எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்கினாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் துணை நின்றவர் காம்ரேட் கல்யாணசுந்தரம் ஆவார். ஆட்சியில் இருந்த கருணாநிதி, அ தி மு கவை, காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்காக ஓர் இடைக்காலத் தங்குமிடம் எனும் பொருளில், 'ஒட்டுகாங்கிரஸ்' என்றே அழைத்து வந்தார். தனிக்கட்சியின் மக்கள் ஆதரவை அறிந்து கொள்ளவும் தம் செல்வாக்கைக் கருணாநிதிக்கு நிரூபிக்கவும் எம் ஜி ஆருக்கு ஒரு வாய்ப்பாக வந்தது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்.மக்களவையில் தி மு க வின் உறுப்பினராக இருந்த ராஜாங்கம் இறந்து விட்டதைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் நடந்த தேர்தலில் எம் ஜி ஆர் நிறுத்திய அ தி மு க வேட்பாளர் மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம் ஜி ஆருக்குத் தம் செல்வாக்கின் மீது நம்பிக்கை வந்தது. அடுத்து, காம்ரேட் பாலதண்டாயுதம் விமான விபத்தில் இறந்ததால் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வலது கம்யூனிஸ்ட் வேட்பாளார் பார்வதிகிருஷ்ணனை வெற்றிபெறச் செய்ததால் எம் ஜி ஆரின் அரசியல் செல்வாக்கு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. 1974 ஆமாண்டு நடந்த பாண்டிச்சேரி மக்களவைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் பாலா பழனூர் வெற்றி பெற்றார். எம் ஜி ஆருக்கும் அவரது கட்சிக்கும் மக்கள் அளித்த ஆதரவும் அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் நிரூபிக்கப்பட்டன. 1977 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், வலது கம்யூனிஸ்ட், இந்திரா காங்கிரஸ் கூட்டணியுடன் எளிதாக ஆட்சியைப் பிடித்தார்.
எம் ஜி ஆருடன் கதாநாகியாகத் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி, அவருடன் நெருங்கிய தொடர்பும் வைத்திருந்த ஜெயலலிதா, எம் ஜி ஆர் ஆட்சியைப் பிடித்த ஐந்தாண்டுகளுக்குப் பின் அ.தி.மு.கவில் தம்மை இணைத்துக் கொண்டார். ஓராண்டு நிறையும் முன்பே -1983 ஜனுவரியில்- கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எம் ஜி ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா அடுத்த ஆண்டே நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டார்.
எம் ஜி ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெறும்போது நடைபெற்ற 1984 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அ தி மு கவுக்காகப் பிரச்சாரம் செய்த போதும் ஆர் எம் வீரப்பன், பொன்னையன், காளிமுத்து, முத்துசாமி போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை ஏற்றுக் கொள்ளவில்லை. சேலம் கண்ணன், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமிப் பாண்டியன் போன்றோர் ஜெயலலிதாவுக்குத் துணைநின்றனர். பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் படுகொலை நிகழ்ந்த காலகட்டத்தில் நடந்த அத்தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த அ தி மு க வென்று எம் ஜி ஆர் மீண்டும் முதல்வரானார்.எம் ஜி ஆர் நோயுடன் போராடிக்கொண்டிருந்தாலும் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறப்பதுவரை அவரே தமிழக முதல்வராக இருந்தார்.
தாமும் சேர்ந்து உழைத்து, வளர்த்து ஆட்சியில் அமர்த்திய ஒரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தனிக்கட்சி உருவாக்கி ஓராண்டுக்குள் தேர்தலில் வென்று, ஐந்தாண்டுகளில் ஆட்சியையும் பிடித்த எம் ஜி ஆரின் சாதனைக்குத் துணை நின்றது எம் ஜி ஆரின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே!
அந்த மக்கள் நம்பிக்கை எம் ஜி ஆரின் வாரிசாகக் கட்சியையும் ஆட்சியையும் பிடித்த ஜெயலலிதாவின்மேல் இருக்கிறதா?
எம் ஜி ஆரின் மறைவைத் தொடர்ந்து, அவரின் மனைவி ஜானகி தமிழக முதல்வரானதும் அ இ அ தி மு க ஜா அணி, ஜெ அணி எனப்பிரிந்ததும், 1988 ஆம் ஆண்டு ஜானகியின் ஆட்சி கலைக்கப்பட்டதும் சரியாக அடுத்த ஓராண்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும் விரைவாகவே நடந்தேறின.
எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியின் வெற்றிச் சின்னமான இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, சேவல், இரட்டைப்புறா என இரு சின்னங்களில் ஜெ அணியும் ஜா அணியும் போட்டியிட்டதால் கருணாநிதி எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஜெயலலிதா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இரு அணிகளும் இணைந்தன. கட்சியில் பொதுச்செயலாளராகவும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது ஜெயலலிதாவால் எழுதப்பட்டது என நம்பப்பட்ட பதவி விலகல் கடித நகலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். உண்மையிலேயே அரசியலை விட்டு ஒதுங்கும் ஆர்வம் இருந்திருந்தால்கூட இயல்பிலேயே பிடிவாத குணமும் மோதிப்பார்க்கும் தீவிரமும் கொண்ட ஜெயலலிதா, இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். அப்போதிலிருந்து அரசியலையும் தாண்டிக் கருணாநிதியைத் தமது எதிரியாகக் கொண்டார்.
1989 மார்ச் 25 ஆம் தேதி சட்டசபையில் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவரது கையில் இருந்து பட்ஜெட் உரை பறிக்கப்பட்டது. சபையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவும் அவரது சேலையை உருவ முயன்றதாகவும்கூட அப்போது அ தி மு க வினரால் புகார் கூறப்பட்டது. ''இனிமேல் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்; தமிழ்நாட்டின் முதல்வராகத்தான் சபையில் நுழைவேன்'' எனச் சபதம் செய்து, 1991ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார்.
கருணாநிதி செய்த இரண்டாவது தவறின் விளைவு இது.
எம் ஜி ஆரைக் கட்சியில் இருந்து நீக்கிய முதல் தவறைக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனையோடும் செயற்குழு, பொதுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலோடும் செய்த கருணாநிதி, ஜெயலலிதாவின் பதவி விலகல் கடிதத்தை வெளியிட்ட இரண்டாவது தவறைத் தாமாகவே செய்தார்.
தமிழக மக்கள் எம் ஜி ஆரின் மீது வைத்திருந்த அளவு நம்பிக்கையை ஜெயலலிதா மீது வைத்திருந்ததால் அவர் தமிழக முதல்வரானார் என்று பொருள்கொள்ளக் கூடாது.
மத்திய அரசு தந்த உளவுத் தகவல்கள் விடுதலைப்புலிகளுக்குத் தரப்பட்டது என்ற புகாரின் பேரில், மாநில ஆளுநரின் அறிக்கையின்றியே 1989 ஆம் ஆண்டு அமைந்த கருணாநிதியின் ஆட்சி அப்போதைய பிரதமர் சந்திரசேகரால் 1991 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
அவ்வாண்டில் நடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணி வென்று ஜெயலலிதா முதல்வரானார்.
எம்ஜிஆரின் பெயரும் இரட்டை இலைச் சின்னமும் ராஜீவ் மரணமும் ஒன்றுபட்ட அ.இ அ.தி.மு.கவும் சேர்ந்து உருவாக்கிய சூழ்நிலையால் முதல்வரான ஜெயலலிதா மக்களிடமிருந்து விலகியே இருந்தார். முதல்வரைச் சக அமைச்சர்கள் சந்திக்க முடியாது; பொதுச்செயலாளரான அவரைக் கட்சித்தலைவர்கள் சந்திக்க முடியாது. கட்சியிலும் அரசியலிலும் அவரை விடவும் மூத்தவர்களும் கூட காக்க வைக்கப்பட்டனர். முதல்வர் சாலையில் வருவதற்கு முன்பே மணிக்கணக்கில் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் காலில் விழவைக்கப்பட்டனர். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் நடந்தது. மக்களின் மவுனப்புரட்சியால் அ இ அ தி.மு,க அடுத்துவந்த 1996 தேர்தலில் ஆட்சியை இழந்ததோடு ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.தொடக்கம் (தொடர்கிறது ...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக