சனி, 12 பிப்ரவரி, 2011

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் விசித்திரம்

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனப் பாரதி சொன்னதில் முற்பாதியைக் கண்டுகொள்ளாமல் பிற்பாதியை ஊக்குவித்ததால் இன்று விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். விதைகளுக்கும் பூச்சிமருந்துக்கும் உரத்துக்கும் விலையேற்றம், பாசனத்துக்கு நீர் வரத்து இல்லை, மின்வெட்டு, வறட்சி, புயல், மழைவெள்ளப் பெருக்கு, இவற்றைச் சமாளித்து அறுவடை செய்தால் விளைபொருளுக்கு ஏற்ற விலையில்லை எனப் பல்வேறு சங்கடங்களைச் சந்திக்கிறான் விவசாயி.

நாட்டின் முதுகெலும்பான பயிர்த் தொழில் செய்பவனை அந்நியச் செலாவணிக்காக அழியவிட்டுக் கொண்டிருப்பது என்ன நியாயம்?
பின்னலாடைத் தொழிலில் கடந்த முப்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்த திருப்பூர் இன்று ஆண்டுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் அளவு செழித்து, 'டாலர்சிட்டி' என அழைக்கப்படுகிறது. பின்னலாடைத் தொழிலில் வண்ண ஆடைகள் ஏற்றுமதி தொடங்கிய பிறகு, அதைச் சார்ந்த சாயப்பட்டறைகள் உருவாயின. துவக்கத்தில் இலகு வண்ணங்கள் ஏற்றப்பட்டு வந்த பின்னலாடைகள் காலப்போக்கில் பெரிதான விற்பனைத் தேவைக்கேற்ப அடர் வண்ணங்கள் ஏற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போதிருந்தே சாயக் கழிவுகளான இரசாயனங்களும் அமிலங்களும் உப்பும் சேர்ந்து ஆற்று நீரை மாசுபடுத்தி விஷமாக்கி விட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக