆனால் சாதிப்பாகுபாட்டிற்கும் தீண்டாமைக்கும் எதிராகப் போராடிய ஜீவாவோ தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேந்த கண்ணமாவை மணந்து கொண்டிருந்தும் அதைப் பெரிய தியாகம்போல் சொல்லிக் காட்டியதில்லை.

ஜீவா, பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே காந்தியால் கவரப்பட்டார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கதர் பற்றிக் கவிதை எழுதினார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை எழுதி. அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். ஜீவா தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தது ஊர் மக்களின் எதிர்ப்பத் தேடித் தந்தது. அவரது செயலுக்காக ஊர் அவரின் தந்தைய எதிர்க்க, மகனுக்கும் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, தம் கொள்கையைத் துறக்க விரும்பா ஜீவா குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17. சேரன்மாதேவியில் வவேசு ஐயர் நடத்திய ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதைக் கண்டு வெகுண்டு அங்கிருந்து விலகினார். பிறகு தாமே 1927 இல் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் சிராவயலில் "காந்தி ஆசிரமம்" என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார். அவ்வாசிரமத்துக்கு வருகை தந்த காந்தி ஜீவாவிடம், "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது" என்று வினவினாராம்; ஜீவா, "இந்த தேசம்தான் எனது சொத்து" என விடையிறுத்தாராம். இதைக் கேட்டு வியந்த காந்தி, "நீங்கள்தாம் இந்நாட்டின் சொத்து" என்றாராம். நாட்டின் சொத்தாக ஜீவாவைக் காந்தி ஒப்புக் கொண்டார்.

இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பொறுக்க முடியாமல், நாட்டு விடுதலைக்காக நெருப்புப் பொறி பறக்கும் உரைகள் ஆற்றி இளைஞர்களையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வைத்த ஜீவா, பகத் சிங் எழுதிய நூலை, "நான் ஏன் நாத்திகனானேன்?" எனத் தமிழில்  மொழிபெயர்த்தார். அந்நூலை ஈ.வெ.ரா. பெரியார் வெளியிட்டார். பகத் சிங்கின் நூலை மொழிபெயர்த்த குற்றத்துக்காக ஜீவாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டு விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காந்தி அறிவித்த 'ஒத்துழையாமை இயக்க'த்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட ஜீவா, மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நெருங்கிப் பழகினார். இதனால் ஜீவாவின் சிந்தனைப் போக்கு மாறியது. சிறையிலிருந்து வெளிவந்தபோது, கம்யூனிஸ்டாக வந்தார்.

விடுதலைப் போராட்ட வீரரான ஜீவா, பல தொழிற்சங்கங்களுக்குத் தலைவராக இருந்துள்ளார். விடுதலைப் போராட்டக் களத்திலும் தொழிற்சங்கக் களத்திலும் தம் வீரார்ந்த சேவைக்காக வெஞ்சிறையில் வாடியவர் ஜீவா. அதைச் சொல்லி மக்களிடம் விளம்பரம் செய்யவில்லை அவர்.

கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராவதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1952 ஆம் ஆண்டு, வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஜீவா. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார்; கம்யூனிஸ்ட் கட்சியின்  "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்துள்ளார். திரைத்துறையைத் தவிரக் கருணாநிதி நுழைந்த அத்தனைத் துறைகளிலும் கருணாநிதிக்கு முன்பே வெற்றிபெற்றவர் ஜீவா.

ஜீவாவைப் பற்றிப் படித்த மற்றொரு செய்தியும் உண்டு. கம்யூனிஸக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு ஒரு நாளிதழ் தேவை என எண்ணிய  ஜீவா, கட்சி நிதியாகவும் நாளிதழ் நிதியாகவும் பொதுமக்களிடம் பணம் பெற்றாராம். அதன் பின், சென்னை வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்துள்ளார். காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் எதுவும் சாப்பிடவில்லை; அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! தோழர் ஜீவாவிடம்,"பசிக்கிறது; ஏதாவது சாப்பிடலாமா?" என வினவ, "சாப்பிடலாம்; ஆனால் கையில் காசு இல்லையே" என்றாராம் ஜீவா. "உங்கள் கையில் பெரும் தொகை இருக்கிறதே" என்ற தோழரிடம், "அது மக்கள் பணம்; அதிலிருந்துஎடுக்கக் கூடாது" என்றாராம். அவர் கம்யூனிஸ்ட்.

ஜீவா போல, ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போல மக்கள் தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் கருணாநிதி அடிக்கடித் தம்மையும் "கம்யூனிஸ்ட்" என்றும் "தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி" என்றும் கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும்; அப்படிக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சனி, 11 டிசம்பர், 2010

ஜீவா --கக்கன் --காமராஜர்--கருணாநிதி

“கணக்குக் காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண” எனத் தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி, தம் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் சன் டிவியிலிருந்து தம் பங்குத் தொகையாக நூறு கோடி ரூபாய் கிடைத்தது என்று சொல்லியிருந்த வரிகளைப் படித்ததும் என்னைத் தூக்கிப் புரட்டிப் போட்டதுபோல் இருந்தது;  நூ.........று.........கோ............டி..........   ரூ........ பா.......ய்........ எனப் படிப்பதற்குள் வாய் உலர்ந்துவிட்டது.

குடிக்கக் கஞ்சியும் கிடக்கக் குடிசையும் உடுக்க நல்ல உடையும் இல்லா அன்றாடங்காய்ச்சிகள் இலட்சக்கணக்கில் வாழும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், மிகச்சுலபமாகத் தம் பங்குத் தொகையாக 1000000000 ரூபாய் கிடைத்தது என்று சொன்ன அறிக்கையைப் படித்தபோது மக்களுக்காகவே வாழ்ந்த - வாழ்ந்துகொண்டிருக்கும் பல முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் நினைவு வந்தது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

தமிழனின் சராசரி மாத வருவாய் இரண்டாயிரம் ரூபாய் என்றும் அவர்களுள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் மாத வருவாய் ஐநூறு முதல் அறுநூறு என்றும் சில புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரம் இப்படி இருப்பதால்தான் கருணாநிதி மக்களுக்கு இலவசங்களை வழங்குகிறார்; மக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

"நான் சிசுப் பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது" என்று தொடங்கிய கருணாநிதி 1949ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஐநூறு ரூபாய் மாதச்சம்பளத்திற்குத் திரைப்பட எழுத்தாளராகப் பணி புரியத் தொடங்கியதிலிருந்து இன்று வரை எழுபத்தைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை, வசனம் எழுதிச் சம்பாதித்ததையும் 1957ஆம் ஆண்டு முதல் இன்று வரை சட்டமன்ற உறுப்பினராக இருப்பதையும் முரசொலி, முத்தாரம், குங்குமம், ரைஸிங்ஸன், வண்ணத்திரை போன்ற இதழகள் நடத்தி வருவாய் ஈட்டியதையும் சொல்லியிருக்கிறார்.

1949 முதல் அவர் ஈட்டிய வருவாயில் அவரது மூன்று மனைவிகளுக்கும் இரண்டு வீடுகளுக்கும் அவர் பெற்ற ஆறு பிள்ளைகளுக்கும் உணவு, உடை, மருத்துவம், கல்வி என அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து, அவர்களுக்கு மணம் செய்வித்துத் தனித்தனி வீடுகளில் வாழ வைத்ததற்கு இவர் கூறியுள்ள வருவாய் இனம் போதுமா என்றோ, சன் டி.வி.யில் நூறுகோடி பங்குத் தொகை பெறும் அளவிற்கு முதலீடு செய்திருக்க முடியுமா என்றோ பேரப்பிள்ளைகளுடன் பிணங்கி உடனடியாகக் கலைஞர் டி.வி. துவங்க முதலீடு எப்படி வந்தது என்றோ வினாக்களை எழுப்புவதும் ஆராய்ச்சி செய்வதும் இந்த அலசலுக்குத் தேவைப்படாதவை.

"கருணாநிதிக்கு கோபாலபுரத்தில் ஒரு வீடு. சி.ஐ.டி., காலனியில் ஒரு பங்களா. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா. மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாளிகைகள், பண்ணை வீடுகள். அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள், வர்த்தகமாடி கட்டடங்கள், இன்ஜினியரிங் கல்லூரி உள்ளன. தமிழரசு, முத்து, கனிமொழி என அனைவரும் மாட மாளிகைகளில். பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருணாநிதி குடும்பம் விளங்கி கொண்டிருக்கிறது" என ஜெயலலிதா கூறுவதயும் நாம் அலசப்போவதில்லை.

கருணாநிதி கூட்டங்களில் பேசி, இரண்டு வடையும் ஒரு டீயுமே சம்பளம் பெற்றவர்; கருணாநிதி திருட்டு ரயில் ஏறிச் சென்னைக்கு வந்தவர் என்று அ.இ.அ.தி.மு.க.வின் மூன்றாம்தர மகளிரணிப் பேச்சாளார்களின் தரத்தில் ஜெயலலிதா கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்நாள் முதல்வரைப் பற்றி முன்னாள் முதல்வர் கூறக்கூடாத ஒன்று இது. ஆனால் "எம்.ஜி.ஆ.ரின் மனவியான ஜானகி, மோரில் விஷம் வைத்து எம்.ஜி.ஆரைக் கொன்றார்"  எனக்குற்றம் சுமத்திய ஜெயலலிதாவிடம் இதை விட நாகரீகமாக எதிர்பார்க்க முடியாது.

கிராமத்திலிருந்து திரைப்படத்துறையை நம்பி வந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பணக்காரர்களாகும்போது கருணாநிதியும் திரைப்படத்துறையில் வருவாய் ஈட்டிச் சேமித்திருக்கலாம் என நம்புகிறோம். ஆனால் அலசலின் துவக்கத்தில் சொன்னபடி நம்மைப் புரட்டிப்போட்டது அந்த 100 கோடி தான்

கருணாநிதியை விடச் சிறந்த மக்கள் தலைவர்கள் இருந்துள்ளனர்; இருக்கின்றனர். அவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா. அவரைப் பற்றி விரிவாக ஓர் அலசல் எழுதப்படும். இங்கே சொல்லப்பட வேண்டிய ஒரு செய்தி, மக்களுக்காகவே வாழ்ந்த அந்தத் தலைவரின் எளிமைதான்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் காமராஜர் ஜீவாவையும் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பி, ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தலைவரைப் பார்க்கச் சென்றார். நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்ட ஜீவா முதலமைச்சர் காமராஜர் காத்திருக்க, தம்மிடமிருந்த ஒற்றை வேட்டியைத் துவைத்துக் காய வைத்துக் கொண்டிருந்தார் என்ற ஒரு செய்தியைப் பலரும் பதிவு செய்துள்ளனர்.

காமராஜர் மறைந்த போது அவரிடமிருந்த சொத்து அவரது சட்டைப்பையில் இருந்த நூற்றைம்பது ரூபாய் மட்டுமே! நூறு கோடி ரூபாய் பங்குத் தொகையாகப் பெற்ற கருணாநிதி, தி.நகரில் திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் வசித்திருந்த எட்டாம் எண் வாடகை வீட்டின் படத்தை போட்டு "ஏழைப்பங்காளர் வாழும் பங்களா" என விளம்பரப்படுத்தி மகிழ்ந்தவர்.  

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரையும், 1957 முதல் 1967 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய கக்கன் மிக எளிமையாகவே வாழ்ந்தார்.

ஒன்பது ஆண்டுகள் அமைச்சராகப் பணியாற்றிய கக்கன் அரசுப் பேருந்தில்தான் எங்கும் செல்வார். கக்கன் மதுரையில் அரசுப் பொது மருத்துவ மனையில்  சிகிச்சைக்குச் சேர்ந்த அவருக்குப் படுக்கை கூட வழங்கப்படாமல் தரையில் படுக்க வைக்கப் பட்டிருந்தார். அவருக்கு வீடு கூட இல்லை. இறுதிக்காலத்தில் 1979 ஆம் ஆண்டில் அரசு வழங்கிய வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.

ஜீவா, கக்கன், காமராஜர் போன்றோரெல்லாம் கடந்த நூற்றாண்டிலோ கற்காலத்திலோ வாழ்ந்த மனிதர்களல்லர். கருணாநிதி பார்த்து, விமர்சித்து, இழித்து, பழித்து, புகழ்ந்து, பாராட்டியவர்களே!

இவர்கள் மட்டுமல்லர்.! திரிபுராவில் முதலமைச்சராக இருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிருபேந் சக்கரவர்த்தி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும்போது இரண்டு டிரங்குப் பெட்டிகளுடன் கட்சி அலுவலகத்தில் குடியேறினார். அந்தப் பெட்டிகளில் இருந்தது சில மாற்றுத் துணிகளும் புத்தகங்களும் மட்டுமே.

அதே திரிபுராவில் முதலமைச்சராக இருக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மானிக் சர்க்காருக்கும் சொந்த வீடு இல்லை; நிலம் இல்லை; வாகனம் இல்லை. அவர் பதவியேற்கும் போது வங்கி இருப்பு 13,920 ரூபாய் மட்டுமே. முதலமைசருக்கான சம்பளமாக அரசு தரும் 9,200 ரூபாயையும் படியாகத் தரும் 1,200 ரூபாயையும் மற்ற மார்க்ஸிஸ்ட் உறுப்பினர்களைபோலவே  கட்சிக்கு வழங்கி விட்டுக் கட்சி தரும் உதவித் தொகையில் வாழ்கிறார்.தம் மனைவியுடன் வெளியே சென்றால் அரசு வாகனத்தைப் பயன்படுத் துவதில்லை; ரிக்ஷாவிலேயே அழைத்துச் செல்வார். அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மத்திய அரசு ஊழியரான  அவரது மனைவியும் அதே நிகழ்ச்சியில் பங்கெடுத்தால் மட்டும் அரசு வாகனத்தில்  அழைத்துச் செல்வார்.

அப்படி ஓர் எளிமை.

மும்முறை கேரள முதலமைச்சராக இருந்து இப்போது மத்தியில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் எளிமைக்குப் பெயர் பெற்ற ஏ.கே அந்தோனியின் பெயரில் வீடோ வாகனமோ இல்லை. வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றும் அவரது மனைவி எலிஸபத்தின் வருவாயில் வாங்கப்பட்ட வீடு அவரின் பெயரில் உள்ளது.

மற்ற மாநில முதல்வர்களை விடவும் வசதி குறைந்த வீட்டிலேயே தாம் வாழ்வதாக தம் அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார். அரசு வீடுகளில் அமைச்சர்கள் வசித்தால் அவ்வீடுகள் பெரிதாகத்தான் இருக்கும். அதில் பிறரைக் குறை காண இடம் இல்லை. தாம் சொந்த வீட்டில் வசிப்பதாகக் கருணாநிதி கூறி இருப்பதிலும் அவருக்குப் பெருமை இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்தபோதும் அவர்களின் சொந்த வீடுகளில்தாம் வசித்தனர்.
தாம் செய்யும் தியாகமாக இதைக் கூறும் கருணாநிதி, தம் சமகாலத்தில் அரசியலில் சந்தித்த ஜீவா, கக்கன், காமராஜர், நிருபேந் சக்கரவர்த்தி, மானிக் சர்க்கார், ஏ.கே அந்தோனி ஆகியோரின் வாழ்க்கையைத் தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயம் வெட்கப்பட வேண்டியிருக்கும்.

சனி, 4 டிசம்பர், 2010

பாகிஸ்தான் - மத நிந்தனைச் சட்டமும் சிறுபான்மையினர் நிலையும்!

ஒவ்வொரு நாடும் தத்தமது அரசியல் சட்டத்திற்கேற்பப் பல தடைச்சட்டங்களை இயற்றி நடை முறைப்படுத்துகின்றன. அவை அவ்வந்நாடுகளின் உரிமையும் கூட. அதில் நாம் கருத்துச் சொல்லவோ மறுப்புச் சொல்லவோ உரிமையில்லை. அவ்வகையில் பாகிஸ்தான் நாடும் ஒரு 'மத நிந்தனைச் சட்டத்தை' வகுத்துள்ளது. 96 விழுக்காடு முஸ்லிம்களைக் குடிமக்களாகக் கொண்ட அந்நாடு, அரசியல் சட்டத்தில், "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு" என அழைக்கப்படுவதால் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் கடுமையான, 'மத நிந்தனைத் தடுப்புச் சட்டமும்' உள்ளது. மத நிந்தனைச் செயல் நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, அபராதம் முதல் தூக்குத் தண்டனை வரை விதிக்கப்படும்.

இந்தியாவில் நீதிபதிகளுள் பெரும்பாலோரும் இந்துக்களாக இருப்பது போலவே பாகிஸ்தானிலும் பெரும்பாலும் முஸ்லிம்களே நீதிபதிகளாக உள்ளனர். ஆல்வின் ராபர்ட்ஸ் எனும் கிறிஸ்தவர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். ராணா பகவன் தாஸ் எனும் இந்துவும் அப்பதவியில் இருந்துள்ளார். ஜம்ஷாயித் ரகுமதுல்லா எனும் கிறிஸ்தவர் உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்துள்ளார். என்றாலும் மதநிந்தனைக் குற்றவழக்கை  முஸ்லிம் நீதிபதி மட்டும்தான் விசாரிக்க முடியும்.

பாகிஸ்தானில் அகமதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்வோரும் இந்துக்களும் சீக்கியர்களும் கிறிஸ்துவர்களும் மதச்சிறுபான்மையினராவர். ஜெனெரல் ஜியாவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மத நிந்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 1988ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் எழுநூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனலாம். இதில் ஐம்பது விழுக்காடு வழக்குகள் முஸ்லிம்கள் மீதும் பதியப்பட்டுள்ளன. அகமதிகளும் கிறிஸ்தவர்களுள் பலரும்  இச்சட்டத்தின் கீழ் வழக்கில் சிக்கியுள்ளனர். அவ்வகையில் அண்மை வழக்கு ஆஸியாபீ எனும் நாற்பத்தைந்து வயதான கிறிஸ்தவப் பெண் மீது தொடுக்கப்பட்டதாகும்.

முஸ்லிம்களின் புனிதரான முகமது நபியைக் குறித்து அவமரியாதையாகப் பேசியதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு ஏறத்தாழப் பதினைந்து மாதங்கள் சிறையில் இருக்கும் ஆஸியாபீபிக்குக் கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி பஞ்சாப் பகுதியில் உள்ள ஒரு செஷன்ன்ஸ் நீதிமன்றம் மதநிந்தனைச் சட்டம் பிரிவு 295 C படி தூக்குத் தண்டனை விதித்த செயல் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களைத் திடுக்கிட வைத்தது. போப் பெனெடிக்ட் XVI  உடனடியாக அப்பெண்ணை விடுதலை செய்யும்படிக் கோரியுள்ளார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இச்சட்டத்தின் கீழ்த் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டும் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தால் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு இதுவரை இச்சட்டத்தின்கீழ் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீ சார்பாக அப்பீல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இதில் தலையிட்டு அப்பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கும்படி கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அந்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி இது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தும்படி நீதிமன்றத்தை வேண்டியுள்ளார். ஆஸியாபீ நிரபராதி என்றும் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஆஸியாபீயின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் முன்பு அதிபர் சர்தாரி ஆஸியாபீக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது எனத் தலைமை நீதிபதி காஜாஷரீஃப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 03/12/2010 அன்று நடந்த வெள்ளிக்கிழமைக் கூட்டுத் தொழுகையின்போது யூசுப் குரைஷி எனும் முல்லா ஆஸியாபீயைக் கொலை செய்பவருக்கு ஐந்துலட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இவ்வழக்கு எப்படிப் புனையப்பட்டது? ஆஸியாபீ சொல்வது என்ன?

விவசாயக் கூலியான ஆஸியாபீபியை அவருடன் வேலை செய்யும் மற்றவர்கள் மதம் மாறும்படி அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளனராம். தம் மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ளத் தக்க காரணம் எதுவும் இல்லை எனக்கூறி, மதம் மாற மறுத்து வந்திருக்கிறார் அவர். இடையே அவரது வீட்டிலிருந்து வெளியேறித் தெருவில் சேரும் கழிவு நீரினால் மற்றவர்களுடன் பிரச்சனை வேறு இருந்துள்ளது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்யும்போது மற்றவர்களுக்காக ஆஸியாபீ இறைத்துத் தந்த குடிநீரைக் குடிக்க மறுத்த பெண்களிடம் "ஏன்" என வினவியுள்ளார் ஆஸியாபீ. "முஸ்லிமல்லாத ஆஸியாபீயிடம் தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது" எனச் சொன்ன பெண்களுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு இப்படி ஒரு புகாராகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் ஆஸியாபீபி.

பாகிஸ்தானில் தனிப்பட்ட தகராறுகள் கூட மதநிந்தனைப் புகாராகச் சொல்லப்படுகின்றன என்பதால் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அரசால் யோசிக்கப்படுகிறது. இதனிடையே மத அமைப்பைச் சேர்ந்த பலரும் ஆஸியாபீக்கு மரணதண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் எனவும் அதிபர் ஆஸிஃப் சர்தாரி ஆஸியாபீபிக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது  எனவும் மதநிந்தனைச் சட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டுவரக் கூடாது எனவும் போராடுகின்றனர். முன்னர் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயன்றவர்களும் இவர்களால் மிரட்டப்பட்டுள்ளனர்.

மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருப்போர் விடுதலை செய்யப்பட்டோ பிணையிலோ சிறையிலிருந்து வெளிவந்தாலும் கூட மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்களால் கொல்லப்படும் அவலமும் நடக்கிறது.

முஸ்லிம்களின் வேதமான குரானின் சில பக்கங்களை எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு மதநிந்தனைச் சட்டத்தின் கீழ்ச் சிறையிலிருந்து கடந்த நவம்பர்  மாதம் 3ஆம் தேதி பிணையில் வெளிவந்த இம்ரான் லதீஃப் எனும் 22 வயது கிறிஸ்தவ இளைஞன் நவம்பர் 11ஆம் தேதி ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாண்டு ஜூலையில் கிறிஸ்தவர்களான பாஸ்டர் ராஷித் இம்மானுவேல் மற்றும் அவரது சகோதரர் ஸாஜித் ஆகியோர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மதபோதகர் இமானுவேல் மதப்பிரச்சரத்துக்காக வெளியிட்ட கையேட்டில் முகமது நபியை இழிவுபடுத்தும் வாசகங்கள் அடங்கியிருந்ததால் மதநிந்தனை வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு வெளியே கொண்டுவரப்படும்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலையைக் கண்டித்துக் கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையினர் நல அமைச்சர் ஷாபாஸ் பட்டியும் மதநிந்தனை செய்துவிட்டதாக  முல்லா ஒருவர் குற்றம் சாட்டினார்.

இப்படி மத நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டோருள் சுமார் 20 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல விடுதலையான பலரும் - குறிப்பாகக் கிறிஸ்தவர்கள் - கொலைக்கு அஞ்சித் தலைமறைவாக வாழுகின்றனர். அது மட்டுமின்றிப் பல கிறிஸ்தவக் குடும்பங்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. அதை விளக்கப்புகின் விரியும்.

ஆஸியாபீபி பதினைந்து மாதங்கள் சிறையில் இருந்ததைப்போல ஜைனப்நிஸா எனும் அறுபது வயதான முதிய பெண் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகள் மதநிந்தனைக்காகக் காவலில் இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டு குரானை அவமதித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட மனநிலை பிறழ்ந்த ஜைனப் நிஸாவைப்  பாகிஸ்தான் காவல்துறை மனநோய் மருத்துவமனையில் காவலில் வைத்திருந்தது. விசாரணையோ தண்டனையோ இன்றிக் காவலில் இருந்த அம்முதிய பெண் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்  இவ்வாண்டு ஜூலை மாதம் லாகூர் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என அழைக்கப்படும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் பல நேரங்களிலும் தனிப்பட்ட பகையையும் கோபதாபங்களையும் தீர்ர்ப்பதற்கும் பழிவாங்குவதறகும் பயன்படுவதைப் போல பாகிஸ்தானில் மதநிந்தனைச் சட்டம் பயன்படுகிறது. இச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் புனையப்பட்டவையே! நிறைய மத நிந்தனை வழக்குகள் லாகூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் மீது சட்டத்தின் துணையோடும் சட்டத்தைக் கையில் எடுத்தும் நிகழ்த்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் மதவெறிக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அந்நாட்டரசு தடுமாறுவது ஒருபுறம்; பொதுமக்களான முஸ்லிம்கள் மதநிந்தனைச் சட்டத்தைத் தம் விருப்பு வெறுப்புக்கேற்பப் பயன்படுத்த நினைப்பது மறுபுறம் என பாகிஸ்தானின் சிறுபான்மைச் சமுதாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மத உரிமையும் மனித உரிமையும் பாதுகாக்கப் படாதவரை பாகிஸ்தான் அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகவே மனித உரிமை ஆர்வலர்கள் கருதுவர். நீதிமன்றங்கள் மட்டுமே அந்த அவப்பெயரிலிருந்து பாகிஸ்தானைக் கரையேற்ற முடியும்.