சனி, 1 ஜனவரி, 2011

பி.ஏ.சி.யும் ஜே.பீ.சி.யும்

அலைக்கற்றை (2 ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள் ஜே.பீ.சீ. (நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கைக் குழு)தான் வேண்டும் என்று அடம் பிடித்து நிற்கின்ற வேளையில் பிரதமர் மன்மோகன்சிங் தாம் பீ.ஏ.சீ. யின்(பொதுக்கணக்குக் குழு) முன் ஆஜராவதாகச் சொல்லியுள்ளார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவரும் பீ.ஜே.பி.யின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான முரளிமனோஹர் ஜோஷி இதற்கு ஆதரவாக உள்ள நிலையில், பீ.ஜே.பி.யின் மற்ற தலைவர்கள் இதற்கு எதிராக உள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி மு க கலங்கி நிற்க வேண்டிய தருணத்தில் பீ.ஜே.பி குழம்பி நிற்கும் சூழ்நிலை உருவாகி இருப்பது அரசியல் திருப்பத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் நோக்கர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தப்படி உருவாக்கப்பட்ட "பி.ஏ.சி" எனப்படும் பொதுக்கணக்குகள் குழு, இந்தியா குடியரசான பின் அவைத்தலைவருக்குக் கட்டுப்பட்ட நாடாளுமன்றக் குழுவாக உருமாற்றம் பெற்றது. நாடாளுமன்ற நடவடிக்கை விதி 308 இன் படி ஆண்டுக்கொரு முறை உருவாக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு, மக்களவையின் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையின் 7 உறுப்பினர்களும் அடங்கியது. அதன் தலைவராக 1967 ஆண்டிற்குப் பின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தெடுக்கப்படும் மரபால் இப்போது பீ.ஜெ.பீ.யைச் சேர்ந்த முரளிமனோஹர் ஜோஷி தலைவராக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செலவுகள் முறையாக அவ்வினங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுக் கணக்குகள் குழு சரிபார்க்கும். தணிக்கைக் குழுத் தலைவர் (சி & ஏ. ஜி) ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்கும் அறிக்கையைப் பரிசீலித்து, அதில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில், பொருளாதார முறைகேடுகள் நடைபெற்றனவா, அனுமதிக்கப்பட்ட நிதி முறையற்றுச் செலவிடப் பட்டுள்ளதா என விசாரிக்கவும் இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

பாரதீயஜனதா கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், 'பொதுக்கணக்குகள் குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது; அக்குழு கணக்கு முறைகேடுகளை மட்டுமே ஆராய முடியும். ஸ்பெக்ட்ரம் விவகாரம் கணக்கு முறைகேடு அன்று; அது அரசின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தவறு. அதை நாடாளுமன்றக் கூட்டுக்குழு மட்டுமே விசாரிக்க முடியும்; ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுதான் வேண்டும்' எனக் கோருகின்றன.

பி.ஏ.சி. தலைவராக உள்ள முரளி மனோகர் ஜோஷி, பிரதமர் தம் குழுவின் முன் ஆஜராகப் போவதாகக் கடிதம் எழுதிய உடன், ஆர்வக்கோளாறில் பி. ஏ.சி. விசாரணையே போதும் எனச் சொல்லிவிட்டார். இது பீ.ஜே.பி.க்குள் ஒரு குலுக்கத்தை ஏற்படுத்தியதைத் தாமதமாக உணர்ந்த முரளி மனோஹர் ஜோஷி, கட்சித் தலைவர் கட்காரியைச் சந்தித்து, பி.ஏ.சி. தலைவர் என்ற முறையில் தாம் அப்படிக் கூறியதாகவும் ஜே.பீ.சி.யே தீர்வு என்பதுதான் தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளது பீ.ஏ. சி.யிலும் பீ.ஜே.பி.யிலும் அவர்மீதுள்ள நம்பகத்தன்மையை ஐயப்படுவதற்கு வழிவகுத்து விட்டது. இப்படி ஒரு நிலைமையையே காங்கிரஸும் விரும்புகிறது.

காங்கிரஸ் ஏன் ஜேபீசி வேண்டாம் என்கிறது?

ஆண்டுக்கொரு முறை அமைக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு போன்று ஜே.பீ.சி. அமைத்துவிட முடியாது. ஜே.பீ.சி. என்பது ஒரு தேவைக்காக அமைக்கப்படும் தற்காலிகக் குழுவாகும்.ஆனால் அதன் அதிகாரங்கள் பொதுக்கணக்குகள் குழுவை விட அதிகமாகும்.அரசுத் துறைகளின் கோப்புகளையும் ஆவணங்களையும் பரிசோதிக்கவும் துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முறைகேட்டில் பலன் பெற்ற தொழிலதிபர்களையும் விசாரிக்கவும் அதிகாரம் உண்டு. பிரதமரைக்கூட இக்குழு அழைத்து விசாரிக்க முடியும். நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் பெற முடியும்.

கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களவையின் இரு மடங்கும் மாநிலங்களவையின் ஒரு மடங்கும் அடங்கிய ஜே.பீ.சீ.யில் தனியாக காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்காது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள ஜே.பீ.சீ.யின் விசார ணைகள் ரகசியமாவே நடைபெற்றாலும் சில உறுப்பினர்கள் அவ்வப்போது ஊடகங்களுக்குச் செய்தியைக் கசிய விடுவதன் மூலம் ஆளுங்கட்சியை நெருக்கடிக்குள்ளாக்கலாம். ஜே.பீ.சி.மட்டுமே தேவை என எதிர்க்கட்சிகள் கோருவதிலும் ஆளுங்கட்சி ஜே.பீ.சீ. அமைக்க மறுப்பதிலும் நாட்டு நலன் என்பதைவிட அரசியல் நலனே மேலோங்கி இருக்கிறது என்பது கவலைக்குரியது.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக