சனி, 13 நவம்பர், 2010

ஆள்கடத்தல்--அரசு--ஊடகம்--மக்கள்

கோவையில் மோகன்ராஜ் என்கிற மோகன கிருஷ்ணனைக் கோவைக் காவல்துறை "என்கவுண்டர்" கொலை செய்ததுதான் தமிழ்நாட்டில் இவ்வாரப் பரபரப்பு.

அவனைக் கொன்ற செய்தி வெளியானதும் கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் உட்பட அந்தப்பகுதி மக்கள் காவல்துறையைப் பாராட்டியும் மகிழ்ச்சி தெரிவித்தும் இனிப்பு வழங்கியும் "தீபாவளி" எனக்கூறியும் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

காவல்துறை செய்தது சரி என ஒரு பக்கமும் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன் இப்படிச் செய்தது தவறு என மறு பக்கமுமாக இப்போது கருத்துகள் வைக்கப்படுகின்றன. இணைய தளங்களிலும் வலைப்பூக்களிலும் வாதப்பிரதி வாதங்கள் நடக்கின்றன. காவல்துறை செய்யும் பரவலான "என்கவுண்டர்"கள் 1983-84 களில்  தமிழ்நாட்டில் அறிமுகமாயின. அன்று முதல் இன்று வரை  என்கவுண்டருக்குக் காவல்துறை கூறும் காரணம் மட்டும் மாறவில்லை.நம் பேசு பொருள் அது இல்லை என்பதால் நாம் அதற்குள் புக விரும்பவீல்லை.
******

சில போராளிக் குழுக்கள் சிறையில் இருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிப்பதற்காக வி.ஐ.பி.களையோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையோ கடத்திக் கொண்டுபோய்ப் பணயக் கைதிகளாக்குவதுண்டு. வி பி சிங் ஆட்சியில், 1989 ஆம் ஆண்டு காஷ்மீர்ப் போராளிக் குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி  (J K L F) மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது ஸயீதின் மகள் டாக்டர் ரூபையாவைக் கடத்திக்கொண்டுபோய்ப் பணயக்கைதியாக வைத்து அவ்வியக்கத்தின் உறுப்பினர்களான ஐவரைச் சிறை மீட்டது.. 1999 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் ‘ஹர்கதுல் முஜாஹிதீன்’ என்ற பாகிஸ்தானிய பயங்கரவாதக்குழுவினர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி மொத்தப் பயணிகளையும் பணயக்கைதிகளாக்கி இந்தியச் சிறையில் இருந்த மசூத் அசார், அகமது உமர் சயீத் சேக். முஸ்டாக் அகமது ஜர்கார் ஆகிய  மூன்று பயங்கரவாதிகளை மீட்டனர்.

1994 ஆம் ஆண்டில், தன் தம்பி அர்ஜுனனுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகக் கோயம்புத்தூரைச்  சேர்ந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் சிதம்பரநாதன் என்பவரை அவரது தோட்டத்திலிருந்து பணயக்கைதியாக வீரப்பன் கடத்திச் சென்றான். பத்தாண்டுகளுக்கு முன் கருணாநிதியின் ஆட்சியில் 2000 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடிகர் ராஜ்குமார்  வீரப்பனால் கடத்தப்பட்டர். தன் சகாக்களின் சிறை மீட்பே வீரப்பனின் கோரிக்கை என்று சொல்லப் பட்டாலும்  வீரப்பனுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாகக் கர்நாடக மாநில டி ஜி பி யாக இருந்த தினகர் தாம் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் கடத்தலுக்குச் சரியாக இரண்டாண்டுகளுக்குப் பின் கர்நாடக அமைச்சர் நாகப்பா வீரப்பனால் கடத்தப்பட்டார்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் பீகாரில், 4 போலீஸரை மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்று 48 மணி நேரத்துக்குள்  சிறையில் உள்ள தம் இயக்கத்தவர் சிலரை விடுவிக்க வேண்டும் என்றும் போலீஸ் நடத்தும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்று கெடு விதித்தனர்.அரசு அவர்களின் கோரிகைக்குச் செவிகொடுக்காததால்  லூகாஸ் டெட்ரே என்ற காவலரைக் கொன்று வீசினர் மாவோயிஸ்ட்கள் .

இக்கடத்தல்களுக்குப் பின்னணிகளாகச் சில கோரிக்கைகளும்  இருந்தன.

******

இந்தியாவில் பரவலாகப் "பிள்ளைபிடிப்பவர்கள்" இருந்தே வந்துள்ளனர். சிறு குழந்தைகளைக் கடத்திக்கொண்டுபோய் வெளியூர்களிலோ வெளி மாநிலங்களிலோ பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் "பிச்சைத் தொழில் மாஃபியா"க் கும்பல்கள் இதற்கென நியமித்துள்ள ஆண் பெண் ஏஜண்டுகள் ஊருக்குள் வந்து குழந்தைகளைக் கடத்திச் செல்வர். பள்ளிக்கூடம் போவதற்கோ வீட்டுப்பாடம் செய்வதற்கோ முரண்டுபிடிக்கும் குழந்தைகளைப் “பிள்ளைபிடிக்காரன்" பெயரைச் சொல்லிப் பெற்றோர் மிரட்டியதும் உண்டு.

பிறந்த சில நாட்களான பச்சிளங்குழந்தைகளைப் பிரசவ ஆஸ்பத்திரிகளில் இருந்து கடத்திப் பணத்துக்காக விற்கும் கும்பல் அடிக்கடி பிடிக்கப்படுவதும் நடக்கின்றது.விபச்சார மாஃபியாக் கும்பல் இளம்பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் விறபதும் நடக்கின்றது

மும்பை போன்ற மாநகரங்களில் இருட்டுலக தாதாக்கள் பெரும் வணிகர்களையும் தொழிலதிபர்களையும் பணத்துக்காகவும் சிலரைத் தொழிற்போட்டியாளர்களுக்காகவும் கடத்தும் செய்திகளையும் அவ்வப்போது பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.   சென்னையில் வெள்ளைரவி, ஆசைத் தம்பி, கபிலன் போன்ற தாதாக்கள் பணத்துக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களும் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது பலரும் மறந்துவிட்ட செய்தி.

1978 ஆம் ஆண்டில் டில்லியில் கீதாசோப்ரா, சஞ்சய் சோப்ரா எனும் இரு குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்பட்டனர். போலீஸ் தேடுதல் வேட்டையில் மூன்று நாட்களுக்குப் பின் அக்குழந்தைகளின் உயிரற்ற  உடல்கள் மட்டுமே  கிடைத்தன. பில்லா, ரங்கா எனும் இருவர் அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டனர். 1990 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் 14 வயதுச் சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக, தனஞ்சய் சட்டர்ஜி என்பவன்  தூக்கிலேற்றப்பட்டான்.

2005 -2006 ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகே உள்ள நோய்டாவில் ஒரு வீட்டிலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள எட்டுக் குழந்தைகளைக் கொன்றதாக அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டட ஸுபாஷ்  வாக்குமூலம் கொடுத்திருந்தான்

தமிழ்நாட்டில் சமீப காலத்தில் குழந்தைகள் கடத்தல் அன்றாடச் செய்தி ஆகின்ற அளவுக்கு அதிகமாக நடக்கின்றது. அக்டோபர் 29 ஆம் தேதி கோவையில் பள்ளிக் குழந்தைகள் முஸ்கனும் ரித்தீஸும் கடத்தப்பட்டனர்.

நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்டான். ஆறு மாதங்களுக்கு முன் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரின் தம்பி மகனையே பணத்திற்காகக் கடத்திச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது. சட்டமன்றத்தின்  காங்கிரஸ் உறுப்பினர் பாளை அமரமூர்த்தியின் தம்பி மகனான ஒன்பதாம் வகுப்பு மாணவன் தர்மதுரையைக் கடத்திச் சென்று ஐம்பதுலட்சம் ரூபாய் பணயத் தொகை கேட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் மாணவன்  மீட்கப்பட்டான் "ஐம்பது லட்சம் ரூபாயைப் பெற்ற பின் சிறுவனைக் கொன்றுவீசி விட்டுத் தப்பிக்கத்  திட்டமிட்டிருந்தோம் "என இக்கடத்தலில் கைது செய்யப்பட்ட டிரைவர் போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்தான்.

ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப் பட்டுப் பணத்துக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பில்லா, ரங்காவிலிருந்து கீர்த்திவாசனைக் கடத்திய பட்டதாரிகளான விஜய்யும் பிரபுவும் கொடுத்த வாக்குமூலமும் தர்மதுரையைக் கடத்திய டிரைவர் மனிகண்டனின் வாக்குமூலமும் இதை நிரூபிக்கின்றன.

பள்ளிக் குழந்தைகள் வாகன விபத்தில் இறக்கின்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துவிட்டால் அரசு உடனே பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிச் சட்டம் இயற்றியோ ஆணை பிறப்பித்தோ நடவடிக்கை எடுத்ததாகக் காட்டிக்கொள்ளும். கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் 94 குழந்தைகள் எரிந்து சாம்பலான பின்புதான் அரசு விழித்துக் கொண்டு பள்ளிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக ஆணை பிறப்பிக்கிறது. இதோ இப்போது அடுத்தடுத்துக் குழந்தைக் கடத்தல் நடந்தபின் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீடியா வெளிச்சமும் செய்திப்பரபரப்பும் உருவாக்கும் ஆவேசம் சில நாட்களில் முடிந்து விடும்; மக்களும் அடுத்த பரபரப்பான செய்தி வரும்போது பழையதை மறந்து விடுவர்.

பணத்திற்காகக் குழந்தைகளைக் கடத்துவதற்கும் பாலியல் வன்கொடுமை புரிவதற்கும் குற்றவாளிகளைத் தூண்டுவதில் திரைப்படங்களுக்கும் பங்கு இருக்கிறது. இயக்குநர் மிஸ்கீன் வெளியிட்ட 'அஞ்சாதே' திரைப்படம் இதைத்தான் கூறியது. “நல்ல படம்" என மக்கள் பார்த்து ரசித்தனர். ஆனால் மிஸ்கீனோ தாம் எடுத்தவற்றுள் “கீழ்த்தரமான படம்” என அப்படத்தைப் பற்றிக் கருத்துக் கூறியிருந்தார். குற்றவாளிகளைக் கூட ஹீரோவாகப் பார்க்கும் ரசிக மனோபாவம் நம்மிடம் இருக்கிறது. குழந்தைகளைக் கடத்திக் கொன்ற கேவலமான கொடிய குற்றவாளிகளான ரங்கா, பில்லாவின் பெயர்களில் சுடச்சுட  தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் திரைப்படங்கள் வெளிவந்து பணத்தைக் குவித்தன. திரைப்படங்களில் ரவுடி / தாதாக் கதாநாயகன் செய்யும் குற்றச் செயல்களை ரசிக்கிறோம்; பரபரப்பாக வழங்கப்படும் செய்திகளில் வரும் குற்றச் செயல்களைக் கண்டு கொதிக்கிறோம்; குதிக்கிறோம். இது இரட்டை மனோபாவம்.

டாக்டர் ரூபையா, நடிகர் ராஜ்குமார், இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள், அமைச்சர் நாகப்பா போன்றோரின் கடத்தலுக்குக் கொடுத்த முக்கியத்துவத் தையும் அவர்களை மீட்கக் காட்டிய தீவிரத்தையும் அரசு தன் ஊழியர்களான காவலர்களை மீட்பதற்குக் காட்டவில்லை.

இம்மாதம் 6 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விசுனம்பேட்டை காலனி தெருவைச் சேர்ந்த ஏழை விவசாயியின் மகளான ஐந்தாம் வகுப்பு மாணவி கீர்த்திகா கொலை செய்யப்பட்டாள். கோவை, சென்னை போன்ற மாநகரங்களில் வாழும் பெரு வணிகர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டது  ஊடகங்களின்  கவனத்தை ஈர்த்தது; பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது! ஏழைச் சிறுமியின் கொலை மக்களிடம் ஆவேசத்தையோ கொதிப்பையோ  ஏற்படுத்தவில்லை

மனிதர்களின் உயிர் விலைமதிக்கவொண்ணாதது. வி.ஐ.பி.யின் உயிருக்கும் ஏழையின் உயிருக்கும் இடையே வேறுபாடு காட்டும்  அரசும் ஊடகங்களும  பொது மக்களும் வி.ஐ.பி.களின்  கடத்தலுக்கும் கோவை குழந்தைகளின் கொலைக்கும் சென்னை மாணவன் கடத்தலுக்கும் அளித்த முக்கியத்துவத்தை மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட நான்கு  போலீஸ்காரர்களின் கடத்தலுக்கும் சிறுமி  கீர்த்திகா  கொலைக்கும் தரவில்லை என்பது அனைவரின் இரட்டை முகத்தை  வெளிப்படுத்தும் சான்றாகும். சமூகப்  பொருளாதாரக் கல்வி ஏற்றத்தாழ்வு நோக்காமல் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளிப்பது நம் கடமை என அனைவரும் உணரும் நாள் எந்நாளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக